27. சோழன் நலங்கிள்ளி இச் சோழ மன்னன் காவிரி பாயும் சோழநாட்டுக் குரியவன்; விம்மிய உள்ளம் படைத்தோர்க்கு அரசுரிமை தகுமேயன்றி உள்ளத்தாற் சிறியவர்க்குப் பொருந்தாதென்னும் கொள்கையுடையவன். இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி யென்றும் கூறுவர். இவனுக்கு உடன்பிறந்தான் ஒருவன் உண்டு; அவன் பெயர், சோழன் மாவளத்தான் என்பது. இவன் காலத்தே சோழநாட்டின் உறையூர்ப் பகுதிக்கு வேந்தாய் உறையூரை இடமாகக்கொண்டு சோழன் நெடுங்கிள்ளி யென்பான் ஆண்டான். அவற்கும் இந் நலங்கிள்ளிக்கும் பகைமையுண்டாயிற்று. அக்காலத்தே, பகைவர் ஈயென விரப்பின் இன்னுயிரும் ஈகுவேன்; அரசுரிமையும் ஒரு பொருளன்று; அவர் அதனை என்னோடு பகைத்துப் பெறக் கருதின் கழை தின்னும் யானையது காலகப்பட்ட முளைபோலக் கெடுத்தொழிப்பேன் என்று இவன் கூறும் வஞ்சினம் இவனது மனமாட்சியைப் புலப்படுக்கும் ஒருகால் நெடுங்கிள்ளி ஆவூரிலிருந்த காலத்து, இவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு வருத்தினான்; அவன் பின் உறையூர்க்குச் சென்று தங்கினானாக, நலங்கிள்ளி உறையூரைத் தான் முற்றுகையிட்டுக் கொண்டான்.கோவூர்கிழார் என்னும் சான்றோர் தகுவன கூறி இருவர்க்கும் சந்து செய்தார். பின்பு நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரித்தாகக் கொண்டு, தனது வரையா ஈகையால் புகழ் மேம்பட்டான்; அக்காலத்தே பாண்டிநாட்டிற் சிறப்புற்றிருந்த மலை அரண்கள் ஏழினை யெறிந்து, அவற்றிடத்தே தன் புலிப்பொறியை வைத்தான்.இவனது வென்றி கிழக்கே கீழ்க்கடலும் மேற்கே குடகடலுமாகிய இரண்டிற்கும் இடையே பரந்து மேலோங்கக் கண்ட வடநாட்டரசர், தங்கள் நாடு நோக்கி இச்சோழன் வருவானோ என நடுங்கித் துஞ்சாக்கண்ணராயினர். இவனைக் கோவூர்கிழார், ஆலத்தூர் கிழார் என்ற இருவரும் பாடியுள்ளனர். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இது முதல் நான்கு பாட்டுக்களால் இவனது சிறப்பியல்பை எடுத்தோதுகின்றார்.
இந்த ஆசிரியரும் உறையூரைச் சேர்ந்தவர். முதுகண்ணன் என்பது இவர் தந்தை பெயர். புலவர் பாடும் புகழுடையோர் வலவனேவா வானவூர்தியேறித் துறக்கஞ் செல்வரென்பதும், திங்கள் உலகில் உயிர்கள் பிறத்தலும் இறத்தலும் வளர்தலும் தேய்தலும் அறியா மடவோரும் அறியக் காட்டு மென்பதும், அறமும் பொருளும் இன்பமும் செய்தல் அறத்தின் பயனென்பதும், நாடகமே யுலகம் என்பது இவருடை புலமைப் பண்பை நன்கு விளக்குகின்றன.
இப் பாட்டின்கண், விழுமிய குடியிற் பிறந்து அரசு வீற்றிருந்தோர் பலருள்ளும் புலவர் பாடும் புகழ் பெற்றவர் சிலரே; புகழ் பெற்றவர் வலவன் ஏவா வானவூர்தி யேறி விண்ணுலகு செல்வர் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன்; வளர்தலும் தேய்தலும் பிறத்தலும் இறத்தலும் உடையது உலகம்; இவ்வுலகத்தில ் வருந்தி வந்தோர்க்கு வேண்டுவன அருளும் வன்மைதான், வென்றிக்கு மாண்பு; நீ அதனைச் செய்க என்று அறிவுறுத்துகின்றார். | சேற்றுவளர் தாமரைப் பயந்த வொண்கேழ் நூற்றித ழலரி னிரைகண் டன்ன வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை | 5. | உரையும் பாட்டு முடையோர் சிலரே | | மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வூர்தி எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக் | 10. | கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி | | தேய்த லுண்மையும் பெருக லுண்மையும் மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும் அறியா தோரையு மறியக் காட்டித் திங்கட் புத்தே டிரிதரு முலகத்து | 15. | வல்லா ராயினும் வல்லுந ராயினும் | | வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை யாகுமதி யருளிலர் கொடாமை வல்ல ராகுக கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே. (27) | திணை : பொதுவியல். துறை: முதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
உரை: சேற்று வளர் தாமரை பயந்த - சேற்றின்கண்ணே வளரும் தாமரை பூத்த; ஒண் கேழ் நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன - ஒள்ளிய நிறத்தை யுடைத்தாகிய நூறாகிய இதழையுடைய மலரினது நிரையைக் காண்டாற்போன்ற; வேற்றுமையில்லாத விழுத்திணைப் பிறந்து - ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியின்கட் பிறந்து; வீற்றிருந்தோரை எண்ணுங் காலை - வீற்றிருந்த வேந்தரை யெண்ணுங் காலத்து; உரையும் பாட்டும்உடையோர் சிலர் - புகழும் பாட்டும் உடையோர் சிலர்; மரையிலை போல மாய்ந்திசினோர் பலர்- தாமரையினது இலையை யொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்; புலவர் பாடும் புகழுடையோர் - புலவராற் பாடப்படும் புகழை யுடையோர்; விசும்பின்-ஆகாயத்தின்கண்; வலவன் ஏவா வானவூர்தி எய்துப என்ப தம் செய்வினை முடித்து - பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவாரென்று சொல்லுவார் அறிவுடையார் தாம் செய்யும் நல்வினையை முடித்து; எனக் கேட்பல் - என்று சொல்லக் கேட்பேன்; எந்தை - என்னுடைய இறைவ;சேட்சென்னி நலங்கிள்ளி-; தேய்த லுண்மையும் - வளர்ந்த தொன்று பின் குறை தலுண்டாதலும்;பெருக லுண்மையும் - குறைந்த தொன்று பின் வளர்த லுண்டாதலும்; மாய்த லுண்மையும் - பிறந்த தொன்று பின் இறந்த லுண்டாதலும்; பிறத்த லுண்மையும் - இறந்த தொன்று பின் பிறத்த லுண்டாதலும்; அறியாதோரையும் அறியக் காட்டி -கல்வி முகத்தான் அறியாத மடவோரையும் அறியக் காட்டி;திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து - திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற தேயத்தின்கண்; வல்லாராயினும் - ஒன்றை மாட்டாராயினும்; வல்லுந ராயினும் - வல்லாராயினும்; வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி - வறுமையான்வருத்தமுற்று வந்தோரது உண்ணாத மருங்கைப் பார்த்து; அருள் வல்லை யாகுமதி -அவர்க்கு அருளி வழங்க வல்லை யாகுக; கெடாத துப்பின் நின் பகை யெதிர்ந்தோர் -கெடாத வலியையுடைய நினக்குப் பகையாய் மாறுபட்டோர்; அருளிலர் - அருளிலராய்; கொடாமை வல்ல ராகுக - கொடாமையை வல்லராகுக எ-று.
நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர் சிலரென இயையும். நிரைகண் டன்ன விழுத்திணையென் றுரைப்பினுமையும். அருளிலர் கொடாமை வல்ல ராகுக வென்றதனாற் பயன்,அவையுடையோர் தத்தம் பகைவரை வெல்வராதலால் பகை யெதிர்ந்தோர் அவையிலராக வென்பதாம். செய்வினை முடித்து வானவூர்தி எய்துப வென இயையும்.
விளக்கம்: நூறாகிய இதழ் என்ற விடத்து நூற்றென்பது அப்பொருளுணர்த்தும் எண்ணைக் குறியாது பல வென்னும் பொருள் குறித்து நின்றது. இதனை யறியாதார் வடமொழியில் சததளம் என மொழி பெயர்த்துக் கொண்டனர்; நூற்றிதழ்த் தாமரைப்பூ (ஐங் 20) என்று வேறு சான்றோரும் கூறுவர். வேற்றுமை செய்வன உயர்வு தாழ்வுகளேயாதலின், வேற்றுமையில்லா வென்பதற்கு ஏற்றத் தாழ்வில்லாத என்றுரைத்தார். விழுமிய குடிக்கு விழுப்பம் தருவது உயர்வு தாழ்வு கருதாமையே என்பதற்கு வேற்றுமை யில்லா விழுத்திணை என்பது வேற்றுமை மலிந்த இக்காலத்தமிழ்மக்கள் குறிக்கொண்டு போற்றத்தக்கதாகும். உரை புகழ்.இனிப் பரிமேலழகர், உரையாவது எல்லாராலும் புகழப்படுவதென்றும், பாட்டாவது சான்றோர் பாடும் புகழ் என்றும் கொண்டு, புகழ்தான் உரையும் பாட்டு மென இருவகைப்படும். என்பர். உரையும் பாட்டும் பெற்றவர்,பெற்றவுடனேவலவ னேவா வானவூர்தி எய்துப என்பதன்று; செய்தற்குரியநல்வினையைச் செய்து முடித்த பின்பே அவ்வூர்தியில் விசும்பெய்துப என்பார், செய்வினை முடித்து என வேறு வைத்து வற்புறுத்தினார். புலவர்பாடும் புகழ்ப் பயனை இவ்வாறு அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன் என்பது விளங்க என்ப என்றும், எனக் கேட்பல் என்றும் கூறினார்.வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை யெண்ணுங்கால்நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர்சிலர்என இயைத்தல் வேண்டுமென்பது உரைகாரர் கருத்து. இவ்வாறன்றி, நிரைகண் டன்ன விழுத்திணை யென்றும் கிடந்த படியே கொண்டாலும் பொருந்து மென்பதற்காக, நிரை........அமையும் என்றார். அவை யுடையோர் தத்தம் பகைவரை வெல்வர் என்ற விடத்து, அவை யென்றது அருளும் கொடையும் குறித்து நின்றது; அருளும் கொடையு முடையவர் வெல்வ ரென்பதாம். |