15. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப் பாட்டின்கண் ஆசிரியர் நெட்டிமையார், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் போர் மிகுதியும், வேள்வி மிகுதியும் கண்டு வியந்து, பெரும, மைந்தினையுடையாய், பகைவருடைய நல்லெயில் சூழ்ந்த அகலிடங்களைக் கழுதை யேர் பூட்டி யுழுது பாழ்செய்தனை; அவர் தேயத்து விளைவயல்களில் தேர்களைச் செலுத்தி யழித்தனை; நீருண் கயங்களில் களிறுகளை நீராட்டிக் கலக்கி யழித்தனை, இவ்வாறு மிக்க சீற்றமுடை யோனாகிய நின்னுடைய தூசிப்படையைக் கொள்ளவேண்டி வந்து பொருது வசையுற்ற வேந்தரோ பலர்; நால்வேதத்துக் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ் வேள்விச் சாலைகளில் நட்ட யூபங்களும் பல; வசையுற்றவர் தொகையோ, யூபங்களின் தொகையோ, இவற்றுள் மிக்க தொகை யாது? என்று கேட்கின்றார். | | கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்வெயில் புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல் | | 5. | வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத் | | | தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத் துளங்கியலாற் பணையெருத்திற் பாவடியாற் செறனோக்கின் ஒளிறுமருப்பிற் களிறவர | | 10 | காப்புடைய கயம்படியினை | | | அன்ன சீற்றத் தனையை யாகலின் விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார் ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார் | | 15. | நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய | | | வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில் நற்பனுவ னால்வேதத் தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண் | | 20. | வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி | | | யூப நட்ட வியன்களம் பலகொல் யாபல கொல்லோ பெரும வாருற்று விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற் பாடினி பாடும் வஞ்சிக்கு | | 25. | நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே. (15) | திணையும் துறையும் அவை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
உரை: கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்-விரைந்த தேர் குழித்த தெருவின்கண்ணே; வெள் வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி - வெளிய வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டி யுழுது;பாழ் செய்தனை - பாழ் படுத்தினை; அவர் நனந்தலை நல்லெயில் - அவருடைய அகலிய இடத்தையுடைய நல்ல அரண்களை; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல் - புள்ளினங்கள் ஒலிக்கும் புகழமைந்த விளை கழனிக் கண்ணே; வெள்ளுளைக் கலிமான் கவி குளம்பு உகள - வெளிய தலையாட்டமணிந்த மனஞ் செருக்கிய குதிரையினுடைய கவிந்த குளம்புகள்தாவ; நின் தெவ்வர் தேஎத்துத் தேர் வழங்கினை -நின்னுடைய பகைவர் தேஎத்துக்கண் தேரைச் செலுத்திணை; துளங்கியலால் பணை யெருத்தின் - அசைந்த தன்மையோடு பெரிய கழுத்தினையும்; பா வடியால் செறல் நோக்கின் - பரந்த அடியோடு வெகுட்சி பொருந்திய பார்வையினையும், ஒளிறு மருப்பின் களிறு - விளங்கிய கோட்டினையுமுடைய களிற்றை; அவர காப்புடைய கயம் படியினை - அப்பகைவருடையனவாகிய காவலையுடைய வாவிக்கட் படிவித்தனை; அன்ன சீற்றத்து அனையை - அப்பெற்றிப்பட்ட சினத்துடனே அதற்கேற்ற செய்கையையுடைய; ஆகலின் - ஆதலான்; விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு -விளங்கிய இரும்பாற் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறைந்த அழகுமிக்க பலகையுடனே; நிழல்படு நெடுவேல் ஏந்தி - நிழலுண்டாகிய நெடிய வேலை யெடுத்து; ஒன்னார் - பகைவர்; ஒண்படைக் கடுந்தார் - ஒள்ளிய படைக்கலங்களையுடைய நினது விரைந்த தூசிப்படையின்; முன்பு தலைக்கொண்மார் -வலியைக் கெடுத்தல் வேண்டி; நசைதர வந்தோர் - தம் ஆசை கொடுவர வந்தோர்; நசை பிறக்கொழிய - அவ்வாசை பின்னொழிய; வசை பட வாழ்ந்தோர் பலர்கொல் - வசையுண்டாக உயிர் வாழ்ந்தோர் பலரோ?; நற்பனுவல் -குற்றமில்லாத நல்ல தரும நூலினும்; நால் வேதத்து - நால்வகைப்பட்ட வேதத்தினும் சொல்லப்பட்ட; அருஞ்சீர்த்தி - எய்தற்கரிய மிக்க புகழுடைய; பெருங் கண்ணுறை நெய்ம் மலி ஆவுதி பொங்க - சமிதையும் பொரியும் முதலாகிய பெரிய கண்ணுறையோடு நெய் மிக்க புகை மேன்மேற் கிளர; பன்மாண் வீயாச சிறப்பின்-பல மாட்சிமைப்பட்ட கெடாத தலைமையையுடைய; வேள்வி முற்றி - யாகங்களை முடித்து; யூபம் நட்ட வியன்களம் பலகொல்-தூண்நடப்பட்டஅகன்ற வேள் விச்சாலைகள் பலவோ?; யா பலகொல் -இவற்றுள் யாவையோ பல? ; பெரும-; விசி பிணிக் கொண்ட மண்கனை முழவின் - வார் பொருந்தி வலித்துகட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய; பாடினி பாடும் வஞ்சிக்கு - விறலி பாடும் மேற்செலவிற்கு ஏற்ப; நாடல் சான்றமைந்தினோய் - ஆராய்தலமைந்த வலிமையுடையோய்; நினக்கு-; எ-று.
பூட்டி யென்னும் வினையெச்சத்திற்கு உழு தென்னுஞ்சொல் தந்துரைக்கப்பட்டது. நற்பனுவல் நால்வேதத்து வேள்வி யென இயையும். நற்பனுவலாகிய நால்வேத மென்பாரு முளர். பெரும, மைந்தினோய், பாழ் செய்தனை, தேர் வழங்கினை, கயம் படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர் கொல், யூபம் நட்ட வியன் களம் பலகொல்; இவற்றுள் யா பல கொல்லோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளங்கு பொன்னெறிந்த வென்பதற்குக் கண்ணாடிதைத்த வெனினுமமையும் தார் முன்பு தலைக் கொண்மார் என்பதற்குத் தாரை வலியால் தலைப்பட வெனினு மமையும். புரையுநற் பனுவலென்பதூஉம் பாடம். யா பலவென இவ்விரண்டின் பெருமையும் கூறியவாறு. இவை எப்பொழுதுஞ் செய்தல் இயல்பெனக் கூறினமையின், இஃது இயன் மொழியாயிற்று.
விளக்கம்: ஞெள்ளல் - தெரு. நன வென்னும் உரிச்சொல் அகல மென்னும் பொருட்டாதலானும், தலையென்பது இடமாதலானும், நனந்தலை யென்றது, அகன்ற இடமெனப் பொருள்படுவதாயிற்று. அகன்ற என்பது அகலிய வென வந்தது. உகளல், தாவுதல்; அஃதாவது ஊன்றிப் பாய்தல். பாவடி - பரப்ப அடி. ஒளிறுதல் - விளங்குதல். பலகை - கிடுகு; கேடகம். வாளும் வேலும் கொண்டு பகைவர் தாக்குமிடத்து, அவற்றைத் தாங்கித் தடுத்து நிற்றற்கேற்ப, ஆணியும் பட்டமும் அறைந்து அழகும் வன்மையும் பொருந்தியிருப்பதனால் இதனை நலங்கிளர் பலகை என்றார். முன்பு - வலி. இதனைத் தலைக்கொள்ளல் என்பது சிதைப்பதாகும்; ஆதலால் தலைக்கொண்மார் என்பதற்குக் கெடுத்தல் வேண்டியென்றார். இனித் தலைக் கொள்ள லென்பது எதிர்தல் என்றும் பொருள்படுதலால், முன்பு தலைக்கொண்மார் என்பதற்கு முன்பால் என ஆலுருபு விரித்து, வலியால் தலைப்பட்ட என்றும் உரைக்கலாம் என்றார். நற்பனுவல் நால்வேதத்தென்பதை, நற்பனுவலும் நால்வேதமும் எனக் கொண்டு, தரும நூலினும் வேதத்தினு மெனவுரைத்தார். நற்பனுவலும் வேதமே யாமெனக் கோடலும் பொருந்துமாகையால் நற்பனுவலாகிய நால்வேத மென்பாருமுளர் என்றார். பொன்னென்னும் பல பொரு ளொருசொல் கண்ணாடிக்குமாதலின், விளங்கு பொன்.....தைத்த வெனினுமமையும் என்று கூறினார். |