28. சோழன் நலங்கிள்ளி

     உறையூர் முதுகண்ணன்   சாத்தனார்   இப்பாட்டின்கண், “மக்கட்
பிறப்பிற் காணப்படும் சிதடு முதுல் மருள் ஈறாகக் கூறப்படும் எண்வகை
எச்சங்களும் ஒருவர்க்குப் பிறப்பிற் பொருந்துவது குற்றம். கானத்தை
இடமாகக் கொண்டு  வாழும்   நின்   பகைவர்   போலாது,   கூத்தர்
ஆடுகளம்போலும் அகநாட்டை நீ யுடையை யாதலும், நீ பெற்ற செல்வம்
அறம் பொரு ளின்பங்களை ஆற்றுதற்காகவே யாகும்;அவற்றை ஆக்காமை
மேலே கூறிய குற்றம் பொருந்திய பிறப்புண்டாகப் பண்ணும்” என்று
சோழன் நலங்கிள்ளிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார்.

 சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்
கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்
5. பேதைமை யல்ல தூதிய மில்லென
 முன்னு மறிந்தோர் கூறின ரின்னும்
அதன்றிற மத்தையா னுரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம்
10. கானத் தோர்நின் றெவ்வர் நீயே
  புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே
15. அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றா மைந்நிற் போற்றா மையே. (28)

     திணை:  பொதுவியல்.   துறை:   இயன்மொழி    வாழ்த்து;
முதுமொழிக் காஞ்சியுமாம். அவனை அவர் பாடியது.

     உரை: சிறப்பில்  சிதடும்  - மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத
குருடும்; உறுப்பில் பிண்டமும் - வடிவில்லாத தசைத் திரளும்;கூனும்
குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட-;  வாழ்நர்க்கு-
உலகத்து உயிர் வாழ்வார்க்கு; எண் பேர்   எச்சம் என்ற  இவை
யெல்லாம் - எட்டு வகைப்பட்ட பெரிய எச்சமென்று சொல்லப்பட்ட
இவையெல்லாம்; பேதைமை யல்லது - பேதைத்   தன்மையுடைய
பிறப்பாவதல்லது; ஊதிய மில்லென - இவற்றாற் பயனில்லை யென;
முன்னும்  அறிந்தோர்   கூறினர் -  முற்காலத்தும்  அறிந்தோர்
சொன்னார்;  இன்னும் அதன் திறம் யான் உரைக்க வந்தது -
இன்னமும் அவ்வூதியத்தின் பாகுபாட்டை யான் சொல்ல வந்தது;
வட்ட வரிய  செம்பொறிச்  சேவல்  -  வட்டமாகிய  வரியை
யுடைத்தாகிய   செம் பொறியையுடைய காட்டுக் கோழிச் சேவல்;
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் -தினைப்புனங் காப்போரைத்
துயிலுணர்த்துவதாகக்   கூவும்;  கானத்தோர்  நின்  தெவ்வர் -
காட்டின்கண் உள்ளோர் நின்னுடைய பகைவர்; நீயே - நீ தான்;
புறஞ்சிறை மாக்கட்கு -வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு;
அறம் குறித்து - அறத்தைக்   கருதி;  அகத்தோர் புய்த்  தெறி
கரும்பின் விடு கழை - அகத்துள்ளோர்  தாம் பிடுங்கி யெறியும்
கரும்பாகிய போகடப்பட்ட கழை; தாமரைப்  பூம் போது சிதைய
வீழ்ந்தென - வாவியகத்துத் தாமரையினது  பொலிந்த பூச் சிதற
வீழ்ந்ததாக; கூத்தர் ஆடு களம் கடுக்கும் அக நாட்டை - அது
கூத்தர் ஆடு களத்தை யொக்கும் உள்ளாகிய நாட்டையுடையை;
அதனால் -  ஆதலான்; அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும்  நின் செல்வம்   - அறனும்   பொருளும்   இன்பமு
மென்னப்பட்ட மூன்றும் செய்வதற்  குதவும்  நினது   செல்வம்;
பெரும-; ஆற்றாமை  நிற்   போற்றாமை   உதவா  தொழிதல்
நின்னைப் பாதுகாவாமை எ-று.


     பிண்ட மென்பது மணை போலப் பிறக்குமது. மா வென்பது விலங்கு
வடிவாகப் பிறக்குமது. மரு ளென்பது அறிவின்றியே மயங்கி யிருக்குமது.
ஊதிய மென்பது, அறம் பொரு ளின்பங்களை; அன்றி அறமென்பாரு முளர்.
நிற் போற்றாமை யென்ற கருத்து, சிதடு முதல் அறிவின்மை பிறப்பொடு
கூடாதவாறு போல நின் செல்வமும் அற முதலியன செய்தற் கேற்றிருப்பச்
செய்யாமையாகிய  அறிவின்மை, மக்கள் யாக்கையிற்   பிறந்தும் பயனில்
பிறப்பாகப் பண்ணுதலால்  நினக்கு  வரும்  பொல்லாங்கைப் போற்றாமை
யென்பதாம். கானத்தோர் நின் பகைவ ரென்றதனாற் பகையின்மை தோற்றி
நின்றது.  மாவும்   மருளு  முளப்படச்  சிதடு  முதலாகப்  பிறப்பொடு
கூட்டப்படாத   பெரிய  எச்சமெனப்பட்ட  எட்டுமெனக்   கூட்டியுரைப்
பினுமமையும்.இஃது அறஞ் செய்யாதானை அறஞ் செய்கவெனக் கூறியவாறு.
அதன்றிற மென்பதற்கு அப் பேதைமை யென்றாக்கி, அஃது உண்டானால்
வரும்பொல்லாங்கும், அது போனால் வரும் நன்மையு மென்றுரைப்பாரு
முளர்.

     விளக்கம்: சிதடு  -  குருடு.  “கண்ணிற்  சிறந்த  உறுப்பில்லை”
என்பராதலால், கண்ணிலாக் குருட்டினைச் “சிறப்பில் குருடன்” என்றார்;
உரைகாரர், குருடு மக்கள் பிறப்புக்குச் சிறப்புத் தருவதன் றென்பதுபட,
“மக்கட்  பிறப்பிற்  சிறப்பில்லாத  குருடு”  என்பர். கை கால் முதலிய
உறுப்புக்கள்  தோன்றுதற்கு  முன்பே கருச் சிதைதலால் பிறக்கும் ஊன்
பிண்டத்தை, “உறுப்பில் பிண்டம்” என்றும், அது “வடிவ இல்லாததசைத்
திர”ளென்றும்  கூறினார்.  “ஊன்  தடி  பிறப்பினும்”  (புறம்: 74) எனச்
சேரமான்  கணைக்கா  லிரும்பொறை  கூறுவது காண்க. எச்சம், மக்கட்
பிறப்புக்குரிய இலக்கணம் எஞ்சவுள்ளன. ஈண்டுக் கூறிய எண்வகைக்
குறைபாடுமின்றி  யிருக்கும்  பிறப்பு மக்களது நற்பிறப்பென வறிக. இக்
குறையுடைய  மக்கள்  பேதைத்தன்மை  யுடையரென்பார், “பேதைமை”
யென்பதற்குப்  “பேதைத்தன்மையுடைய பிறப்பு” என்றார். “பேதைமை
யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண்,டூதியம் போகவிடல்” (குறள்.831)
என்பதனால், “பேதைமை  யல்லது  ஊதியம்  இல்” லென்றார். கோழி,
விடியலில்  எழுந்து  கூவி,  உறங்குவோரைத்  துயிலுணர்த்தும்  என்ற
இயல்புபற்றி,“ஏனல் காப்போர் உணர்த்திய கூவும்” என்றார்.உணர்த்துதல்,
துயில்  உணர்த்துதல்.  வைகறை வந்தன்றா லெனவே, “குக்கூ வென்றது
கோழி” (குறுந்.157) என்று பிறரும் கூறுதல் காண்க. சிறைப்புறம் என்பது
புறஞ்  சிறையென  வந்தது.  கழை,   இக்காலத்துக்   கட்டையெனவும்
கழியனெவும்  வழங்கும்.  கூத்தர் பல்வகைப் பூவும் அணியும் அணிந்து
ஆடுவர்;ஆடுங்கால் அவை உதிர்ந்து கிடக்கும் இடம்,இங்கே உவமமாகக்
கூறப்படுகிறது. மணை,  ஊன்,  மக்கட்  பிறப்பாற்  பெறும் பயன் அறம்
பொருளின்பங்களாதலால், அப்பிறப்பிற் குறைந்தவர் அவற்றை யிழத்தலின்,
அற முதலிய ஊதிய மெனப்பட்டன. ஊதியமாவது அறமொன்றுமே யெனக்
கொள்பவரும்   உண்டென்றற்கு, “அன்றி.......உளர்”  என்றார்.   பகை
கொண்டிருந்தால் நாட்டிலிருந்து குறும்பு செய்வராதலின், செய்யாது கானத்
துறைதல் கொண்டு பகையில்லை யென்பது தெளிவாயிற்று. அதன் திறம்
என்றவிடத்து, அது  எனச்  சுட்டப்பட்டது ஊதிய மெனக்  கொள்ளாது
பேதைமை யென்று கொள்பவரு முண்டென்பதை, “அதன் நிறம்.......உளர்”
என்றார்.