|   150. கண்டீரக் கோப்பெரு நள்ளி       கண்டீரக் கோப்பெரு நள்ளிபால் பெருநட்புக் கொண்டொழுகிய சான்றோர் வன்பரணர். இவரைப் பரணரின் வேறுபட வுணர வன்பரண
 ரென்றனர் சான்றோர். ஈண்டு நள்ளியைத் தாம் கண்டது கூறுமாறு போல,
 வல்விலோரியைச் சுரத்திடத்தே கண்டு இவர் பரிசில் பெற்று மேம்பட்டனர்.
 இவர் பாட்டுகள் இலக்கிய நலம் சிறந்தவை. இப் பாட்டின்கண் தாம்
 முதன்முதலாக அவனைக் கண்டதும், அவன் தலையளி செய்ததும்
 சான்றோர்க் குரைப்பாராய், வறுமையுற்று வருந்திய யான் இரவலர்
 சுற்றத்துடனே புறப்பட்டு நள்ளியினது கண்டீர நாட்டுக்குப் பல கல்லும்
 கானமும் கடந்து சென்றேன். ஒருநாள் வழி நடை வருத்த மிகுதியால்
 யாங்கள் காட்டிடத்தே ஒரு பலாமரத்தின் அடியில் அமர்ந்திருந்தேம். மான்
 கணத்தை வேட்டம் புரிந்து அவற்றின் குருதி தோய்ந்து சிவந்த கழற்காலும்
 மணி விளங்கும் சென்னியுமுடைய செல்வத் தோன்ற லொருவன் எம்பால்
 போந்து, எம் வருத்த முற்றும் எம் முகநோக்கித் தேர்ந்து கொண்டானாக,
 அவனைக் கண்டு எழுந்த என்னைக் கைகவித்திருக்கச்செய்து, தன்னொடு
 போந்து காட்டிடத்தே பரந்திருந்த வில்லுடைய இளையர் திரும்பப்
 போதருமுன், தன் கையிலிருந்த தீக்கடை கோலால் தீ மூட்டிக் கானிடைக்
 கொன்ற விலங்கின் ஊனைக் காய்ச்சி எம்மை யுண்பித்தான். உண்டு
 பசிதீர்ந்த யாங்கள், மலைச்சாரலில் ஒழுகிய அருவிநீரைப் பருகி அயர்வு
 நீங்கினேமாக, எம்பால் வீறு பொருந்திய நன்கலம் வேறில்லை; யாம் காட்டு
 நாட்டிடத்தேம்என்று மொழிந்து தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத்தையும
 ் முன்கையிலணிந்திருந்த கடகத்தையும் தந்தான்; யாங்கள் அவன்
 வள்ளன்மையை வியந்து, ஐய, நீவிர் யார்? நும்முடைய நாடு யாது?என
 வினவினேம்; அவன் ஒருமொழியேனும் விடையாக மொழியாது எம்பால்
 விடைபெற்றுச் சென்றான். பின்னர், யாங்கள் வழியில் பிறமக்கள் தம்முட்
 பேசிக்கொண்ட சொற்களால், இவ்வாறு அருள்செய்த வள்ளல்,
 தோட்டிமலைக்குரிய கன்மலைநாடனான கண்டீரக் கோப் பெருநள்ளி
 யெனத்  தெரிந்து தெளிந்தேம்என்று கூறியுள்ளார்.
                   |  | கூதிர்ப்             பருந்தி னிருஞ்சிற கன்ன பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
 தன்னு முள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
 உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி
 |            | 5 | மான்கணந்             தொலைச்சிய குருதியங் கழற்கால் |            |  | வான்கதிர்த்             திருமணி விளங்குஞ் சென்னிச் செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன்
 தொழுதனெ னெழுவேற் கைகவித் திரீஇ
 இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை
 |            | 10 | கானதர்             மயங்கிய விளையர் வல்லே |            |  | தாம்வந்             தெய்தா வளவை யொய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின்
 இரும்பே             ரொக்கலோடு தின்மெனத் தருதலின்
 அமிழ்தின் மிசைந்து காய்பசி நீ்ங்கி
 |  | 15 | நன்மர             னளிய நறுந்தண் சாரற் |  |  | கன்மிசை             யருவி தண்ணெனப் பருகி விடுத்த றொடங்கினே னாக வல்லே
 பெறுதற் கரிய வீறுசா னன்கலம்
 பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டேமென
 |  | 20 | மார்பிற்             பூண்ட வயங்குகா ழாரம் |  |  | மடைசெறி             முன்கைக் கடகமோ டீத்தனன் எந்நா டோவென நாடுஞ் சொல்லான்
 யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான்
 பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே
 |  | 25 | இரும்புபுனைந்             தியற்றாப் பெரும்பெயர்த்தோட்டி |  |  | அம்மலை             காக்கு மணிநெடுங் குன்றிற் பளிங்குவகுத் தன்ன தீநீர்
 நளிமலை நாட னள்ளியவ னெனவே.                   (150)
 |                திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
 உரை: கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகன்ன -
 கூதிர்காலத்துப் பருந்தினது கரிய சிறகை யொத்த; பாறிய சிதாரேன்
 - துணியாகிய சீரையை யுடையேனாய்; பலவு முதல் பொருந்தி -
 பலாவடியைப் பொருந்தி; தன்னும் உள்ளேன் - தன்னையும்
 நினையேனாய்; பிறிது புலம் படர்ந்த - வேற்றுநாட்டின்கட் சென்ற;
 உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி - எனது ஓய்ந்த
 செலவானுளதாகிய வருத்தத்தினையும் மிடியையும் பார்த்து; மான்
 கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால் - மானினது திரளைத்
 தொலைத்த குருதி தோய்ந்த அழகிய வீரக்கழலினையுடைய
 காலினையும்; வான் கதிர்த் திருமணி விளங்கும் சென்னி - வாலிய
 ஒளியையுடைய அழகிய நீலமணி விளங்கும் உச்சியையுமுடைய;
 செல்வத் தோன்றல் - செல்வத்தையுடைய தலைவனாகிய; ஓர்
 வல்வில் வேட்டுவன் - ஒரு வலிய வில்லினையுடைய வேட்டுவன்;
 தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ - தன்னை யஞ்சலி
 பண்ணினேனா யெழுந்திருப்பேனைக் கைகவித்திருத்தி; இழுதின்
 அன்ன வால் நிணக் கொழுங் குறை - நெய்யிழுதுபோன்ற வெள்ளிய
 நிணத்தையுடைய கொழுவிய தடியை; கானதர் மயங்கிய இளையர் -
 காட்டுவழியின்கண் வழிமயங்கிப் போகிய இளையர்; தாம் வல்லே
 வந்தெய்தா அளவை - தாம் விரைய வந்து பொருந்துவதற்கு      முன்னே;
 ஓய்யென-கடிதாக; தான்         ஞெலி தீயின் விரைவனன் சுட்டு - தான்
 கடைந்த தீயான் விரைந்து சுட்டு; நின் இரும் பேர் ஒக்கலொடு
 தின்ம் எனத் தருதலின் - நினது மிகப் பெரிய சுற்றத்துடனே தின்மி
 னென்று தருதலான்; அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி அதனை
 யாங்கள் அமிழ்துபோலத்தின்று சுடுகின்ற பசி தீர்ந்ததாக; நன் மரன்
 நளிய நறுந் தண் சாரல் கல் மிசை அருவி தண்ணெனப் பருகி -
 நல்ல மரச்செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச் சாரற்கண்
 மலையுச்சியினின்றும் வீழ்ந்த அருவிநீரைக் குளிரக் குடித்து; விடுத்தல்
 தொடங்கினேனாக - விடைக்கொள்ளத் தொடங்கினேனாக; வல்லே -
 விரைய வந்து; பெறுதற்கரிய வீறுசால் நன்கலம் - பெறுதற்கரிய
 பெருமை யமைந்த நல்ல அணிகலங்கள் தருதற்கு; பிறிதொன்றில்லை
 காட்டு நாட்டேம் என - வேறொன்றில்லை யாம் காட்டு நாட்டின்
 கண்ணேம் எனச் சொல்லி; மார்பிற் பூண்ட வயங்கு காழ் ஆரம் -
 தனது மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்து வடங்களையுடைய
 ஆரத்தை; மடை செறி முன் கைக் கடகமொடு ஈத்தனன் -
 கொளுத்துச் செறிந்த முன்கைக் கணிந்த கடகத்துடனே தந்தனன்;
 எந்நாடோ என நாடும் சொல்லான் - நும்முடைய நாடு எந் நாடோ
 என்று கேட்ப நாடும் சொல்லிற்றிலன்; யாரீரோ எனப் பேரும்
 சொல்லான் - நீர் யாரெனக் கேட்பப் பெயரும் சொல்லிற்றிலன்;
 பிறர்பிறர் கூற வழிக் கேட்டிசின் - அவன் நாடும் பெயரும் பிறர்
 பிறர் வழியின் கண்ணே சொல்லக்கேட்டேன் யான்; இரும்பு புனைந்
 தியற்றாப் பெரும் பெயர்த் தோட்டி - இரும்பாற் புனைந்து
 செய்யப்படாத மிக்க புழையுடைய தோட்டியாகிய; அம் மலை
 காக்கும்- அம் மலையைக் காக்கும்; அணி நெடுங் குன்றின் -
 அழகிய பெரியபக்கமலையினையும்; பளிங்கு வகுத்தன்ன தீ நீர் -
 பளிங்கை வகுத்தாற்போன்ற வெளிய நிறத்தையுடைய இனிய
 நீரையுமுடைய; நளிமலை நாடன் நள்ளி அவன் என - பெரிய
 மலைநாட்டையுடைய நள்ளி அவன் என எ-று.
 
 நீங்கி - நீங்க. பலவு முதற் பொருந்தித்         தொழுதனென் எனவும்,
 மலை காக்கும் நள்ளி யெனவும் இயையும். அவன் நள்ளி யெனப் பிறர்
 பிறர் கூறவழிக் கேட்டிசின் எனக் கூட்டுக.
 
 விளக்கம்:         அழுக்கேறிக் கிழிந்திருக்கும் உடை நீரில் நனைந்த
 பருந்தின் சிறகுபோல இருக்கும்; இதனைப் பிறரும், நீர்ப்படு பருந்தின்
 இருஞ்சிற கன்ன, நிலத்தின் சிதாஅர்(பதிற்.12) என்பர். வருத்தமும்
 உலைவும் முறையே செல்வா னுளவாகிய வருத்தத்தையும் வறுமைத்
 துன்பத்தையும் குறித்துநின்றன. கழற்காலும் மணிவிளங்கும்
 சென்னியுமுடைய செல்வத் தோன்றல் என இயையும்.
 செல்வத் தோன்றலைக் கண்டு தொழுதற்கெழுந்த          என்னை,      வருத்தமும்
 உலைவும் நோக்கி அருள் கொண்டு எழாவாறு தடுத்து
 இருக்கச் செய்தான் என நள்ளியின் அன்பு நலத்தைக் கைகவித் திரீஇ
 யென்பதனால் தோற்றுவித்தார். பல்வேறிடங்களிற் சிதறிச் சென்றிருந்த
 இளையர் வந்து தொக்க வழி, தன் பெயரும் வரவும் வெளிப்படுமெனக்
 கருதி, இளையர் வல்லே வந்தெய்தா அளவைஎன்றார். காய் பசி நீங்கி
 யென்றவிடத்து, நீங்கி யென்பது நீங்கவெனத் திரிக்கப்பட்டது. விடுத்தல்
 தொடங்கினேன் விடைகொள்ளத் தொடங்கினேன். மடை, மடுக்கப்படுவது;
 பற்றவைப்பு. நன்கலம் கடகமொடு ஈந்தான்; பசித்துயர் போக்கி, நன்கலம்
 ஈந்தானைப் பெயரும் நாடும் கூறுமாறு கேட்டேன்; எனக்கு அவற்றை
 யவன் கூறிற்றிலன் என்பார், அவனது செல்வப் பணிவுடைமையின் சிறப்புப்
 புலப்பட, எந்நாடோ வென நாடுஞ் சொல்லான், யாரீரோ வெனப் பேருஞ்
 சொல்லான்என்றார். வழிக் கேட்டிசின் - வழியின்கண் பிறர் தம்மிற் கூறக்
 கேட்டேன். முன்னிலைக்குரிய இசின், கேட்டிசின் எனத் தன்மைக்கண்
 வந்தது; இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடுந், தகுநிலை யுடைய
 என்மனார் புலவர்(தொல். இடை 27) என்பதனால் இஃதமைவதாயிற்று.
 மதுரைக்குத் தெற்கிலுள்ள மலைநாட்டில் ஒரு பகுதி கண்டீரக் கோப்பெரு
 நள்ளிக் குரியதாகும். நள்ளி யென்னும் பெயருடையதோர் ஊர் அந்நாட்டில்
 உளது.
 |