127. வேள் ஆய்

     வேளிர் குலத்துப் பாரிபோல ஆயும் வேளிர் குலத்தவன். இவன்
பொதியின் மலையடியிலுள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு
அரசு முறை புரிந்தொழுகிய குறுநில மன்னன். இவன் ஆய்
அண்டிரனென்றும் சான்றோராற் பாராட்டப்படுகின்றான். அண்டிரன்
என்னும் சொற்குப் பொருள் விளங்கவில்லை. நற்றிணை யுரைகாரரான
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் “அண்டிரனென்பது ஆந்திரனென்னும்
தெலுங்கச் சொல்லின் திரிபாதலின் இவன் தெலுங்க நாட்டின னெனவும்,
அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிரைக் கொணர்ந்தா
ரென்றிருத்தலானே இவன் அவராற் கொண்டுவரப்பட்ட வேளிர் மரபின
னெனவுங் கூறுவ” ரென்பர். தெலுங்கர்க்குரிய ஆந்திர ரென்னும் சொல்
பிற்காலத்திற் காணப்பட்ட தாதலின், அண்டிர னென்பது ஆந்திர
னென்பதன் திரிபென்றல் பொருந்தாது. அகத்தியனாற்கொண்டு வரப்பட்ட
குடியினனாயின், இவனைப் பாடிய சான்றோர் அதனைக் குறிக்காமையின்,
அக் கூற்றும் ஏற்கற்பாலதன்று. இவனுடைய கைவண்மையும் போராண்மையும்
சான்றோர்களாற் பெரிதும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. இவனுக்கும்
கொங்கருக்கும் ஒருகால் போருண்டாயிற்று. அப்போழ்து இவன் கொங்கரை
வென்று அவர் குட கடற்கரையிடத்தே யோடி யொளிக்குமாறு பண்ணினன்.
தமிழகத்தின் தெற்கின் கண்ணதாகிய பொதிய மலையும் ஆய் குடியும், அம்
மலைக் குழுவிலுள்ள கவிர மலையும் புலவர் பாடும் புகழ் படைத்தவை
யாகும். இவனை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார்,
குட்டுவன் கீரனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், பரணர்,
காரிக் கண்ணனார் முதலிய சான்றோர் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர்.
இவருள் இவனைப் பல படியாலும் பாராட்டிப் பாடியுள்ளவர் உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் ஆவர்; “திருந்துமொழி மோசி பாடிய ஆயும்”
(புறம். 158) எனப் பெருஞ்சித்திரனார் கூறுவது காண்க; இவன் பரிசிலர்க்கு
மிக்க பரிசில் வழங்க அவர்கள் அதனைப் பெற்றுச் செய்யும் ஆரவாரத்தை
விதந்தோதும் “கருங்கோட்டுப் புன்னை” யென்று தொடங்கும் நற்றிணைப்
பாட்டை (167)ப் பாடிய ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இவருட்
பரங்கொற்றனார், “அரண்பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்,
சுடர் மணிப் பெரும்பூண் ஆஅய்” (அகம். 69) என்றும், பரணர், இவன்
நாட்டுக் கவிரத்தைச் சிறப்பித்து, “தெனாஅது, ஆஅய் நன்னாட்
டணங்குடைச் சிலம்பிற், கவிரம் பெயரிய உருகெழு கவான்” (அகம். 168)
என்றும், காரிக்கண்ணனார், “வியப்படை இரவலர் வரூஉம் அளவை
அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை” (நற். 237) என்றும்
பாடியுள்ளனர். ஏனையோர் பாட்டுக்கள் இந்நூற்கண் வந்துள்ளன.

     ஆசிரியர் ஏணிச்சேரி முடமோசியார், ஏணிச்சேரி யென்னும் ஊரினர்.
இஃது உறையூரின் பகுதியாகும். மோசி யென்பது இவரது இயற்பெயர். மோசி
குடி யென்னும் ஓர் ஊரும் உண்டு. அவ்வூர் மதுரைமாநாட்டுக்
கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. தொல்காப்பிய வுரைகாரர் இவரை
அந்தணராகக் கொள்வர். இவர் இப் பாட்டின்கண், “பிறர்க் கீயாது தாமே
தமித்துண்டு தம் வயிறு நிரப்பும் ஏனைச் செல்வர் மனைகளிற் காணப்படும்
ஆரவாரமும் பொலிவும், தன்பாலுள்ள களிறனைத்தையும் இரவலர்க்கு நல்கி
இழையணிந்த மகளிரொடு புல்லிதாய்த் தோன்றும் ஆய் அண்டிரனது
திருமனைக்கண் காணப்படா” என ஆயினது கொடை நலத்தைச்
சிறப்பித்துள்ளார்.

 களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
5ஈகை யரிய விழையணி மகளிரொடு
 சாயின் றென்ப வாஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசா லோங்குபுக ழொரீஇய
10முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.  (127)

     திணை : அது. துறை : கடைநிலை. ஆயை உறையூர்
ஏணிச்சேரி  முடமோசியார் பாடியது.

     உரை : களங் கனியன்ன கருங் கோட்டுச் சீறியாழ் -
களாப்பழம் போலும் கரிய கோட்டை யுடைத்தாகிய சிறிய யாழைக்
கொண்டு; பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென - பாடும் இனிய
பாட்டை வல்ல பாணர் பரிசில் பெற்றுக்கொண்டு போனார்களாக;
களிறு இலவாகிய புல்லரை நெடுவெளில் - களிறுகள் இல்லையாகிய
புல்லிய பக்கத்தையுடைய நெடிய தறியின் கண்ணே; கான மஞ்ஞை
கணனொடு சேப்ப - காட்டு மயில்கள் தத்தம் இனத்தோடு தங்க;
ஈகை அரிய இழையணி மகளிரொடு - பிறிதோர் அணிகலமு
மின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தை யணிந்த
மகளிருடனே; ஆஅய்கோயில் சாயின்று என்ப - ஆயுடைய
கோயிலைப் பொலிவழிந்து சாய்ந்ததென்று சொல்லுப; சுவைக்கு
இனிதாகிய குய்யுடை அடிசில் - நுகர்தற் கினிதாகிய
தாளிப்பையுடைய அடிசிலை; பிறர்க்கு ஈவு இன்றி- பிறர்க்கு
உதவலின்றி; தம் வயிறு அருத்தி - தம்முடைய வயிற்றையே
நிறைத்து; உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய - சொல்லுதற்கமைந்த
மேம்பட்ட புகழை நீங்கிய; முரைசு கெழு செல்வர் நகர் - முரசு
பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயில்; போலாது -
இதனை ஒவ்வாது எ-று.

     
என்றதன் கருத்து, செல்வர் நகர் பெருந் திரு வுடைமையின்
சிறந்ததுபோன் றிருப்பினும், ஆய் கோயில் வறிதெனினும், இஃது அதனினும்
சிறந்த தென்பதாம். ஆஅய் கோயில் சாயின் றென்ப; ஆயினும் முரசு
கெழு செல்வர் நகர் இதனை யொவ்வாதெனக் கூட்டுக.

     விளக்கம் : வெளில் - யானை கட்டுந்தறி. யானை கட்டுந் தறிகளில்
யானையில் வழி அவை பொலிவழிந்து தோன்றுமாதலின், “புல்லரை
நெடுவெளில்” என்றார். மகளிர்க்கு மங்கலவணி யொழியப் பிறவெல்லாம்
நீக்குதற்கும் உரியவாமாதலின், “ஈகை யரிய இழை” யென்றார். “உரைப்பா
ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன், றீவார்மேல் நிற்கும் புகழ்”
(குறள்.242) என்பவாகலின், பிறர்க்கீதலின்றித் தம் வயிறு நிறைக்கும்
வேந்தரை “உரைசால் ஓங்குபுக ழொரீஇய செல்வர்” என்றார்.