135. வேள் ஆய் அண்டிரன் ஏணிச்சேரி முடமோசியார், முதன்முதலாக ஆய் அண்டிரனுடைய வண்மை, ஆண்மை, உடைமை முதலியவற்றான் உளதாகிய புகழைக் கேள்வியுற்று அவனைக் காணச் சென்றார். அவனும் அவனது புலமை நலமும் மனநலமும் கேள்வியுற்றிருந்தானாதலின், அவரை அவர் வரிசையறிந்து வரவேற்றுத் தக்க சிறப்பினைச் செய்தான். அவன் வழக்கம்போல் மிக்க வளவிய களிறும் மாவும் தேரு முதலிய பலவற்றைப் பரிசிலாகத் தர முற்பட்டான். அதனையறிந்த மோசியார், தாம் கூறக்கருதுவதை நேர்முகமாகக் கூறின், அவன் அன்பு மிக வுடைமையாற் பட்டாங்குக் கொள்ளானென்று நினைந்து ஒரு பாணன் கூற்றாக வரும் பரிசிற்றுறைப் பாட்டொன்றில் வைத்து, மாவேள் ஆய், விறலி யென்பின்னே வர, படுமலைப் பண்ணுக்குரிய சிறிய யாழை ஒருபுடை தழுவிக் கொண்டு நின்னுடைய நல்லிசையை நினைந்து வரும் யான்; இப்போது வந்தது நின்னைக் காண்டல் வேண்டியே யன்றிக், களிறும் மாவும் தேரும், வேண்டியன்று. நின் செல்வத்தைப் பரிசிலர், தமதென வளைத்துக் கொள்வாராயின், இல்லை, இஃது எனது என்று சொல்லு தலையறியாத வண்மை நிறைந்த மனமுடைய நீ பல்லூழி வாழ்வாயாக” என்று வாழ்த்திப் பாடினார். அப்பாட்டே இப்பாட்டு. இத் தொகை நூலில் பாட்டுக்கள் பலவும் அவரவர் வரலாற்று முறைபற்றித் தொகுக்கப்படாமையின் இஃது ஈண்டுக் காணப்படுகிறது. | கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித் தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின் வளைக்கை விறலியென் பின்ன ளாகப் | 5 | பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் | | வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப் படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப் புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி | 10 | வந்தனெ னெந்தை யானே யென்றும் | | மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு கறையடி யானை யிரியல் போக்கும் மலைகெழு நாடன் மாவே ளாஅய் களிறு மன்றே மாவு மன்றே | 15 | ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே | | பாணர் பாடுநர் பரிசில ராங்கவர் தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப் பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ டன்ன வாகநின் னூழி நின்னைக் | 20 | காண்டல் வேண்டிய வளவை வேண்டார் | | உறுமுரண் கடந்த வாற்றற் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே. (135) |
திணை : அது. துறை : பரிசிற்றுறை. அவனை அவர் பாடியது.
உரை : கொடு வரி - வழங்கும் கோடுயர் நெடு வரை - புலி இயங்கும் சிகர முயர்ந்த நெடிய மலையின்கண்; அரு விடர் சிறு நெறி ஏறலின் - ஏறுதற்கரிய பிளப்பின்கண் சிறிய வழியை யேறுதலான்; வருந்தி - வருத்தமுற்று; தடவரல் கொண்ட - உடல் வளைவைப் பொருந்திய; தகை மெல் ஒதுக்கின் - பயில அடியிட்டு நடக்கின்ற மெல்லிய நடையினையுடைய; வளைக் கை விறலி என் பின்னளாக - வளையணிந்த கையையுடைய விறலி என் பின்னே வர; பொன் வார்ந்தன்ன - பொன்னைக் கம்பியாகச் செய்தாற்போன்ற; புரி அடங்கு நரம்பின் - முறுக்கடங்கிய நரம்பினையுடைய; வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப - வரிப் பொருண்மையோடு பயிலும் பாட்டு நிலந்தோறு மாறி மாறி யொலிப்ப; படுமலை நின்ற பயம் கெழு சீறி யாழ் - படுமலைப் பாலை நிலைபெற்ற பயன் பொருந்திய சிறிய யாழை; ஒல்கல் உள்ளமொடு - தளர்ந்த நெஞ்சத்துடனே; ஒருபுடைத் தழீஇ - ஒரு மருங்கிலே யணைத்துக் கொண்டு; புகழ்சால் சிறப்பின் நின் நல்லிசை யுள்ளி - புகழ்தற்கமைந்த தலைமையையுடைய நினது நல்ல புகழை நினைந்து; எந்தை யான் வந்தனென் - என்னுடைய இறைவா யான் வந்தேன்; என்றும் - எந்நாளும்; மன்று படு பரிசிலர்க் காணின் - மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின்; கன்றொடு கறை யடி யானை இரியல் போக்கும் - கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும்; மலை கெழு நாடன் - மலையையுடைய நாடனே; மா வேள் ஆய் - மா வேளாகிய ஆயே; களிறும் அன்று - யாம் வேண்டியது யானையும் அன்று; மாவும் அன்று - குதிரையும் அன்று; ஒளிறு படைப் புரவிய தேரும் அன்று - விளங்கிய பொற்படையையுடைய குதிரையிற் பூட்டப்பட்ட தேரும் அன்று; பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர் - பாணரும் புலவரும் கூத்தர் முதலாயினாருமாகிய அவர்கள்; தமதெனத் தொடுக்குவராயின் - தம்முடைய பொருளென வளைத்துக்கொள்வாராயின்; எமது எனப் பற்றல் தேற்றா - அதனை யெம்முடைய தென்று அவர்பானின்றும் மீண்டு கைக்கொள்ளுதலைத் தெளியாத; பயங்கெழு தாய மொடு - பயன் பொருந்திய உரிமையோடு கூடி; அன்னவாக நின் ஊழி - மற்றும் அத்தன்மையவாக நின்னுடைய வாழ்நாட்கள்; நின்னைக் காண்டல் வேண்டிய அளவை - யான் வந்தது நின்னைக் காண்டல்வேண்டிய மாத்திரையே; வேண்டார் உறு முரண் கடந்த ஆற்றல் - பகைவரது மிக்க மாறுபாட்டை வென்ற வலியையுடைய; பொதுமீக் கூற்றத்து நாடு கிழவோய் - யாவரும் ஒப்பப் புகழும் நாட்டை யுடையாய் எ-று.
நாடு கிழவோய், யான் வந்தது, களிறு முதலியன வேண்டியன்று; நின்னைக் காண்டல் வேண்டிய அளவே; நின்னூழி அன்னவாக வெனக் கூட்டுக. அல்லதூஉம், யானை முதலாயினவன்றிப் பிறவற்றையும் பாணர் முதலாயினோர் தமதெனத் தொடுக்குவராயினென இயைத்துரைப்பினு மமையும். கொடுவரி: பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; ஆகுபெயருமாம்.
இனி, ததை மெல் லொதுக்கின் எனவும், வடிநவில் பனுவல் எனவும் ஒளிறு நடைப் புரவிய எனவும் பாடமோதுவாரு முளர். வடிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்ப வென்று கொண்டு வடித்தல் பயின்ற பாட்டை இசைதொறும் பெயர்த்து வாசிக்க வென்றுரைப்பாருமுளர். பொதுமீக் கூற்றம், பொதியிலுமாம்.
விளக்கம் : வளைந்த வரிகளை மேனி முழுதும் உடைமைபற்றிப் புலிக்குக் கொடுவரி யென்று பெயராயிற்று. வளைந்த வரிகளையுடைய புலியென விரிதல்பற்றி, இதனைப் பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யென்றும், இஃது இயற்பெயரன்மையான், ஆகுபெயருமாம் என்றும் கூறினார். இவ் வியைபு குறித்தே சில உரைகாரர், இதனை அன்மொழித்தொகை யாகுபெயரென்றும் கூறுகின்றனர். தடவரல் - வளைவு. வரிப் பொருண்மையாவது, அவரவர் பிறந்த நிலத்தன்மையும், பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையும் தோன்றக் கூறுதல். இது வரிக் கூத்து. வரிப்பாட்டாவது, தெய்வஞ் சுட்டியும் மக்கட் சுட்டியும் பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆற னியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வருவது. படுமலை ஒருவகைப் பண்; இது கைக்கிளை குரலாக நிறுத்துப் பாடுவது என்ப. யாழை ஒருபுடைத் தழீஇக் கொண்டதான் உள்ளம் தளர்ந்ததற்குக் காரணம் கூறாராயினும், நெடுவரையருவிடர்ச் சிறுநெறி யேறிவந்த தென்பது விறலிக்குக் கூறியவாற்றால் துணியப்படும். பரிசிலர் தொடக்கத்தே மன்றத்தே தங்கிப் பின்னரே மறுகுதோறும் சென்று பாடுபவாதலின், மன்றுபடு பரிசிலர் என்றார். தொடுத்தல், வளைத்துக் கொள்ளுதல். பொதுவாக யாவராலும் மேலாய சொற்களாற் பாராட்டப்படும் புகழ் பொதுமீக் கூற்ற மெனப்பட்டது; மீக்கூறுதல், புகழ்தல்; மீக்கூறும் மன்னனிலம் (குறள்-386). பொதியில், சான்றோர் யாவராலும் மீக்கூறப்படும் சிறப்புடையதாதலால், பொதுமீக்கூற்றம் பொதியிலுமாம் என்றார். பொதியிலாயினும் இமயமாயினும்...ஒடுக்கம் கூறார் உயர்ந்தோ ருண்மையின் என அடிகள் கூறுதல் காண்க. |