194. பக்குடுக்கை நன்கணியார்

      இந் நன்கணியார்  பெயரை யடுத்துச்  சிறப்பிக்கும்  பக்குடுக்கை
யென்பது இவரது ஊர்ப் பெயராகவும் என்றும், பக்கு  என்பது பையென்னும்
பொருள் படுதலின்; இவர் பையையே உடையாக வுடுப்பவரென்றும் அறிஞர்
கருதுகின்றனர். ஒருவருக்கு உடுப்பவை இரண்டாக வேண்டி யிருப்பவும்,
ஒன்றையே    இரண்டாகப்   பகுத்துடுக்கும்  காரணத்தால்   பக்குடுக்கை
நன்கணியா  ரெனப்பட்டா   ரென்றற்கும்,   ஒருவரது   வறுமை நிலையைப்
பக்குடுக்கை  யெனச் சிறப்பித்துரைத்த நலம் கண்டு, சான்றோர் இவரை
இவ்வாறு  சிறப்பித்துப்   பாராட்டினர்   என்றற்கும் இடனுண்டு. நன்கணி
யென்பது இவர தியற்பெயர்.

      இவர் காலத்தே நாட்டில் வாழ்ந்த வேந்தர்கட்கும் ஏனைச் செல்வர்
கட்கும் உலக வாழ்வில் பெரு விருப்பந் தோன்றி, “மெய்வலி யுடையார்க்கே
இவ்வுலகம் உரியது; உலகத்திற் பிறந்தா ரனைவர்க்கும் பொதுவென்பது.
பொருந்தாது”என்றும், “அவ் வலியைக் கெடாது பேணிக் கொள்ளற்குச்
செல்வம் இன்றியமையாமையின், செல்வந் தேடுவது வலியுடையார்க் கேற்ப,
தென்றும் கருதி, அவற்றிற்கேற்ப நாளும் போரும் பொருளீட்டமுமே
நினைந்தொழுகப் பண்ணிற்று. இதன் விளைவாக நாட்டில் இன்ப வாழ்வுக்
கிடனில்லையாயிற்று. இதனைக் கண்டார் நம் பக்குடுக்கை நன்கணியார்.
“இவ்வுலகம் இனிதன்று; ஒரு மனையில் சாப்பறை முழங்க, ஒரு மனையில்
மணப்பறை முழங்குகிறது. ஒருத்தி பூவணியாற் பொற்புற்று விளங்க, ஒருத்தி
கணவனைப் பிரிந்து கண் கலங்கி நிற்கிறாள். இவ்வா றமையுமாறு
இவ்வுலகினைப் படைத்தவன் பண்பறிந் தொழுகும் பாடில்லாதவ னெயாவன்.
இவ்வுலகில் இத்தன்மையை யறிந்தவன் இதனிடையே கிடந்து உழல
வேண்டுமென்பதன்று. இதனிற் சிறந்த இன்ப வுலகத்து இன்ப வாழ்வு
காண்டலை வேண்டியவனாவான்”என இப் பாட்டால் வற்புறுத்தலானார்.

 ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பனிவார் புறைப்பப்
5படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
 இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்கித னியல்புணர்ந் தோரே.
(194)

     திணை: அது. துறை: பெருங்காஞ்சி. பக்குடுக்கை நன்கணியார்
பாடியது.

     உரை: ஓர் இல் நெய்தல் கறங்க - ஒரு மனையின்கண்ணே
சாக்காட்டுப் பறை யொலிப்ப; ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி
ததும்ப - ஒரு மனையின்கண்ணே மணத்திற்குக் கொட்டும் மிகக்
குளிர்ந்த முழவினது ஓசை மிக வொலிப்ப; புணர்ந்தோர் பூ அணி
அணிய - காதலரோடு கூடிய மகளிர் பூவணியை யணிய; பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப - பிரிந்த மகளிரது
வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர் வார்ந்து துளிப்ப;
படைத்தோன் மன்ற - இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப் படப்
படைத்தான் நிச்சிதமாக; அப்பண்பிலாளன் - அப்
பண்பில்லாதோனாகிய நான்முகன்; இன்னாது அம்ம இவ்வுலகம் -
கொடிது இவ்வுலகினது இயற்கை; இதன்  இயல்பு உணர்ந்தோர்
இனிய காண்க - ஆதலான் இவ்வுலகினது தன்மை யறிந்தோர்
வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கைகளை அறிந்து செய்து கொள்க
எ-று.

     காண்க வென்பது காண்கெனக் குறைக்கப்பட்டது. இதன் இயல்
புணர்ந்தோர் இவ்வின்னாமையை இனியவாகக் காண்க வென்றுரைப்பினு
மமையும்.

     விளக்கம்: மணவொலி  கேட்பார்க்கு  இன்பமும்   குளிர்ச்சியும்
பயப்பதாகலின், “ஈர்ந்தண் முழவின் பாணி”யென்றார். பாணி, ஈண்டு இனிய
ஓசை  யென்னும்   பொருளதாயிற்று.  நெய்தற்  பறைகேட்டார்க்கு
வருத்தம் பயத்தலின்,   வாளா  நெய்தலென்  றொழிந்தார்.  படைத்தான்
என்ற வினைமுற்றின் ஈற்றயலாகாரம் செய்யுளாகலின் ஓகாரமாயிற்று.
‘பிறப்பொக்கும்எல்லா  வுயிர்க்கும்’  என்பது  பற்றி,   எல்லார்க்கும்  
ஒரு  தன்மைப்பட அமைக்காது  வேறுபட  வமைத்தமையின்
நான்முகனைப் “பண்பிலாளன்”என்றார். சுட்டு, உலகறி சுட்டு.