55. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

     இப் பாண்டியன், இலவந்திகைப் பள்ளிக்கண் இறந்ததுபற்றிப் பிற்காலச்
சான்றோரால் இவன் இவ்வாறு கூறப்படுகின்றான். இவன் மிக்க பேராண்மை
யுடையவன்; இவனைப் பாடிய சான்றோர் பலரும் இவனுடைய போர்
வன்மை முதலிய பேராற்றல்களையே பெரிதெடுத்து மொழிந்திருக்கின்றனர்.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வல்லா ராயினும் வல்லுந
ராயினும், புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன, உரைசால் சிறப்பின் புகழ்
சால் மாற” என்றும், நக்கீரனார், “ஓங்குவாள் மாற” என்றும்
பாராட்டியிருக்கின்றனர். ஒருகால் இவனை ஆவூர் மூலங் கிழாரும், வடம
வண்ணக்கன் பேரிசாத்தனாரும் தனித் தனியே காணச் சென்றபோது
அவர்கட்கு இவன் பரிசில் தர நீட்டித்தான். அதுகண்டு அவர்கள் வெகுண்டு
பாடியன மிக்க பெருமிதம் தோற்றுவிப்பனவாகும். இவன் புதல்வர் பலரை
யுடையவன்: “நோயிலராக நின் புதல்வர்” என ஆவூர் மூலங் கிழாரும்,
“நின்னோ ரன்ன நின் புதல்வர்” என வடம வண்ணக்கன் பேரிசாத்
தனாரும் இவன் மக்கள் நலத்தைக் குறித்துரைப்பது நோக்கத்தக்கது.

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
5.பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
10. அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
15. வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
20. கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே. (55)

     திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார்
பாடியது.


     உரை: ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
-உயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்
கொளுத்தி; ஒரு கணைகொண்டு மூவெயில் உடற்றி - ஒப்பில்லாததோ
ரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து; பெரு விறல் அமரர்க்கு -
பெரிய வலியையுடையதேவர்கட்கு; வென்றி தந்த - வெற்றியைக்
கொடுத்த; கறை மிடற் றண்ணல்- கரிய நிறஞ் சேர்ந்த
திருமிடற்றையுடைய இறைவனது; காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல - அழகிய திருமுடிப் பக்கத்
தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு
நயனம் போல; வேந்து மேம்பட்ட பூந் தார் மாற - மூவேந்த
ருள்ளும் மேம்பட்ட பூந்தாரை யுடைய மாற, கடுஞ்சினத்த கொல்
களிறும் - கடிய சினத்தை யுடையவாகிய கொல் களிறும்; கதழ் பரிய
கலி மாவும் விரைந்த செலவை யுடையவாகிய மனஞ் செருக்கிய
குதிரையும்; நெடுங் கொடிய நிமிர் தேரும் - நெடிய கொடியை
யுடையவாகிய உயர்ந்த தேரும்; நெஞ்சுடைய புகல் மறவரு மென -
நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென; நான்குடன்
மாண்டதாயினும் - நான்கு படையுங் கூட மாட்சியைப்பட்டதாயினும்;
மாண்ட அறநெறி முதற்று அரசின் கொற்றம் - மாட்சிமைப்பட்ட
அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி;
அதனால்-; நமர் எனக் கோல் கோடாது - இவர் நம்முடைய ரென
அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது;
பிறர் எனக் குணம் கொல்லாது - இவர் நமக்கு அயலோ ரென்று
அவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற் றன்ன வெந் திறல்
ஆண்மையும் - ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்;
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும் - திங்களைப் போன்ற
குளிர்ந்த பெரிய மென்மையும்; வானத் தன்ன வண்மையும் -
மழையைப் போன்ற வண்மையுமென்ற; மூன்று முடையை யாகி -
மூன்றையு முடையையாகி; இல்லோர் கையற - இல்லாததோர்
இல்லையாக; நீ நீடு வாழிய - நீ நெடுங் காலம் வாழ்வாயாக; நெடுந்
தகை - நெடுந் தகாய்; தாழ் நீர் வெண்டலைப் புணரி அலைக்கும்
செந்தில் - தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய
தலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடு வேள்
நிலைஇய - நெடிய முருகவேள் நிலைபெற்ற; காமர் வியன் துறை -
அழகிய அகன்ற துறைக்கண்; கடுவளி தொகுப்ப - பெருங் காற்றுத்
திரட்டுதலால்; ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பல - குவிந்த
வடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் எ-று.

     குணம் கொல்லாது என்பதற்கு, முறைமை யழிய நீ வேண்டியவாறு
செய்யா தெனினுமாம். பூந் தார் மாற, நெடுந்தகாய், நான்குடன்
மாண்டதாயினும் அரசின் கொற்றம் அறநெறி முதற்கு; அதனால் கோல்
கோடாது குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையு
முடையையாகி இல்லோர் கையற நீ மணலிலும் பலகாலும் நீடு வாழிய
வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     விளக்கம்: கொளீஇ - கொளுத்தி; கொள்வித் தென்பது கொளுத்தி
யென வந்தது; வருவித் தென்பது வருத்தி யென இன்றும் வழங்குவது போல
வென்க. மூவெயில், மூன்றாகிய மதில்; பொன் வெள்ளி இரும்பெனப்
புராணங்கள் கூறும். ஓரம்பே கொண்டு மூவெயிலும் எய்தாரென வரலாறு
கூறலின், “ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றி” யென்றார். “கறைமிட
றணியலு மணிந்தன்று” என்ற விடத்துக் கறை கறுப்புநிறங் குறிப்பதாக உரை
கூறினமையின் ஈண்டும் கறைமிடற்றண்ணல் என்றதற்குக் கரிய நிறஞ்
சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவன் என்று உரை கூறினார். வேந்தெனப்
பொதுப்படக் கூறினமையின் மூவேந்தரையும் கொண்டார். நெஞ்சுடைய புகல்
மறவர் என்ற விடத்துப் புகல்வது விரும்புத லென்னும் பொருளதாகலின்,
அதற்கேற்பப் போரை விரும்பும் மறவர் என்றார்; “போரெனிற் புகலும்
புனை கழல் மறவர்” (புறம்:31) எனப் பிறரும் கூறுதல் காண்க. நம ரெனக்
கோல் கோடுவது இவ்வா றென விளக்கவேண்டி, இவர்
நம்முடையரென.......பொறுத்து”க் கொள்ளுவது என்பது தோன்ற விரித்துக்
கூறினார். சாயல், மென்மை கையற இல்லையாக; இல்லோர்க்கு
இடமில்லையாக; கை, இடம். இடமில்லாமையாவது இன்மையுடையோர்
இலராய் எல்லோரும் செல்வராக என்பதாம். செந்தில், திருச்செந்தூர், நுண்
மணற் குவை திரை திரையாகத் திரைத்துத் தோன்றுவது பற்றி, “வடுவாழ்
எக்கர்” எனப்பட்டது.