61. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய
நலங்கிள்ளி சேட்சென்னி

     சோழன் நலங்கிள்ளியின் மைந்தன் சேட்சென்னி யென்பவனாகும். இவன்
சிறந்த வீரன். இவன் இலவந்திகைப் பள்ளியில் இருந்து உயிர் துறந்தமைபற்றி
இவ்வாறு கூறப்படுகின்றான். இவ்வேந்தனை யணுகியிருந்து அவனால்
சிறப்பிக்கப்பட்டவராதலின், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
இவன் நாட்டு இயல்புகளையும் இவனுடைய விறலையும் விரித்துக் கூறுகின்றார்.
ஒருகால் இவனது வெற்றி நலத்தைச் சிலர் வினவினாராக, அவர்கட்கு
இப்பாட்டால் இக் குமரனார், இச் சென்னியைப் பகைப்போர் உளராயின்,
“அவர்க்கு எய்தக்கடவ துன்பத்தை யவர்தாமே யறிகுவர்; அவனொடு
வழுவின்றிப் பொருதவர் வாழக் கண்டதில்லை; அவனது அருள் பெற்றோர்
வருந்தக் கண்டது மில்லை” என்று அறிவுறுத்தினார். இவன் காலத்தே,
சேரநாட்டைக் குட்டுவன் கோதை ஆட்சி புரிந்தான். இவனுக்குச் சிறிது
முன்னோ பின்னோ குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்
சோழநாட்டையாண்டான். சோழர் படைத்தலைவன் ஏனாதி திருக்கிள்ளி
யென்பான், இவன் காலத்தும் சிறப்புற்று விளங்கினான்.

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமா ணெய்த லாம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கட் டுணியல்
5.புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனி சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்றலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழ முனையிற் றந்தையர்
10.குறைக்க ணெடும்போ ரேறி விசைத்தெழுந்து
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை யியறேர்ச் சென்னி
சிலைத்தா ரகல மலைக்குந ருளரெனில்
15. தாமறி குவர்தமக் குறுதி யாமவன்
எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர்
வாழக் கண்டன்று மிலமே தாழாது
திருந்தடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்ட லதனினு மிலமே. (61)

     திணை: வாகை. துறை: அசரவாகை. சோழன் இலவந்திகைப்
பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர்
மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

     உரை: கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் -
கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையையுமுடைய கடைசியர்; சிறு
மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் - சிறிய மாட்சிமையுடைய
நெய்தலை யாம்பலுடனே களையும்; மலங்கு மிளிர் செறுவின் - மலங்கு
பிறழ்கின்ற செய்யின்கண்ணே; தளம்பு தடிந்திட்ட - தளம்பு
துணித்திடப்பட்ட; பழன வாளைப் பரூஉக் கண் துணியல் -
பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை; புது நெல்
வெண் சோற்றுக் கண்ணுறையாக - புதிய நெல்லினது வெள்ளிய
சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு; விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி -
விலாப்புடைப் பக்கம் விம்ம வுண்டு; நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் -
நெடிய கதிரையுடைய கழனியிடத்துச் சூட்டை இடு மிட மறியாது
தடுமாறும்; வன் கை வினைஞர் புன்றலைச் சிறாஅர் - வலிய
கையையுடைய உழவர் புல்லிய தலையையுடைய சிறுவர்; தெங்கு
படுவியன் பழம் முனையின் - தெங்கு தரும் பெரிய பழத்தை
வெறுப்பின்; தந்தையர் குறைக்கண் நெடும்போ ரேறி - தந்தையருடைய
தலை குவியாமல் இடப்பட்ட குறைந்த இடத்தையுடைய நெடிய
போரின்கண்ணே யேறி; விசைத் தெழுந்து - உகைத் தெழுந்து;
செழுங்கோள் பெண்ணைப் பழம் தொட முயலும் - வளவிய கோட் புக்க
பனையினது பழத்தைத் தொடுதற்கு முயலும்; வைகல் யாணர் நன்னாட்டுப்
பொருநன் - நாடோறும் புதுவரு வாயையுடைய நல்ல நாட்டிற்கு
வேந்தனாகிய; எஃகு விளங்கு தடக்கை இயல் தேர்ச் சென்னி - வேல்
விளங்கும் பெரிய கையினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய
சென்னியது; சிலைத்தார் அகலம் மலைக்குநர் - இந்திர விற்போலும்
மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோர்; உள ரெனின் -
உளராயின்; தாம் அறிகுவர் தமக் குறுதி - தாமறிகுவர் தமக்குற்ற
காரியம்; யாம் - யாங்கள்; அவன் எழு வுறழ் திணி தோள் வழுவின்று
மலைந்தோர் - அவனுடைய கணைய மரத்தோடு மாறுபடும் திணிந்த
தோளைத் தப்பின்றாக மாறுபட்டோர்; வாழக் கண்டன்றும் இலமே -
வாழக்கண்டது மிலம்; தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் - விரைய
அவனது திருந்திய அடியை அடையவல்லோர்; வருந்தக் காண்டல்
அதனினும் இலமே - வருந்தக் காண்டல் அவ் வாழக்கண்டதனினும்
இலம் எ-று.

     தளம்பு என்றது சேறு குத்தியை. வழுவின்று மலைதலாவது வெளிப்பட
நின்று மலைதல்.

     விளக்கம்: தளம்பு. சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை யுடைத்துச்
செம்மை செய்யும் கருவி. அது செல்லுங்கால் சேற்றிற் கிடக்கும் வாளை மீன்
அறுபட்டுத் துண்டுபடுமாறு தோன்ற. “தளம்பு தடிந்திட்ட பரூஉக்கண் துணியல்”
என்றார். கண்ணுறை வியஞ்சனம்; சோற்றோடு துணையாய் உண்ணப்படும் காய்
கறிகள் உணவை மிக வுண்டதனால் மயங்கிச், சூட்டினை இடுமிட மறியாது
தடுமாறுதல் உண்டாயிற்று. செழுங்கோட் பெண்ணை யென்புழி, கோள் என்றது
குலை பொருந்தி எளிதிற் கொள்ளத்தக்க நிலையிலிருப்பதை யுணர்த்தி நின்றது.
உறுவது, உறுதி யென நின்றது; தபுவது தபுதி யென வருதல் போல. தாழ்த்த
வழி, சீற்றத்துக் கிலக்காய்க் கொல்லப்படுவ ரென்பது கருதி, “தாழாது” என்றார்.
அது, வாழக் காண்டல்.