199. பெரும் பதுமனார் பெரும் பதுமனார் என்னும் இச் சான்றோர், அகப்பாட்டும் புறப்பாட்டுமாகிய பல பாட்டுக்களைப் பாடிச் சிறப்புற்றவர். களவிற் காதலொழுக்கம் பூண்ட ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை யொருவர் இன்றியமையா அளவில் திருமணத்திற்குரிய முயற்சியில் ஈடுபட்டனர். பெற்றோர் களவொழுக்கத்தை யறியாமையான் வரைவிற்குடன் படாராயினர். இற்செறிப்பு மிக்கதனால் இருவரும் உடன்போக்கிற் றலைப்பட்டனர்; புறப்பட்டும் வெளிப்போய் விட்டனர்; வழியருமையும் நினைந்திலர்; இடையில் எய்தக்கூடிய ஊறுகளையும் எண்ணிற்றிவர். காதலியை முன்னே செல்வித்து காதலன் பின்னே காவல்புரிந்து சென்றான். இரவுப்போதென்றும் எண்ணாது செல்லும் அவர்களைக் கண்ட இப்பெரும்பதுமனார் காதற்காமப் பிணிப்பின் வன்மையினை யுணர்ந்து, வையெயிற் றையள் மடந்தைமுன் னுற்று, எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், கல்லொடு பட்ட மாரி, மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே(நற்.2) யென்றும், இருவர் மனநிலையினையுந் தேர்ந்து, வில்லோன் காலன் கழலே தொடியோன் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர், யார்கொல் அளியர் தாமே(குறுந். 7) என்றும் பரிந்து பாடுகின்றனர். மீளிப் பெரும் பதுமனார் என்றொரு சான்றோருளர். இவரைப் பெரும் பதுமனார் எனப் பொதுவாகவும், அவரை மீளிப் பெரும் பதுமனா ரெனச் சிறப்பித்தும் சான்றோர் கூறுதலின், இருவரும் ஒருவரல்ல ரென்பது துணியப்படும். ஒருகால், கூத்தரும் பாணரும் பொருநரும் புலவரும் விறலியருமாகிய இரவலர் பலரும் செல்வரைப் பாடி அவர் தரும் பரிசிலை இரந்து பெறுவதைத் தொழிலாகக் கொண்ட நாளும் கொடுக்கும் பண்புடைய செல்வரையே தேடித் திரிவதுபற்றிச் சான்றோரிடையே ஆராய்ச்சி யுளதாயிற்று. அவரிடையே யிருந்த நம் பெரும் பதுமனார், அதற்கு முடிவு கூறுவாராய், ஆலமரம் பழுத்த காலத்து அதனைப் புள்ளினம் பலவும் சேர்ந்துண்டு மகிழும்; நெருநற் போந்து உண்டோமாகலின், இன்று வேறு மரத்துக்குச் செல்வே மென்னாது, நாடோறும் அம் மரத்தையே யடைந்துண்டு, அம்மரம் பழ முழுதும் ஒழிந்த காலத்தே வேறு பழு மரம் நாடிச் செல்லும்; இரவலரும் பழந்தேர்ந் துண்ணும் பறவை போலும் இயல்பினர். தம்மை விரும்பி வரவேற்றுப் பேணும் வண்மை யுடையோரைச் சூழ்ந்திருந்து அவர் செல்வத்தைத் தமதாகக் கருதி யுண்டலும், அவரது வறுமையைத் தமது வறுமையாகக் கருதி யமைதலும் இரவலர்கட்கு இயல்பு என்று இப் பாட்டைப் பாடினர். | | கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருந லுண்டன மென்னாது பின்னும் செலவா னாவே களிகொள் புள்ளினம் அனையர் வாழியோ விரவல ரவரைப் | | 5 | புரவெதிர் கொள்ளும் பெருஞ்செய் யாடவர் | | | உடைமை யாகுமவ ருடைமை அவர்; இன்மை யாகு மவரின் மையே. (199) |
திணையுந் துறையு மவை. பெரும் பதுமனார் பாட்டு.
உரை : கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் - தெய்வ முறையும் ஆலமரத்தினது பெரிய கொம்பின்கட் பல பழத்தை; நெரு நல் உண்டனம் என்னாது - நென்னலுமுண்டே மென்னாவாய்; பின்னும் செலவு ஆனா கலி கொள் புள்ளினம் - பின்னும் அவ்விடத்துப் போதலை யமையா ஒலி பொருந்தின புள்ளினம்; அனையர் இரவலர் - அத்தன்மையினையுடையார் இரப்போர்; அவரைப் புரவெதிர் கொள்ளும் பெருஞ் செய் யாடவர் உடைமை யாகும் - அவரைக் காத்தற்கு எதிர்ந்துகொள்ளும் மிக்க செய்கையையுடைய ஆண் மக்களது செல்வமாகும்; அவர் உடைமை - அவ்விரப்போர் செல்வம்; அவர் இன்மையாகும் அவர் இன்மை - அவ் வாண்மக்களுடைய வறுமையாகும் அவ்விரப்போருடைய வறுமை எ-று.
வாழியும் ஓவும் அசைநிலை.
விளக்கம்: ஆலமரத்திற் கடவுள் உறையு மென்பது வழக்கு. துறையு மாலமும் தொல்வழி மராமும், முறையுளிப் பராய்(கலி.104) என்று சான்றோர் கூறுதல் காண்க. கடவுள் ஆலத்தின் தடவுச் சினை பூத்துக் காய்த்துப் பழுத்தல் கடன்; அது பழமுடைத்தாதலைத் தேர்ந்து போந்துண்டல், புள்ளினம் அப் பழங்களைச் செய்துகொள்ளமாட்டாமையான் இறைவன் படைத்த அமைப்பு. பழங்களை யுண்டு செல்லும் புள்ளினம், விதைகளைப் பல்வேறிடங்களிற் சொரிந்து பழுமரத்தின் இனத்தைப் பல்குவிப்பது போல, இரவலரும் தமக்குப் பரிசில் தந்து சிறப்பிப்பார் புகழை நாட்டின் பல்வேறிடங்களிலும் பரப்பி, ஆங்காங்கு வள்ளன்மை யுடையாரைத் தோற்றுவிப்பர்; அச் செயல் வாயிலாக வலியும் படையு முடையார்பால் தொகும் பொருள் அவையில்லார்க்குப் பயன்பட்டு உலக வாழ்வைச் செம்மைப்படுத்தும் என்பது கருத்து. இதனாற்றான், கலிகொள் புள்ளினம் அனையர் இரவலர்என்றார். மேலும், வள்ளியோரைச் சூழ்ந்திருக்கும் புலவர் முதலிய இரவலர், அவர் வழங்குதற் கேதுவாகும் பொருளைத் தம் பொருளாகக் கருதி, அது பயன்படாது கெடாவாறு செய்வன செய்தற்குரிய உறுதி கூறுதலும், அவர் பொருளின்றி வறியராகிவழித் தாமும் உடனிருந்து வறுமைத் துன்பத்தை நுகர்ந்து, அஃது அவர்க்குத் தோன்றாவாறு தகுவன கூறுதலும் அவர் செயலாதல்பற்றி, அனையரென் றொழியாது, பெருஞ்செய் யாடவ ருடைமையாகு மவருடைமை, அவரின்மையாகு மவரின்மையே என்றார். வள்ளியோர்க்குப் பொருளுறுதி காட்டும் நலத்தைச் சான்றோர்களாகிய குடபுலவியனார், உறையூர் முது கண்ணன் சாத்தனார் முதலியோராலும், அவரின்மை தமதாகக் கருதிப் பேணும் நலத்தைக் கபிலர், பிசிராந்தையார், ஏணிச்சேரி முடமோசியார் முதலிய சான்றோர்களாலும் அறிக. இரவலரை வாழ்த்துவது ஈண்டுக் கருத்தன்மையின், வாழியோஎன்ற விடத்து வாழியும் ஓவும் அசைநிலை யாயின. |