110.வேள் பாரி

     தமிழ்    வேந்தர்  மூவரும்    பாரியின்   பறம்பைத்   தம்
பெரும்படையுடன் போந்து முற்றிக்கொண்ட காலையில், கபிலர், அவர்க்குப்
பாரியின் போராண்மையும் கை வண்மையும் எடுத்தோதுவாராய், “நீவிர்
மூவிரும் கூடிச் சூழ்ந்தாலும் பாரியை வென்று அவன் பறம்பினைக்
கைக்கொள்வது முடியாது; பறம்பு நாடு முந்நூறு ஊர்களை யுடையது;
அம்முந்நூறூர்களையும்பரிசிலர் அவனைப் பாடித் தமக்குரிமை
செய்துகொண்டனர். இனி அவனும் யாமுமே யுள்ளோம்; நீவிரும்
அவர்போலப் பாடி வருவீராயின், எம்மையும் பெறலாம்; எஞ்சி நிற்கும்
இப்பறம்பு மலையினையும் பெறலாம்”என்று கூறுகின்றார்.

 கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே
முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்
5யாமும் பாரியு முளமே
குன்று முண்டுநீர் பாடினிர் செலினே.  (110)

     திணையுந் துறையு மவை. மூவேந்தரும் பறம்பு முற்றிருந்தாரை
அவர் பாடியது.

     உரை; கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனி
ராயினும் - வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் படையினையுடைய

மூன்று  திறத்தீரும்  கூடிப் பொருதீ  ராயினும்; பறம்பு கொளற்கு
அரிது - பறம்பு கொள்ளுதற்கு அரிது; முந்நூறு ஊர்த்து தண் பறம்பு
நன்னாடு - முந்நூறு ஊரை யுடைத்து குளிர்ந்த நல்ல பறம்பு நாடு;
அம் முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்-; நீர் பாடினிர் செலின் -
நீயிர் பாடினிராய் வரின்; யாமும் பாரியும் உளம் - நுமக்கு யாமும்
பாரியும் உள்ளேம்; குன்றும் உண்டு - அதுவேயன்றி மலையும்
உண்டு  எ-று.

     நீர் பாடி வரினும் பறம்பு நாடு பரிசிலர் முன்னே பெற்றமையின்,
அது நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக் கொள்க.

     விளக்கம் : நாடு வேண்டிப் பொருவதிற் பயனில்லை; அந்நாட்டு
ஊர் முந்நூரும் பரிசிலர்க் குரியவாய்விட்டன; எஞ்சி நிற்பது
குன்றமொன்றே; அதனை நும்மூர்க்குக் கொண்டு செல்ல முடியாது. வேள்
பாரியோடு யானும் என்போலும் புலவர்களுமே நும்மாற் கொண்டு
செல்லத்தக்க நிலையில் உள்ளோம். எம்மால் நுமக்காவதோர்
செயலுமில்லை; ஆதலால், நீவிர் மீண்டு செல்வதே தக்கது என்று இகழ்ந்து
கூறியதுமாம். இரவலரைப் புரக்கும் இயல்பினராகிய மூவேந்தரும் இழிந்த
செயலாகிய இரவலர் செயலைச் செய்ய விரும்பாரெனக் கபிலர் எண்ணி
ஏமாற்றமடைகின்றார். கபிலர் கூறியது போலவோ, அது போல்வதொரு
சூழ்ச்சியினையோ அவர்கள் செய்து பாரியைக் கொன்றனர் என்ப.