14. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்

     ஒருகால் கபிலரும் இக் கடுங்கோ வாழியாதனும்  ஒருங்கிருந்த
காலையின், இவ்வேந்தன் அவர் கையைப்பற்றி   “நுமது  கை   மிக
மென்மையாகவுளதே!” என வியந்து கூறினான்.அதுகேட்ட கபிலருள்ளத்தே,
அவன் கூற்றே கருப்பொருளாகப் பாட்டொன் றெழுந்தது. அதுவே
ஈண்டுக்காணப்படும் பாட்டு.

      இப்பாட்டின்கண், “அரசே, யானை யிவருமிடத்து அதன் தோட்டி
தாங்கவும், குதிரையைச் செலுத்துங்கால் அதன் குசை பிடிக்கவும், தேர்
மிசையிருந்து வில்லேந்தியவழி அம்பு செலுத்தவும்,பரிசிலர்க்கு அருங்கலம்
வழங்கவும் பயன்படுவதால் நின் கை வன்மையாக வுளது; என் போலும்
பரிசிலர் மெய்ம் முயற்சியின்றிப் பிறர் நல்கப்பெறும் சோறுண்டு வருந்து
தொழில் தவிர, தொழில் இலராதலால் அவர் கை மென்மையாக உளது
என்று கூறுகின்றார்.

 கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5. பாருடைத்த குண்டகழி
 நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10.பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
 வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவு நாற்றத்தை பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
15.பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
 மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14)

     திணை :அது.  துறை:  இயன்மொழி.  சேரமான்  செல்வக்
கடுங்கோ வாழியாதன் கபிலர்  கைப்பற்றி  “மெல்லிய  வாமால்
நுங்கை” எனக், கபிலர் பாடியது. 

  உரை: கடுங் கண்ண கொல் களிற்றால்-வன் கண்மையை யுடைய
கொலையானையாலே; காப்புடைய எழு முருக்கி - காவலையுடைய
கணைய மரத்தை முறித்து; பொன் இயல்  புனை  தோட்டி யான் -
இரும்பாற் செய்யப்பட்ட அழகு செய்த அங்குசத்தால்; முன்பு துரந்து
- முன்னர்க்  கடாவி; சமம்  தாங்கவும் - அது செய்யும் வினையைப்
பின்வேண்டுமளவிலே  பிடிக்கவும்; பார்  உடைத்த  குண் டகழி -
வலிய நிலத்தைக்  குந்தாலியால்  இடித்துச்   செய்த   குழிந்த
கிடங்கின்கண்;   நீரழுவ  நிவப்புக்  குறித்து - நீர்ப்  பரப்பினது
ஆழமாகிய  உயர்ச்சியைக்  கருதி  அதன்கட்  செல்லாமல்; நிமிர்
பரியமா  தாங்கவும் - மிகைத்த  செலவினையுடைய  குதிரையைக்
குசைதாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை -
அம்பறாத்தூணி பொருந்திய முதுகை யுடையையாய்; தேர் மிசை -
தேர்மேலே நின்று; சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும் -
வில்லினது வலிய நாணாற் பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச்
செலுத்தவும்; பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் - பரிசிலர்க்குப்
பெறுதற்கரிய அணிகலங்களை யளிக்கவும்; குரிசில் - தலைவ;
வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை - வலியவாகும் நின்
முழந்தாளைப் பொருந்திய பெரிய கைகள்; புலவு நாற்றத்த பைந்தடி
- புலால் நாற்றத்தை யுடையவாகிய செவ்வித் தடியை; பூ நாற்றத்த
புகை கொளீஇ - பூ நாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி; ஊன்
துவை கறி சோறு உண்டு - அமைந்த வூனையும் துவையையும்
கறியையும் சோற்றையும் உண்டு;வருந்து தொழில் அல்லது - வருந்தும்
செயலல்லது; பிறிது தொழில் அறியா ஆகலின் - வேறு செயலறியா
வாகலான்; தாம் நன்றும் மெல்லிய - அவைதாம் பெரிதும்
மெல்லியவாயின; பெரும-; நல்லவர்க்கு ஆரணங்காகிய மார்பின்
- பெண்டிர்கட்கு ஆற்றுதற்கரிய வருத்தமாகிய மார்பினையும்;
பொருநர்க்கு இருநிலத்தன்ன நோன்மை - பொருவார்க்குத்
துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையுமுடைய;
செரு மிகு சேஎய் - போரின் கண்ணே மிக்க சேயை யொப்பாய்;
நிற் பாடுநர் கை - நின்னைப் பாடுவாருடைய கைகள் எ-று.

     கொளீஇ யென்னு மெச்சம் அமைத்த வென்னும் ஒருசொல் வருவித்து
முடிக்கப்பட்டது; கொளுத்த வெனத் திரித்து அவ்வூன் என ஒரு சுட்டு
வருவித்து அதனொடு முடிப்பினு மமையும். உண்டென்பது பொதுவினை
யன்றேனும் கறி  யொழிந்தவற்றிற்கெல்லாம்  சேறலின்.   பன்மைபற்றி
அமைத்துக்கொள்ளப்படும். ஊன் துவை கறியொடு  கூடிய   சோற்றை
உண்டென  வுரைப்பினு   மமையும்.   இதனைப்   பொது    வினை
யென்றுரைப்பாரு முளர்.

     குரிசில், பெரும, சேஎய், வலியவாகும் நின் கை; நிற்பாடுநர் கை
தாம்  மெல்லியவாகும் எனக் கூட்டுக.

     இனி, மாதாங்கவும் என்பதற்கு அகழியைக் கடக்கப் பாய்தற்குக்
குதிரைக் குசையைத் தாங்கியெடுத்து விடவும் என்றுரைப்பாரு முளர்.
பாடுநரெனத் தம்மைப் படர்க்கையாகக் கூறினார். தம் கையின்
மென்மையது இயல்பு கூறுவார், அரசன் கையின் வலி இயல்புங்
கூறினமையான், இஃது இயன்மொழியாயிற்று.

     விளக்கம்: கடுங்கண் - வன்கண்மை. எழு-கணைய மரம். பொன்
- இரும்பு. சமம்- வேண்டும் அளவு. பார் நிலத்தை யுடைத்தற்குக் 
கருவியாகலின், குந்தாலியாலென வருவித்துரைத்தார். குறிப்பதன் பயன்,
அந்நீரழுவத்துட் செல்லாமையாதலால், குறித்து என்பதற்குக் கருதிய
தன்கண் செல்லாதபடி யென்று உரை கூறுகின்றார். குசை - சாட்டி;
பிடிவாருமாம். புறம் - முதுகு. சாபம் - வில். அருங்  கலம்  என்பதில்
அருமை, பெறலருமை. பரிசிலர்கட்குப் பெறுதற்கரியது என்பது. செவ்வித்
தடி - புதிய வூன்கறி. பூநாற்றம் - தாளிதத்தாற் பெற்ற இனிய மணம்.
கொளீஇ  யென்னும் வினையெச்சம் கிடந்தபடியே எவ்வினையோடும்
இயையாமையால், அமைத்த என ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது
என்றார்.  இனி,  அவ்வினையெச்சத்தையே  பெயரெச்சமாகத்  திரித்து
அதற்கேற்ப முடித்தாலும் அமையும் என்று கூறுகிறார்.வினையெச்சத்தைப்
பெயரெச்சமாகத்  திரித்து  வேண்டியவாறு  முடிப்பது  அத்துணைச்
சிறப்புடையதன்றாதலால், அமைத்தவென ஒருசொல் வருவித்துரைப்
பதையே மேற்கொள்கின்றார். ஊனுண்டல் துவையுண்டல், சோறுண்டல்
என்றாற்போலக் கறியுண்டலென வாராது கறிதின்றல் என வருமாதலால்,
“கறியொழிந்தவற்றிற் கெல்லாம் சேறலின் பன்மைபற்றி அமைத்துக்
கொள்ளப்படும்” என்றார். சேனாவரையர் முதலியோர் உண்டலென்பது
பொதுவினை யென்பர்.

     “நும் கை மெல்லியவால்” என்ற சேரமான் வாழியாதனுக்கு, கபிலர்
தம் கையின் மென்மைக்குக் காரணம் கூறுமாற்றால் “என் கை” யென்று
கூறாமல், “பாடுநர் கை” யென்றது, தன்னைப் படர்க்கை யாகக் கூறுவது.
நும் கை மெல்லிது என்றதுவே வாயிலாக வேந்தனது கை வன்மையும்
கை வண்மையும் ஒருங்கு பாடுதற்கு இடம் வாய்த்தமையின், அதனை
விடாது அரசன் கையின் இயல்பு கூறினார்.

      எம் கை  உண்டு  வருந்து தொழில் அல்லது பிறிது தொழிலறியா
வென்றது, வேந்தன் கையின் பெருமையை விளக்கிற்று.ஆடவர் மார்பகலம்
மகளிர்க்குப் பொறுத்தற்கரிய வேட்கைத் துன்பம் பயக்குமென்ப வாதலால்,
“மகளிர்க்கு ஆரணங்காகிய  மார்பு” என்றார்; “மணங்கமழ் வியன்மார்
பணங்கிய செல்லல்”  (அகம்.22)  என்று  பிறரும்  கூறுப.  போரின்கண்
உயர்வற வுயர்ந்த ஒருவன் முருகனென்பது  தமிழ்  நாட்டு வழக்காதலின்,
போரில்   மேம்படுவோரை   முருகனோ   டுவமை  கூறிச் சிறப்பிப்பது
வழக்காயிற்று.  அதனால்,  சேரமானை,  “செருமிகு  சேஎய்”  என்றார்.
நிலத்தோடு வேந்தனை  யுவமித்தது.   பொறைபற்றியன்று;  துளக்கப்
படாமைபற்றி யாதலால், அதனைப் பெய்து உரை கூறுகின்றார்.