129. வேள் ஆய் அண்டிரன் ஆய் அண்டிரன் தன்பால் வரும் பரிசிலர் யாவர்க்கும் மிக்க யானைகளை வழங்குவது கண்டு சான்றோர் வியப்புற்றாராக, ஏணிச்சேரி முடமோசியார் அவர்கள் தெளிவெய்துமாறு மாசு மறுவின்றி விளங்கும் வானத்தின்கண் எங்கும் சிற்றிடமுமின்றி விண் மீன்கள் பூத்து விளங்கினும் அவற்றின் தொகை, ஆய் அண்டிரன்பாலுள்ள களிறுகளின் தொகைக்கு நிகராகாது என்று இப்பாட்டாற் கூறியுள்ளார். | குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்கமைப் பழுனிய தேறன் மகிழ்ந்து வேங்கை முன்றிற் குரவை யயரும் தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன் | 5 | ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல் | | இரவலர்க் கீத்த யானையிற் சுரவின்று வான மீன்பல பூப்பி னானா தொருவழிக் கருவழி யின்றிப் பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே. (129) |
திணை : அது. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை : குறி யிறைக் குரம்பை - குறிய இறப்பையுடைய சிறிய மனையின்கண்; குறவர் மாக்கள் - குறமக்கள்; வாங்கு அமைப்பழுனிய தேறல் மகிழ்ந்து - வளைந்த மூங்கிற் குழாயின் கண் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து; வேங்கை முன்றில் குரவை அயரும் - வேங்கை மரத்தையுடைய முற்றத்தின் கண் குரவைக் கூத்தை யாடும்; தீஞ் சுளைப் பலவின் மாமலைக் கிழவன் - இனிய சுளையை யுடைத்தாகிய பலாமரத்தையுடைய பெரிய மலையை யுடையோன்; ஆஅய் அண்டிரன் - ஆயாகிய அண்டிரன்; அடு போர் அண்ணல் - கொல்லும் போரைச் செய்யும் தலைவன்; இரவலர்க்கு ஈத்த யானையின் - அவன் இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட யானைத் தொகைபோல;கரவின்று வானம் மீன் பல பூப்பின் - மேகம் மறைத்தலின்றி வானம் பல மீனையும் பூக்குமாயின்; ஆனாது- அமையாது; ஒருவழிக் கருவழியின்றி - ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாக; பெரு வெள்ளென்னின் - பெருக வெண்மையைச் செய்யுமாயின்; பிழையாது மன் - அம்மீன்றொகை அதனுக்குத் தப்பாது எ-று.
யானையிற் பிழையாதென இயையும். மன் : அசை.
விளக்கம் : தேனை மூங்கிற் குழாய்களிற் பெய்துவைத்துக் களிப்பு மிகுவித்தல் பண்டையோர் மரபாதலின், “வாங்கமைப் பழுனிய தேறல்” என்றார்; பிறரும் “நீடமை விளைந்த தேக்கட் டேறல்” (முருகு. 195) என்பது காண்க. மாமலைக் கிழவன் என்றது, ஆய் அண்டிரன் பொதிய மலைக் குரியனாதல்பற்றி. வானத்தில் வெற்றிடம் சிறிதுமின்றி எங்கும் விண்மீன்களே பூக்கின் அவற்றின் தொகை, ஆய், இரவலர்க் கீத்த யானைத் தொகைக்கு நிகராகும் என்பார், “யானையிற் பிழையாது” என்றார். மீன் பூக்காத இடத்து வானம் கரிதாய்த் தோன்றுதலின், அதனைக் “கருவழி” யென்றார். வானமெங்கும் விண்மீன்களே நிறையப் பூத்தவழி எங்கும் அவற்றின் வெள்ளொளி பரந்து வெளிதாய்த் தோன்றுமாதலின், “பெருவெள் ளென்னின்” என்றார். பிழைத்தல் - நிகராகாமை. “பெருவெள் ளென்னின்” என்றதனால், பெருவெள் ளென்னுமாறு விண் மீன்களும் தோன்றா; ஆகவே, அவற்றின் தொகையும் யானைக்கு நிகராகா என்பதாம். |