148. கண்டீரக் கோப்பெரு நள்ளி

     இவன் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். இவ்வள்ளல்கள்
ஈகையாகிய செந்நுகத்தைப் பூண்டு தமிழுலகத்தைத் தாங்கினரென
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுவர். இந்நள்ளி கண்டீரக்
கோவென்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி யென்றும் கூறப்படுவன்.
இளங்கண்டீரக் கோவும் உண்மையின், இவன் பெருநள்ளி யெனப்பட்டான்.
பெருமை இவற்கே சிறப்புரிமையாதல் தோன்றப் பெருங் கண்டீரக்
கோவென்னாது “பெருநள்ளி’’யெனச் சான்றோர் கூறினர். இவன் அருள்
நிறைந்த வுள்ளமுடையனாய் இரவலர் வறுமைத் துயர் போக்கும் வீரனாய்
விளங்கினமையின், இவனைச் சான்றோர் பெரிதும் பேணிப் பாராட்டினர்.
தோட்டி யென்னும் மலையைத் தன்னகத்தேயுடைய நாடு கண்டீர நாடாகும்.
இவனது இக் கண்டீர நாடு மலை நாடாதலின், இவனை “நளிமலை நாடன்
நள்ளி”யென்று பாராட்டுவர்.இவனது கொடைநலத்தைப் பெரிதும்
நுகர்ந்தவர் வன்பரணரென்னும் சான்றோராவர். ஆசிரியர் பரணரின்
வேறு   படுத்தறிதற்கு இவரது வன்பரணரென்னும் பெயரே
நன்கமைந்திருக்கிறது. இவர் நள்ளியையே யன்றி ஓரி யென்னும்
வள்ளலையும் பாடியுள்ளார். இவருக்குப் பிற்காலத்தவரான
பெருஞ்சித்திரனார், இவனை, “ஆர்வமுற்று, உள்ளி வருநர் உலைவு
நனிதீரத், தள்ளா தீயுந் தகைசால் வண்மைக், கொள்ளா ரோட்டிய
நள்ளி”(புறம்.158) என்று சிறப்பித்துள்ளார்.

     இனி, இப்பாட்டின்கண், வன்பரணர் நள்ளியை யடைந்து
அவனது விறலையும் கொடையையும் பாராட்ட, அவன் “சான்றீர், நீவிர்
கூறும் நலம் பலவும் என்பால் உளவோ என ஐயுறுகின்றே”னென்ற
குறிப்புப்படச் சில நல்லுரை வழங்கினனாக, “பீடில்லாத வேந்தரை அவர்
செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய் புனைந் துரைத்தற் கேதுவாகும்
வறுமை நின் கொடையால் எம்பால் இல்லையாதலின், எமது நாக்கு
ஒருவரையும் அவர் செய்யாதன கூறிப் பாராட்டற்கு அறியாது”என்று
அவற்கு விடையிறுத்துள்ளார்.

 கறங்குமிசை யருவிப் பிறங்குமலை நள்ளிநின்
அசைவி னோன்றா ணசைவள னேத்தி
நாடொறு நன்கலங் களிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியனகர்ப் பரிசின்முற் றளிப்பப்
5பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே.   (148)

     திணை: பாடாண்டிணை. துறை: பரிசிற்றுறை. கண்டீரக்
கோப்பெரு நள்ளியை வன்பரணர் பாடியது.

     உரை: மிசை கறங்கு அருவிய - உச்சிக்கணின்றும் ஆலித்
திழிதரும் அருவியினையுடைய; பிறங்கு மலை நள்ளி - உயர்ந்த
மலையையுடைய நள்ளி; நின் அசைவில் நோன்றாள் நசை வளன்
ஏத்தி - நினது தளர்ச்சியில்லாத வலிய முயற்சியானாய நச்சப்படும்
செல்வத்தை வாழ்த்தி; நாடொறு நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
- நாடொறும் நல்ல அணிகலத்தைக் களிற்றொடு கொணர்ந்து; கூடு
விளங்கு வியன் நகர் - நெற்கூடு விளங்கும் அகலிய  நகரின்கண்
இருந்து; முற்று பரிசில் அளிப்ப - சூழ்ந்திருந்த பரிசிலர்க்கு
அளித்து விடுவதால்;    பீடில் மன்னர்ப்  புகழ்ச்சி  வேண்டி -
பிறர்க் கீயும் பெருமையில்லாத அரசரைப் புகழும் புகழ்ச்சியை
விரும்பி; செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று - அவ்வரசர்
செய்யாதனவற்றைச் சொல்லி அவர் குணங்களைக் கூறுதலை
அறியாததாயிற்று; எம் சிறு செந் நா - எம்முடைய சிறிய செவ்விய
நா எ-று.

     பொய் கூறாமையிற் “சிறு செந் நா”என்றார்; தற்புகழ்ந்தாரா
காமற் “சிறு செந் நா”என்றார். அருவிய வென்பது விகாரம். நள்ளி, நீ
பரிசில் முற்றளித்தலால், எம் சிறு செந்நா நின் நசைவளனேத்தி, மன்னரைப்
புகழ்ச்சிவேண்டிக் கிளத்தல் எய்யாதாகின்று எனக் கூட்டுக. நின்னசைவள
னேத்திக் கொணர்ந்து முற்றளித்தலா லெனப் பரிசிலர் மேலேற்றி
யுரைப்பினு மமையும்.

     விளக்கம்: வளமுடைமைக்   கழகு  பலராலும்    நச்சப்படுந்
தன்மையாதலின்,   “நசை வளன்”  என்றார்.   வீடுகளின் தெருப்புறத்தே
நெற்கூடமைத்தல் பண்டையோர் மரபு; இன்றும் சிற்றூர்களில் இக் கூடுகள்
காணப்படும். முற்றுதல் - சூழ்தல். பாணர் சூழ்ந்திருந்து வளம் பெற்றுச்
செல்பவாகலின், “முற்று பரிசில்”என்றார். “பாண் முற்றிருக்கை”என்று
சான்றோர் வழங்குதல்   காண்க. பீடில்   மன்னர்   என்றவிடத்துப்  பீடு,
பிறர்க்கீயும்   பெருமைமேற்று. அருவி யென்பது அருவிய வென அகரம்
பெற்று    வந்தது  விகார மென்கின்றனர்; இதனைப் பெயரெச்சக்
குறிப்பாகக் கோடல் நேரிது. நின்னை யேத்தி, நீ தரும் நன்கலமும் களிறும்
கொணர்ந்து தம்மை முற்றும் இரவலர்க்குப் பரிசிலர் அளித்தலால் என
வுரைப்பினும் அமையு மென்பார், “நின்னசை.........அமையும்”என்றார்.