74. சேரமான் கணைக்கா லிரும்பொறை

     இச் சேரமான், சான்றோர்களால் கோச் சேரமா னென்றும், சேரமான்
என்ற பொதுப்பெயராலும் வழங்கப்படுவன். இதனால் இவன் காலத்தே, இவன்
மிக்க சிறப்புடன் வாழ்ந்தவ னென்பது புலனாகும். இவன் பெரும் படையும்
மிக்க போர்வன்மையு முடையவன். இவனுடைய தலைநகர் தொண்டி யென்பது.
மேனாட்டு யவனர்களான பிளினி முதலியோர் இதனை டிண்டிஸ் என்று
வழங்குகின்றனர். இந்நகர்க்கண் பெரிய கோட்டை யிருந்தது. இவன்
தன்னொடு பகைத்துப் போருடற்றிய மூவன் என்பவனைக் கொன்று அவன்
வாயிற் பல்லைப் பிடுங்கிக் கோட்டை வாயிற் கதவில் வைத்து இழைத்திருந்தா
னெனப் பொய்கையார் கூறியுள்ளார். இவன் காலத்தை யடுத்தே சேரமான்
கோக்கோதை மார்பன் தோன்றினான். சோழநாட்டை யாண்டு வந்த
செங்கணானுக்கும் இக் கணைக்காலிரும் பொறைக்கும் யாது காரணத்தாலோ
பெரும் பகையுண்டாக, இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே
பொரத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ்
நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை யென நற்றிணை முன்னுரையும்,
திருப் போர்ப் புறமென இப்புறநானூற்றுக் குறிப்பும் கூறுகின்றன. இவன்
பாசறைக்கண் தங்கியிருக்கையில் ஒரு நாள் இரவு யானைப்படையிலிருந்த
களிறொன்று மதஞ் செறிந்து தீங்கு செய்யலுற்றது. அதனால் பலரும் அஞ்சி
யலமந்தனர். அதனையறிந்த சேரமான் சென்று அடக்கி வீரர் பலரும்
“திரைதபு கடலின் இனிது கண்படுப்ப”ச் செய்தான். பின்னர்ப் போர் முடிவில்
சேரமான் படையுடைந்து கெட்டது; அவனும் சோழன் கையகப்பட்டுக்
கால்யாப் புற்றுச் சிறையிடப் பெற்றான். அவ்வாறிருக்கையில் ஒருநாள்
சேரமான் நீர் வேட்கையுற்றுக் காவலர்களை நீர்கொணருமாறு பணித்தான்.
அவர் அவன் பணியை யவமதித்துச் சில நாழிகை கழித்துக் கொணர்ந்து
கொடுத்தனர். அந்த மானத்தைப் பொறாத சேரமான் “அரசராயினார், குழவி
யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவை வாள் வாய்ப்பட்டு இறந்தாலன்றி
நலமின் றெனக் கருதி அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர்;
அக் குடி யிற் பிறந்த யான் சிறைப்பட்டுக் கிடந்து உயிர் நீத்தல் தீது;
இத்தகைய மறக் குடியினரான எம் பெற்றோர் பகைவர்பால் உணவிரந்துண்டு
உயிர் வாழு மாறு மக்களைப் பெறார் காண்” என்று நினைந்து, இதனை ஒரு
பாட்டாக எழுதி வைத்து உயிர் நீத்தான். அப் பாட்டே ஈண்டு வந்துள்ள
பாட்டு.

குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5. மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே.
(74)

     திணை: பொதுவியல். துறை: முதுமொழிக்காஞ்சி. சேரமான்
கணைக்காலிரும் பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்
புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச்

சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக்
கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.

     உரை: குழவி இறப்பினும் - பிள்ளை யிறந்து பிறப்பினும்; ஊன்
தடி பிறப்பினும் - தசைத் தடியாகிய மணை பிறப்பினும்; ஆள்
அன்றென்று வாளின் தப்பார் - அவற்றையும் ஆளல்ல வென்று
கருதாது வாளோக்குதலில் தவறார் அரசராயிருக்க; தொடர்ப்படு
ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய - பகைவர் வாளாற் படாது
சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போலப் பிணித்துத் துன்பத்தைச்
செய்து இருத்திய; கேளல் கேளிர் வேளாண் சிறு பதம் - கேளல்லாத
கேளிருடைய உபகாரத்தான் வந்த தண்ணீரை; மதுகை யின்றி -
இரந்துண்ணக் கடவேமல்லே மென்னும் மனவலி யின்றி; வயிற்றுத்
தீத் தணிய - வயிற்றின்கண் தீயை யாற்றவேண்டி; தாம் இரந்துண்ணும்
அளவை - தாமே இரந்துண்ணும் அளவினை உடையாரை; ஈன்மரோ
இவ் வுலகத் தான் - அவ்வரசர் பெறுவார்களோ இவ்வுலகத்தின்கண்
எ-று.

     அளவை யுடையாரை அளவை யென்றார். இதன் கருத்து, சாக்குழவியும்
ஊன் பிண்டமுமென இவற்றின் மாத்திரையும் பெற்றிலே மெனப் பிறர்மேல்
வைத்துக் கூறியவாறு. கேளல் கேளி ரென்றது, சிறைக் கோட்டங் காவலரை.
அன்றி, இவன் ஆண்மையுடையனல்ல னென்று வாளாற் கொல்லாராய்த்
தொடர்ப்படு ஞமலி போல இடர்ப்படுத் திருத்திய கேளல் கேளிர் வேளாண்
சிறுபதத்தை மதுகையின்றி வயிற்றுத் தீத்தணிக்க வேண்டித் தாம் இரந்துண்ணு
மளவாகக் குழவிசெத்துப் பிறப்பினும் ஊன் தடி பிறப்பினும் இவ்வுலகத்து
மகப்பெறுவாருளரோ வென வுரைப்பினு மமையும். அரசர்க்கு மானத்தின்
மிக்கஅறனும் பொருளும் இன்பமும் மில்லை யென்று கூறினமையின்,
இது முதுமொழிக் காஞ்சி யாயிற்று.

     விளக்கம்: “நோற்றோர் மன்ற தாம் கூற்றம், கோளுற விளியார்
பிறர்கொள விளிந்தோர்” (அகம்.61) என்ற கருத்துடையராதலின், பண்டைத்
தமிழ் வேந்தர், குழவி யிறப்பினும் உறுப்பில் பிண்டம் பிறப்பினும், மூத்து
விளியினும், நோயுற்றிறப்பினும், வாளாற் போழ்ந்து அடக்கம் செய்யும்
மரபினரா யிருந்தனர். வாளோக்குதல் - வாளை யோச்சி வெட்டுதல். கேளல்
கேளிர் - பகைவர். உண்ணீரைச் சிறுபதம் என்றார்; உணவாய் உண்ணப்
படுதல் பற்றி மதுகை, வலி; ஈண்டு மனவன்மை குறித்துநின்றது. மானத்தின்
மிக்க அறமும் பொருளும் இன்பமு மில்லை யெனக் கருதுதற் கேதுவாகிய
மனத்திட்பம். வயிற்றுத் தீ - பசி நோய் “தொடர்ப்படு ஞமலியின்” என்றதற்
கேற்பத் தொடர்ப்படுத்து என வருவித்துக்கொள்கின்றனர். சிறைப்படுத்திய
செயலை, ஞமலியின் “தொடர்ப்படுத் திடர்ப்படுத் திரீஇய” என்றார்.
குறிப்பறிந்து நல்கப் பெறாது வாய் திறந்து கேட்டுப் பெறுதலின்
“இரந்துண்ணும் அளவை” யென மானமுடைமையின் மாண்பு தோன்றக்
கூறுகின்றான்.