7. சோழன் கரிகாற் பெருவளத்தான்

     சோழன் கரிகாலன் தமிழ் மக்களால் இன்றுவரை மறக்கப்படாத
பெருவேந்தனாவான்.   சோழநாட்டின்  வளத்துக்கும்  பெருமைக்கும்
முதற்காரணமானவன்.    இரும்பிடர்த்தலையார்பால்   கல்வி   கற்று
இளமையிலே   தன்   பகைவரை   வென்று  புகழ்   மேம்பட்டவன்.
நடுநிலையிலும் அரசியல் முறையிலும் தலைசிறந்தவன்.  சோழநாட்டின்
தலைநகராகிய    உறையூரோடு  காவிரிப்பூம்பட்டினத்தையும்  தலை
நகராக்கிச்    சிறப்புற்றவன்.    முடத்தாமக்கண்ணியார்,   கடியலூர்
உருத்திரங்கண்ணனார்   முதலிய  சான்றோர்களால் பொருநாராற்றுப்
படையும்   பட்டினப்பாலையும்    பாடப்பெற்றவன்.     இந்நூற்கண்
இப்பாட்டினைப்   பாடிய   கருங்குழலாதனாரேயன்றி    வெண்ணிக்
குயத்தியார்   என்பாரும்   இவனைப்   பாராட்டிப்    பாடியுள்ளார்.
இப்பாட்டினைப்     பாடிய     கருங்குழலாதனார்     சேரநாட்டுச்
சான்றோர்.  கரிகாலனிடத்து  பேரன்பும்  பெருமதிப்பும்  உடையவர்.
இவர்  கரிகாலனுடைய  கொற்றத்தைப்  பாடும்  கருத்தால், அவனது
போரின்  கடுமையால்   பகைவர்  நாடு அழிவுறுதலை யெடுத்தோதி,
அவன் மனத்தில் அருள் பிறப்பிப்பது மிக நயமாகவுள்ளது.

      இப்பாட்டின்கண்  பகைவரின்  நாடுகள் புதுவருவாய் நிரம்பிப்
பயன் பல திகழ்வனவும், அகன்ற பரப்புடையனவுமாம். “நீயோ இரவும்
பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி,அவர
தம்  ஊர்களைச்  சுட்டெரித்தலால்  நாட்டுமக்கள்  அழுது புலம்பும்
ஆரவாரக்  கொள்ளையை  விரும்புகின்றாய்;  அதனால் அந்நாடுகள்
நலமிழந்து   கெட்டன  காண்”  என்று  கூறுவது   இவ்வாதனாரின்
சான்றாண்மையைப் புலப்படுத்துகின்றது.

களிறு கடைஇயதாள்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
5.மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய வெறுழ் முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல
10.இல்லவா குபவா லியல்தேர் வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே.
(7)

     திணை: வஞ்சி.  துறை -  கொற்றவள்ளை;மழபுல வஞ்சியுமாம்.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

     உரை: களிறு கடைஇய தாள் -களிற்றைச் செலுத்திய தாளையும்;
கழல்  உரீஇய திருந்தடி - வீரக்கழல் உரிஞ்சிய இலக்கணத்தால்
திருந்திய  அடியினையும்; கணை பொருது - அம்பொடு பொருது;
கவி  வண்  கையால்  - இடக்கவிந்த வள்ளிய கையுடனே; கண்
ஒளிர்வரூஉம்  கவின்   சாபத்து  -    கண்ணிற்கு   விளங்கும்
அழகினையுடைய   வில்லையும்;   மாமறுத்த  மலர்  மார்பின் -
திருமகள்   பிறர்   மார்பை   மறுத்தற்    கேதுவாகிய  பரந்த
மார்பினையும்; தோல் பெயரிய எறுழ் முன்பின் -   யானையைப்
பெயர்த்த   மிக்க   வலியினையுமுடைய;   எல்லையும்  இரவும்
எண்ணாய் - பகலும் இரவும்  எண்ணாது,  பகைவர்  ஊர்   சுடு
விளக்கத்து  -  பகைவரது  ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியின்
கண்ணே;  தங்கள் அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை -
தம்  சுற்றத்தை  யழைத்தலுடனே  அழுகின்ற  கூவுதலையுடைய
ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புதலுடைய;ஆகலின்-
ஆதலான்;  நல்ல  இல்ல ஆகுபவால் -   நல்ல   பொருள்கள்
இல்லையாகுவனவால்;  இயல்   தேர்  வளவ  -  இயற்றப்பட்ட
தேரையுடைய  வளவ;  தண் புனல் பரந்த பூசல் - குளிர்ந்த நீர்
பரந்த  ஓசையையுடைய  உடைப்புக்களை; மண் மறுத்து - மண்
மறுத்தலான்; மீனிற் செறுக்கும் - மீனாலடைக்கும்; யாணர் பயன்
திகழ்  வைப்பின்  - புது  வருவாயினையுடைய பயன் விளங்கும்
ஊர்களையுடைய,  பிறர்  அகன்றலை நாடு - மாற்றாரது அகன்ற
இடத்தையுடைய நாடுகள் எ-று.

     திருந்தடி  யென்பதற்குப்  பிறக்கிடாத  அடி யெனினு  மமையும்.
கணைபொரு தென்றது, அதனொடு மருவுதலை. தாளையும்  அடியையும்
கையுடனே  சாபத்தையும்  மார்பையும்   முன்பையுமுடைய  வளவ, நீ
கொள்ளை மேவலையாகலின்,  யாணரையும் வைப்பினையுமுடைய பிறர்
நாடு  நல்ல   இல்ல  வாகுப  வெனக்  கூட்டுக.  நாடு  நல்ல  இல்ல
வாகுபவென  இடத்து  நிகழ்   பொருளின்  றொழில்  இடத்துமேலேறி
நின்றது. இனித்தாளாலும்  அடியாலும்  கையாலும்  சாபத்தாலும்
மார்பாலும் முன்பாலும் கொள்ளை மேவலையாகலின்  என  ஆலுருபு
விரித்துரைப்பினுமமையும்.

     இது, பிறர் அகன்றலை  நாடு  நல்ல வில்ல வாகுப வென்றமையிற்
கொற்ற  வள்ளையும்,  ஊர்  சுடு   விளக்கத்   தழுவிளிக்   கம்பலை
யென்றமையின் மழபுல வஞ்சியுமாயிற்று.

     விளக்கம்: யானையின்   பிடரிமேலிருந்து  அதனைச்  செலுத்து
வோர்க்குக் காலே பெருங்கருவியாதலால், “களிறு கடைஇய தாள்” என்றார்.
கடவிய என்பது  கடைஇய  வென   நின்றது.   உறுப்புநூல்   வல்லார்
 கூறும் இலக்கணப்படியே    அமைந்த   அடியென்றற்குத்   “திருந்து  
அடி” என்றாராகலின்,   “இலக்கணத்தால்  திருந்திய அடி” யென உரை
கூறப்பட்டது. இனி, இவ்வாறு கொள்ளாது முன் வைத்தது பின்  வையாத
அடியென்று  கொள்ளினும்  பொருந்தும்  என்பார்,  “பிறக்கிடாத  அடி
யெனினு   மமையும்”  என்று  உரைகாரர்  கூறினார்.   கணைபொருது
என்பதற்கு   “அம்பொடு    பொருது”   என்றுரைத்தார்.   அம்பொடு
பொருதலாவது இதுவென்பார்,   “கணைபொரு   தென்றது   அதனொடு
மருவுதலை” என்றார். கவிகை.  வினைத்தொகை;  பிறர்க்கு வேண்டுவது
வழங்குதற்காகக்   கவியும்  கையென்பது  பொருள்.  நிரம்ப  அள்ளிக்
கொடுக்கும்  இயல்பு   தோன்ற  “வண்கை”  யென்றார். ஒளிர் வரூஉம்
விளங்கும். “புனைமறு மார்ப” (பரி.4:59) என்றும், “திருமறு மார்பு”(கலி.
104) என்றும் வந்த  இடங்களில்  “புகழப்படும்  மறுவையுடைய  மார்ப;
திருமகளாதலால் புனைமறு என்றார்” என்று பரிமேலழகரும்,“திருவாகிய
மறுவையுடைத்தாகிய  மார்பு”  என்று  நச்சினார்க்கினியரும் கூறியாங்கு,
“மாமறுத்த மலர்மார்பு” என்பதற்குத் “திருவாகிய மறுவையுடைய அகன்ற
மார்பு”   என   வுரை  கூறாது,  மறுத்த   வென்பதைத்   தெரிநிலைப்
பெயரெச்சமாகக் கொண்டு,“திருமகள் பிறர் மார்பை மறுத்தற் கேதுவாகிய
மார்பு” என்று கூறுவது  குறிக்கத்தக்கது.  அழுவிளி  யென்பதில்  விளி,
அழைத்தலும்  கூவுதலுமாகிய   இருபொருளும்   கொண்டு   நிற்றலின்,
இருபொருண்மையும்  விளங்க,  “அழைத்தலுடனே அழுகின்ற கூவுதல்”
என  உரைக்கின்றார்.  இல்லை  யாகுவன நல்லனவாயினும், நாடு இல்ல
வாகுப வென  நாட்டின்  வினையாகக்  கூறியதற்குக்  காரணம்,  நாடும்
நல்லனவும் இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபுடைமை யாதலால்.
“நாடு நல்ல....நின்றது”  என்றார்.  இப்பாட்டிற்கு  உரைத்துள்ள பொருள்
வகையே  நோக்கின், “நீ  கொள்ளை  மேவலையாகலின்”  என்பதற்குக்
காரணம் விளங்காமையாலும், அதனைக்  காணலுறின்,  தாளும்  அடியும்
முதலியவற்றையுடைமை  காரணமென்று  காணப்படுவதுபற்றி, “தாளாலும்
அடியாலும்..........உரைப்பினு மமையும்” என்றார்.