147. வையாவிக் கோப்பெரும் பேகன்

     இந்நிலையில் பெரும்பேகனைத் தெருட்டற்குப் போந்த
சான்றோர்களுள் பெருங்குன்றூர்கிழார் என்பாரும் ஒருவர். இவர்
சோழவேந்தனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் கண்டு,
தாமுற்ற வறுமை யறிவித்துப் பரிசில் பெற்றவர். பின்னர் ஒருகால் இவர்
குடக்கோப் பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்டார். அவனுக்குத்
தம்மைப் பற்றி வருத்தும் வறுமைத் துன்பத்தையும், தாம் பிரிந்துறைதலின்
தம்முடைய மனைவியார் எய்தும் வருத்தத்தையும் தெரிவித்தார்.
அவன்ஒன்றும் கொடானாக, அவனை நோக்கி, “நும்மனோரும்
இனையராயின் எம்மனோர் இவண் பிறவலர்”(புறம்.211) என்றும்,
முன்னாள் கையுள்ளதுபோற் காட்டி வழிநாள், பொய்யொடு நின்ற
புறநிலை வருத்தம், நாணா யாயினும் நாணக் கூறி”(புறம்.211) னை.
யென வருந்தி யுரைத்துத் திரும்பினர். பின்னர் அவர், பெருஞ்சேரல்
இரும்பொறையின்றம்பி இளஞ்சேரலிரும்பொறையைக் கண்டார். அவன்
நல்லறிவினனாகலின் பெருங்குன்றூர்கிழாரை நன்கு வரவேற்று இனிது
சிறப்பித்தான். அவர் அவன்மேல் பதிற்றுப்பத்துட் காணப்படும் ஒன்பதாம்
பத்தைப் பாடினர்; அவனும், அதனை வியந்து மகிழ்ந்தேற்று,
“மருளில்லார்க்கு மருளக் கொடுக்கவென்று உவகையின் முப்பத்தீராயிரம்
காணங் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து
ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற் காகா அருங்கல
வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்படவகுத்துக் காப்பு மறம் விட்டான்”
என்ப. அப்பத்தின்கண், இளஞ்சேரலிரும்பொறையை, “பாடுநர் கொளக்
கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக் கொலக் குறையாத்
தானைச் சான்றோர், வண்மையும் செம்மையும் சால்பும் அறனும், புகன்று
புகழ்ந்தசையா நல்லிசை, நிலந்தரு திருவின் நெடியோ”(பதிற்.82) னென்றும்,
“வானிநீரினும் தீந்தண் சாயலன்”(பதிற். 86) என்றும், “விறல் மாந்தரன்
விறல் மருக, ஈர முடைமையின் நீரோ ரனையை, அளப் பருமையின்
இருவிசும் பனையை, கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை, பன்மீ
னாப்பண் திங்கள் போலப், பூத்தச் சுற்றமொடு பொலிந்து தோன்றலை”
(பதிற்.90) என்றும் பாராட்டி, “பல்வேல் இரும்பொறை நின்கோல்
செம்மையின், நாளினாளின் நாடுதொழு தேத்த, உயர்நிலை யுலகத்
துயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாது செருமேந் தோன்றி, நோயிலை
யாகியர் நீயே”(பதிற். 81) என்றும், “நின்னாள், திங்கள் அனைய வாக
திங்கள், யாண்டோரனைய வாகயாண்டே, ஊழி யனைய வாக வூழி,
வெள்ள வரம்பினவாக”என்றும் “மாகஞ் சுடர மாவிசும் புகக்கும், ஞாயிறு
போல விளங்குதி”(பதிற்.88) யென்றும், வாழ்த்தி யிருப்பதும் பிறவும் மிக்க
இன்பந் தருவனவாகும்.

     இங்ஙனம்   குடக்கோ  இளஞ்சேரலிரும்பொறையாற்   பெருஞ்
சிறப்பெய்திய    பெருங்குன்றூர்கிழார்    கபிலர்பால் நன்மதிப்புடையர்.
“வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையில் நெஞ்சின், நனவிற்
பாடிய நல்லிசைக் கபிலன்”(பதிற்.85) என்பதனால் இஃது இனிது விளங்கும்.
இக் கபிலர் முதலியோர் வையாவிக் கோப்பெரும் பேகனை யடைந்து,
அவனைத் தெருட்டும் செயல்வகை யறிந்து தாமும் அவனைக் காண
வந்தார். இவரையும் அப் பேகன் மிக்க சிறப்புடன் வரவேற்றுப் பரிசில்
நல்கத் தலைப்பட்டான். ஆனால், இவரோ, ஒரு பாணன் கூறும் கூற்றில்
வைத்து, “நெருநல் யாம் போந்து யாழிசைத்துச் செவ்வழிப் பண்ணைப்
பாடக் கேட்டு ஒருபாற் கண்ணீரும் கம்பலையுமாய் நின்று ஒரு தனிமகள்
தன் மையிருங் கூந்தல் மண்ணுதலும் பூச்சூடலுமின்றி வருந்தக் கண்டேன்.
அவள் தன் கூந்தலை மண்ணிப் பூச்சூடி மகிழுமாறு நீ அவளை யருளுதல்
வேண்டும்; ஆவியர் குடித் தோன்றலாகிய நீ அது செய்தலே எமக்குத்
தரும் பரிசிலாம்’’என்ற பொருளமைய இப் பாட்டைப் பாடினார்.

 கன்முழை யருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வா னின்னுறை தமியள் கேளா
நெருந லொருசிறைப் புலம்புகொண் டுறையும்
5அரிமதர் மழைக்க ணம்மா வரிவை
  மண்ணுறு மணியின் மாசற மண்ணிப்
புதுமலர் கஞல வின்று பெயரின்
அதுமனெம் பரிசி லாவியர் கோவே.  
(147)

     திணையுந் துறையு மவை. அவள் காரணமாக அவனைப் பெருங்
குன்றூர்கிழார் பாடியது.

     உரை: கன் முறை அருவிப் பன்மலை நீந்தி - கன்முழைக்க
ணின்று விழும் அருவியையுடைய பல மலைகளை அரிதிற் கழித்து;
சீறி யாழ் செவ்வழி பண்ணி வந்ததை - சிறிய யாழைச் செவ்வழி
யென்னும் பண்ணை வாசிக்கும்படியாகப் பண்ணி வாசித்து
வந்ததற்கு; கார் வான் இன்னுறை - கார்காலத்து மழையினது இனிய
துளி வீழ்கின்ற ஓசையை; தமியள் கேளா - தமியளாகக் கேட்டு;
நெருநல் -நேற்று; ஒரு சிறைப் புலம்பு கொண்டுறையும் -
ஒருபக்கத்துத் தனிமைகொண்டிருந்த; அரி மதர் மழைக்கண் அம்மா
அரிவை -அரிபரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும்
அழகிய மாமை நிறத்தினையு முடைய அந்த அரிவையது; நெய்யொடு
துறந்த மையிருங் கூந்தல் - நெய்யாற் றுறக்கப்பட்ட மைபோலும்
கரிய மயிரை; மண்ணுறு மணியின் மாசற மண்ணி - ஒப்பிமிடப்பட்ட
நீலமணியினும் மாசறக் கழுவி; புது மலர் கஞல - செவ்வி மலர்
நெருங்கும் பரிசு; இன்று பெயரின் - இன்று வருவையாயின்; அது
மன்- அதுவாகும்; எம் பரிசில் - எம்முடைய பரிசில்; ஆவியர்
கோவே - ஆவியருடைய வேந்தே எ-று.

     உறை, துளி; என்றது ஆகுபெயரால் துளியி னோசையை. மன்: அசை.
சீறி யாழ் செவ்வழி பண்ணி வந்ததற்கு அரிவை கூந்தல் புது மலர்
கஞலும்படி, அவள்பால் என்னொடும்  வரின் எம் பரிசில் அதுவெனக்
கூட்டுக. நெய் பூசுதலோடு பேணுதலைத் துறந்த வெனினுமமையும். செவ்வழி
பண்ணி வந்தது, புதுமலர் கஞல வென்று இயைத்துரைப்பாரு முளர்.

     விளக்கம்: பேகனுடைய மலைநாடு குன்றுகளாற் சூழப் பட்டிருத்தலின்,
“கன்முழை யருவிப் பன்மலை நீந்தி”யென்றார். கார்காலத்தில் மகளிர் தம்
காதலரைப் பிரிந்திருத்தலை யாற்றாராகலின், “கார்வான் இன்னுறை தமியள்
கேளா”என்றார். உறை - மழைத்துளி. இஃது ஆகுபெயராய், அத்துளி
வீழுமு் ஓசைமேல் நின்றது. புலம்பு தனிமை. “அரிமதர் மழைக்கண் அம்மா
அரிவை”யென்றது, இன்ன சிறப்புடைய அரிவை. தனிமைத் துன்புற்றுக்
கூந்தல் நெய்யும் பூவும் அணிதலின்றிப் பொலிவிழந்திருப்பது
கூடாதென்பதுபட நின்றது. நீ அவள் பால் சென்று அருளுதல் வேண்டும்
என்பார்,  அருள்பெற்றவழி  அவள்  செய்துகொள்ளும்  ஒப்பனையை
யெடுத்தோதினார்.  தமக்குச்  சால்பு   அதுவாகலின்.   காதலன்புடைய
மனைவியும் கணவனுமாயினார் பிரிந்திருப்பின், இருவரையும் ஒன்றுபடுத்தி
வாழ்வு  இனிது  நடாத்தப்  பண்ணுதல்  சான்றோர்க்குச்  சால்பென்பது,
“சொல்லிய  கிளவி  அறிவர்க்கும்  உரிய” (தொல். கற்.13) என்றும், “நம்
மூர்ப்பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ”(குறுந்.146) என்றும்
வருவனவற்றால் அறியப்படும்.