77. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்

     பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தேரூர்ந்து
வந்து நின்ற காட்சியையும் அவன் பின்னர்ப் பகைவரொடு பொருது அவரைக்
கொன்றவிடத் தமைந்த தோற்றத்தையும் கண்ட இடைக்குன்றூர் கிழார்,
நெடுஞ்செழியன் தேர்க் கொடிஞ்சிக்கண் நிற்கின்றானாயினும், “யார்கொல்
அவன்; அவன் கண்ணி வாழ்க” என வியந்து வாழ்த்தி, “அவன் இளமைச்
செவ்வி அண்மையிற்றான் கழிந்தான்; இதுகாறும் அணிந்திருந்த கிண்கிணியை
நீக்கி இப்போதுதான் கழல் அணிந்தான்; சென்னியில் வேம்பின் தளிரும்
உழிஞைக் கொடியும் விரவித் தொடுத்த கண்ணியுடையனானான்; இதுவரை
யணிந்திருந்த தொடியை நீக்கிக் கையில் வில்லைப் பற்றிக்கொண்டு தேர்
மொட்டில் நிற்கின்றான்; மார்பில் தாரணிந்துள்ளானாயினும் ஐம்படைத்தாலியை
இன்னமும் கழித்திலன்; பாலருந்துவதை விட்டு இப்போதே உணவினையும்
உண்ணத் தலைப்பட்டான்; இத்துணை இளையோன், புதியராய் மேன்மேல்
வெகுண்டு வரும் வீரரைக் கண்டு வியப்பதும் செய்கின்றிலன்; இகழ்வதும்
இலன்; அவர்மீது பாய்ந்து பற்றிக் கீழே கவிழ்த்து, அவர் தம் உடல் நிலத்தில்
வீழக் கொன்றபோதும், அவன் முகத்தில் மகிழ்ச்சியோ, இவ்வாறு செய்தே
மென்ற தருக்கோ ஒன்றும் தோன்றுகின்றிலது; இவன் வீரம் இருந்தவாறு
என்னே” என இப் பாட்டின் கண் வியந்தோதுகின்றார்.

கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்
குடுமி களைந்த நுதல் வேம்பி னொண்டளிர்
நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
5.நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்று மிலனே பால்விட்
டயினியு மின்றயின் றனனே வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
10.வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை
அழுந்தப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக்
கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை
மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே.
(77)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு - சதங்கை
வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக் கழலினைச் செறித்து; குடுமி
களைந்த நுதல் - குடுமி யொழிக்கப்பட்ட சென்னிக்கண்ணே; வேம்பின்
ஒண் தளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து - வேம்பினது
ஒள்ளிய தளிரை
நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடி; குறுந்
தொடி கழித்த கை சாபம் பற்றி - குறிய வளைகளை யொழிக்கப்பட்ட
கையின்கண்ணே வில்லைப் பிடித்து; நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய
நின்றோன் - நெடிய தேரினது மொட்டுப் பொலிவுபெற நின்றவன்; யார்
கொல் - யாரோதான்; அவன் கண்ணி வாழ்க - யாரே யாயினும்
அவன் கண்ணி வாழ்வதாக; தார் பூண்டு தாலி களைந் தன்றும் இலன்
- தாரை யணிந்து ஐம்படைத்தாலி கழித்தலும் இலன்; பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன் - பாலை யொழித்து உணவும்
இன்றுண்டான்; வயின் வயின் - முறை முறையாக; உடன்று மேல் வந்த
வம்ப மள்ளரை - வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை; வியந்தன்றும்
இழிந்தன்றும் இலன் - மதித்தலும் அவமதித்தலும் இலன்; அவரை
அழுந்தப் பற்றி - அவரை இறுகப் பிடித்து; அகல் விசும்பு ஆர்ப்பு
எழ - பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலி யெழ; கவிழ்ந்து நிலஞ்
சேர அட்டதை - கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக்
கொன்றதற்கு; மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் - இலன்
மகிழ்ந்ததுவும் இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும்
அதனினும் இலன் எ-று.

     யார் கொல் என்றது வியப்பின்கட் குறிப்பு இழித்தன் றென்பது
இழிந்தன்றென மெலிந்து நின்றது.

     விளக்கம்: இளஞ் சிறார்க்குக் காலிற் கிண்கிணியும், தலையிற்
குடுமியும்,கையில் குறிய வளையும், மார்பில் ஐம்படைத் தாலியும் அணிவதும்,
பாலுணவளிப்பதும் பண்டைத் தமிழ்ச் செல்வர் மரபு. இளமை கழிந்து காளைப்
பருவ மெய்தினார் காலிற் கழலும் தோளில் தொடியும் மார்பில் மாலையும்
அணிவர்; சோற்றுணவு உண்பர். ஈண்டு நெடுஞ்செழியன் இளமைச் செவ்வியை
இன்னும் நன்கு கழிந்திலன் என்றற்கு இவற்றை விரித்துக் கூறினார். கொடுஞ்சி
தேர்த்தட்டின் நடுவே மொட்டுப்போ லமைத்த இடம்; அது மொட்டென்றும்
கூறப்படும். அது கொடுஞ்சி யெனப்பட்டது. தன்னொடு பொர வருவாருள்
தக்கோரை மதிப்பதும், தகவிலாரை அவமதிப்பதும் செய்தல் மறவர்க்கும்
இயல்பு; அவ்வியல்பும் இவன்பால் காணப்படவில்லை; மேல்வரும் வீரரைக்
கொன்று வீழ்த்துமிடத்து எய்தும் வெற்றியால் மகிழ்தலும் இயல்பு; அது தானும்
இவனிடம் இல்லை. இவற்றைக் கண்டதால் வியந்து, “யார் கொல்” என்றார்.