87. அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியர்  என்பார் குடியிற் பிறந்து சிறந்தமைபற்றி நெடுமான்
அஞ்சியை    அதியமான்    நெடுமான்  அஞ்சியென்று   சான்றோர்
கூறியுள்ளனர்.   அதியமான்   என்பது   அதிகைமான்  என்றும் சில
ஏடுகளிற்     காணப்படுவது  பற்றி,  அதியர்  என்பது  அதிகையர்
என்பதன் திரிபு என்றும், ஒரு காலத்தில் இவர் அதிகை யென்னும்
ஊரில்  வாழ்ந்திருந்து  பின்னர்ச் சேரநாட்டிற் குடியேறி யிருத்தல்
வேண்டும்  என்றும்,  இதனால்  திகையராகிய  இவர் அதியர்
எனப்படுவாராயின   ரென்றும்   அறிஞர் கருதுகின்றனர். நெடுமான்
அஞ்சி   யென்பது  இவன்  பெயர்.  இவன் ஒரு குறுநில மன்னன்;
இவனது  தலைநகர்    இக்காலத்தில்   தருமபுரி   யெனப்படும்
தகடூராகும். இவன்  சேரர்கட்குரியனாய்   அவர்க்குரிய கண்ணியும்
தாரும்  தனக்குரியவாகக் கொண்டவன்.  மழவர் என்னும் ஒருசார்
கூட்டத்தார்க்கும்  இவன்  தலைவன். இதனால்   இவனை “மழவர்
பெரு   மகன்”   என்றும்  சான்றோர்  கூறுப.  இவனது
ஆட்சியெல்லை  நடு  நாட்டுக் கோவலூரையும் தன்னகத்தே
கொண்டிருந்தது.  குதிரை  மலை  இவன்  நாட்டின்கண்ணதாகும்.
முதன்   முதலாகத்   தமிழகத்திற்  கரும்பினை  வேற்று
நாடுகளினின்றும்   கொணர்ந்தவர்  இவனுடைய  முன்னோராவர்.
பழம்    புலவர்கள்  இச்  செய்தியை,  “அதியமான்  முன்னோர்
விண்ணவரை  வழிப்பட்டுக்  கரும்பினை  இவண் கொணர்ந்தன”
ரென்றும்,  அவ்விண்ணவர்  போந்து தங்குதற் பொருட்டு இவன
தூர்க்கணொரு  சோலையிருந்த  தென்றும்   கூறுவர். இவன்
ஒருகால்  தன் நாட்டு மலையொன்றின்  உச்சிப் பிளவின் சரிவில்
நின்ற   அருநெல்லி    மரத்தின் அருங்கனியொன்றைப் பெற்றான்.
அக்   கனி  தன்னை  யுண்டாரை  நெடிது நாள் வாழச் செய்யும்
வலியுடையது. அதனைப் பெற்ற   இவன்  தானே யுண்டொழியாது
நல்லிசைப்   புலமை  சான்ற  ஒளவையார்க்  கீந்து  அழியா
அறப்புகழ்   பெற்றான்.   இவனுக்கு  ஒளவையார்பால்   பெரு
மதிப்பும்  பேரன்பும்  உண்டு.  ஒருகால்  தன்னோடு  மாறுபட்ட
தொண்டைமானிடைச் சந்து செய்வித்தற்கு  ஒளவையாரைத் தூது
விடுத்தான்.    இறுதியில்    இவன்    சேரமான்   பெருஞ்சேர
லிரும்பொறையுடன்  போர்  உடற்றி உயிர் துறந்தான். சேரமான்
தகடூரை  முற்றுகையிட்டிருந்த   போது     இவன்  தன்  பொருள்
படை  துணை  முதலியன  வலி  குறைந்  திருப்பதுணர்ந்து தன்
அரணகத்தே   அடைபட்டுக்  கிடந்ததும்  பின்னர்ப் போருடற்றி,
உயிர்     துறந்தும்,   தகடூர்    யாத்திரை யென்னும்  நூற்கண்
விளங்கும்.      அந்நூல்      இப்போது    கிடைத்திலது;  சிற்சில
பாட்டுகளே      காணப்படுகின்றன.     இவனைப்   பாராட்டி
ஒளவையார் பாடியுள்ள பாட்டுகள் பலவாகும். இந்த அதியமான்
நெடுமான்  அஞ்சிக்கு   அத்தை   மகள் ஒருத்தியுண்டு. அவளும்
சிறந்த   பாவன்மை  யுடையவள். அவள்   அஞ்சியை  மணந்து
இன்புற்ற  நாளில்,  ஒருநாள் தான் கண்ட மலைச் சாரற் காட்சியை
அஞ்சியின் அவையில் இசைப்பாணர் புதுவகையான   திறங்களைப்
புணர்த்துப்   பாடும் நலத்தை யோதிப் பாராட்டியுள்ளான்.

    ஒருகால் அதியமான்  நெடுமான் அஞ்சி தன்னை யெதிர்ந்த
பகைவேந்தரொடு   பொருதற்குச்  சமைந்திருந்தான்.  பகைவர்
தம்மிடையே   யுள்ள  மறவரது  மறத்தை   வியந்து கூறுவதனை
ஒளவையார் கேள்வியுற்றார். உடனே, அவர் அஞ்சியின் வலிநலத்தை
எடுத்துரைக்கக் கருதி, பகை வீரர்களே, போர்க்களம் புகாதீர்கள்;
எம்பால் ஒரு வீரனுளன்; அவன், நாளொன்றுக்கு எட்டுத் தேர்களைச்
செய்யும் பெருவன்மை படைத்த தச்சன், முப்பது நாள் அரிது முயன்று
செய்ததொரு தேரை யொக்கும் பெரு விரைவும் பெருந் திண்மையும்
உடையன்”என்று இப்பாட்டால் குறித்தோதுகின்றார்.

    ஒளவையார் சங்க மருவிய நல்லிசைப் புலவர் கூட்டத்துச்
சிறந்தோருள்  ஒருவர்;   பெண்பாற்   புலவருள் தலைமை பெற்றவர்.
தமிழகத்தில்   வாழும்  மக்கள்  அனைவரிலும்  இவர்  பெயரைக்
கேட்டறியாதார்   ஒருவரும்  இலர். அதியமான், ஒருகால் தன்னை
யுண்டாரை  நெடிது வாழச் செய்யும் நெல்லிக்கனி பெற்று, அதனை
இவர்க்குத் தந்து நெடிது வாழச் செய்தான். அவன் நெடுமனைக்கண்
இனிதிருந்து அவ்வப்போது இவர் அவனைப் பல பாட்டுக்கள் பாடிச்
சிறப்பித்துள்ளார்.  அதியமான்  பொருட்டு  ஒளவையார்
தொண்டைமானிடம் தூது சென்றார்; அதியமான் பகைவரைக் கடந்த
செய்திகளை நன்கு எடுத்தோதியுள்ளார்; அதியமான் இறந்த காலையில்
இவர் கையற்றுப் பாடிய பாட்டு நெஞ்சை நீராய் உருக்கும் நீர்மை
யமைந்தது. அதியமான் மகன் பொகுட்டெழினி யென்பான் பிறந்த
காலை முதல், அவன் அரசனாய் விளக்க மெய்துங்காறும் ஒளவையார்
இருந்திருக்கின்றார்.   வேள்  பாரியினது  பறம்பை  மூவேந்தரும்
முற்றுகையிட்டிருந்தபோது அங்கிருந்த கபிலர் கிளிகளை வளர்த்து
வெளியே விடுத்து நெற்கதிர் கொணர்வித்து அடைப்பட்டிருந்த
மக்கட்கு நேர்ந்த உணவுக்குறையை நீக்கினாரென்றும், வெள்ளிவீதியார்
என்பார் தம் காதலனை யிழந்து வருந்திய செய்தியும் பிறவும் இவரால்
குறிக்கப் பெறுகின்றன. இவர் பெயரால் தமிழகத்து வழங்கும் செய்திகள்
பலவாகும். அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகும்.
 
 களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந்
தெம்முளு முளனொரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே
   (87)

    திணை:தும்பை. துறை: தானை மறம். அதியமான்
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

    உரை: களம் புகல் ஓம்புமின் தெவ்விர் -
போர்க்களத்தின் கட்புகுதலைப் போற்றுமின், பகைவீர்;
போரெதிர்ந்து - போரின் கண் மாறுபட்டு; எம்முளும் உளன்
ஒரு பொருநன் - எங்களுள் வைத்தும் ஒரு வீரன் உளன்;
வைகல் எண் தேர் செய்யும் தச்சன் - ஒருநாள்
 எட்டுத் தேரைச்
செய்யும் தச்சன்; திங்கள் வலித்த காலன்னோன் - ஒரு மாதங்
கூடிக் கருதிச் செய்யப்பட்ட தொரு தேர்க்காலை யொப்பன் எ-று.

     போரெதிர்ந்து களம்புக லோம்புமின், எம்முளும் உளன் எனக்
கூட்டுக. எம்முளும் என்ற உம்மை சிறப்பும்மை. தேர்க் காலொடு
உவமை, விரைவும் திண்மையுமாகக் கொள்க.

     விளக்கம்:  பகைவர்  தமது  மைந்து  பொருளாகத்
தருக்கிவந்தனராதலின், அவருக்கு மாற்றம் கூறுவாராய், “பகைவர்களே,
நும்மிடையே வீரர் உளராதல் போல் எம்மிடையேயும் ஒரு வீரன் உளன்”
என்பார். “எம்முளும் உளன் ஒரு பொருநன்”என்றார். “ஒரு நாள் எண்
தேர் செய்யும் தச்சன்”என்றது, தச்சனது தொழில்நலம் தோற்றி நின்றது,
மிக்க திண்மையும் செப்பமும் உடைமை தோன்ற, “திங்கள் வலித்த கால்”
என்றார்.