32. சோழன் நலங்கிள்ளி

     ஆசிரியர் கோவூர் கிழார் இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளியின்
வள்ளன்மையை வியந்து, “இத் தண்பணை நாடு அவன் கருதிய முடிபே
யுடையதாதலால், அவன் வஞ்சியும் மதுரையும் தருவன்;அவனை 
நாமெல்லாம் பாடுவோம் வம்மின்” என்று பாராட்டுகின்றார்.

 கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
5. மாட மதுரையுந் தருகுவ னெல்லாம்
 பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போலவவன்
10.கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. (32)

      திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவனை அவர்
பாடியது.

     உரை: கடும்பின் அடு கலம் நிறையாக - நம் சுற்றத்தினது
அடுகலத்தை நிறைக்கும் பொருட்டு  விலையாக; நெடுங்  கொடிப்
பூவாவஞ்சியும் தருகுவன் - நெடிய துகிற்கொடியினையுடைய பூவாத
வஞ்சியையும் தருகுவன்; வண்ணம்  நீவிய - நிறமுடைய  கலவை
பூசப்பட்ட; வணங் கிறைப் பணைத் தோள் ஒண்ணுதல் விறலியர் -
வளைந்த சந்தினையுடைய முன்  கையினையும்  வேய்   போன்ற
தோளினையும் ஒள்ளிய  நுதலினையுமுடைய   விறலியர்;  பூவிலை
பெறுக என - பூவிற்கு விலையாகப் பெறுகவென்று; மாட மதுரையும்
தருகுவன் - மாடத்தையுடைய மதுரையையும்  தருவன்  ஆதலால்;
எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்  - யாமெல்லாம்
அவனைப் பாடுவோமாக வாரீர், பரிசின் மாக்காள்; தொன்னிலக்
கிழமை சுட்டின் - பழைய நிலவுரிமையைக் குறிப்பின்; நன்மதி
வேட்கோச் சிறாஅர் -  நல்ல   அறிவையுடைய   குயக்குலத்
திளையோர்;தேர்க் கால் வைத்த  பசுமண்  குரூஉத் திரள் போல -
கலம் வனைதற்குத் திகிரிக் கண்ணே வைத்த பச்சை மண்ணாகிய
கனத்த திரள் போல; அவன்  கொண்ட  குடுமித்து - அவன்
கருத்திற் கொண்ட முடிபையுடைத்து; இத்தண் பணை நாடு - இக்
குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு எ-று.

     பூவா வஞ்சி யென்றது, கருவூர்க்கு வெளிப்படை ஒன்றோ வென்றது
எண்ணிடைச் சொல். தேர்க்கா லென்றது, தேர்க்கால் போலும் திகிரியை
அவன் கொண்ட குடுமித்து, இந் நாடு; ஆதலால், வஞ்சியையுந் தருகுவன்;
மதுரையையும்  தருகுவன்;  ஆதலால்,  பரிசின்  மாக்கள்  நாமெல்லாம்
அவனைப்  பாடுகம்   வம்மினோ  வெனக்   கூட்டுக.  தொன்னிலைக்
கிழமையென்று பாடமோதுவாரு முளர்.

     விளக்கம் : அடு கலம் - உணவு சமைக்கும் கலங்கள். அடு கலம்
நிறையாக என்றது,  அக்  கலங்கள்  நிறையச்  சமைக்கப்படும்  உணவுப்
பொருட்டு விலையாக  என்பதாம். பூத்தவஞ்சி  வஞ்சிக் கொடிக்கும் பூவா
வஞ்சி வஞ்சிமாநகர்க்குமாதலின்; “பூவா வஞ்சி” யென்றாராக, “பூவா வஞ்சி
யென்றது  கருவூர்க்கு   வெளிப்படை”   யென்று  உரைகாரர்  கூறினர்.
கருவூர்க்கும்    வஞ்சியென்பது    பெயராதலின்,   இவ்வூர்   கருவூர்
எனவுரைகாரராற்   கொள்ளப்படுகிறது.  வஞ்சிநகர்  வஞ்சிக்களமென்றும்
அது  பின்பு அஞ்சைக் களமென்றும் மாறிய காலத்துக் கருவூர் வஞ்சியென
வழங்கப்படுவதாயிற்று.  நல்ல நிறமுடைய  கலவைப்  பூச்சினை “வண்ண”
மென்றார்.  விறலியர்  பூவிலை  பெறுக  என   என்றவிடத்து,   பூவிலை
மடந்தையராய கூத்தியரின்  நீக்குதற்கு,  பூவிலை  யென்பதைப்  பூவிற்கு
விலையெனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர்,தலையிற்
சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக “மாட  மதுரை  தருகுவன்” என்றார்.
இவ் விருநகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட, இந் நலங்கிள்ளி
ஓங்கி விளங்குகின்றா னென முன்  பாட்டிற்  கூறியதைக்  கடைப்பிடிக்க.
குயவரது  திகிரி,  தேர்த்   திகிரி  போல்வதேயன்றி,  அது  வாகாமை
விளக்குதற்கு, “தேர்க்கா  லென்றது  தேர்க்கால்   போலும்   திகிரியை”
யென்றார். சிறார் கலம் வனைதற்பொருட்டுத் திகிரிக்கண் மண் பிசைந்து
கொணர்ந்து வைப்பக் குயவன் தான்  கருத்திற்  கருதிய  கலங்களைச்
செய்வனாதலால்,  அவன்  கருத்துப்படி  உருப்படும்  மண்போல,  இத்
தண்பணை நாடும் நலங்கிள்ளியின் கருத்துப்படி பயன்படு  மென்றற்குக்
“கொண்ட குடுமித்” தென்றார். தொன்னிலைக் கிழமை யென்ற பாடங்
கொள்ளின், தொன்றுதொட்டே நிலை பெற்ற கிழமையெனப் பொருள்
கொள்க.