179. நாலை கிழவன் நாகன் பாண்டி நாட்டிலுள்ள நாலூரென்னு மூர்ப்பெயர் நாலை யென மரீஇயிற்று. இந்நாலூர் அருப்புக்கோட்டை நாட்டின்கண் உள்ளது; திருமுனைப்பாடி நாட்டிலுள்ள நாலூர் (A.R. 513/1921) இந் நாகனுக்குரியதன்று. அவ்வூர்க்குத் தலைவனான நாகன், நாலை கிழான் நாகன் என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவன் பாண்டி வேந்தனுக்குத் துணையாய் நின்று, படை வேண்டுமிடத்துப் படைத்துணை புரிந்தும், வினை செயல் வேண்டுமிடத்து அதற்குரிய கருத்துக்களை வழங்கியும் விளங்கினான். இச்செயல்களால் இவற்குப் பெருஞ்செல்வ முண்டாக, அதனை இவன் பரிசிலர்க்கு வழங்கி நற்புகழ் நிறுவினான். இவன் காலத்திருந்த பாண்டியன் பெயர் தெரிந்திலது. அவன் மண் பல தந்த பாண்டியன் எனப்படுவதுபற்றி, அவனை நிலந்தரு திருவிற் பாண்டிய னெனக் கருதுபவரும் உண்டு. நிலந்தரு திருவிற் பாண்டியன் கடல்கோட் காலத்துக் குமரிக்கு வடக்கிலுள்ள தமிழகத்துக் குடியேறிய பரதவர்க்குத் தலைமை தாங்கிப் போந்து அந்நிலத்தை வென்று தந்தவன் அவனுக்குப் பின்பல வேந்தர் தோன்றிப் பாண்டி நாட்டைச் செம்மைப்படுத்தி மதுரையைத் தலைநகராகக் கொண்டனர். இவ்வாறு பாண்டிநாடு செவ்வையுற நிறுவப்பட்டபின்,இப்பாட்டிற் கூறப்பட்ட பாண்டியன் உளனாதலின் இவனை நிலந்தரு திருவிற் பாண்டிய னெனக் கோடல் பொருந்தாது.
நாலை கிழவனான நாகனைக் காணப்போந்த வடநெடுந்தத்தனார் என்னும் சான்றோர், தமக்கு இந்த நாகனைப்பற்றிப் பலரும் கூறிய செய்தியை இப்பாட்டின்கண் வைத்துப் பாடி, இவன் தந்த சிறந்த பரிசினைப் பெற்று இன்புற்றார். இதன்கண், இவ்வுலகில் பாரி முதலிய வள்ளல்கள இறந்தொழிந்தனர்; இரப்போர் குறிப்பறிந் தீயும் வேந்தரும் இலராயினர்; இந்நிலையில் வறுமையுற் றிரக்கும் என் மண்டையை ஈத்து மலர்ப்பவர் யாவருளர் எனப் பரிசிலரைக் கேட்க, அவர் பலரும் பாண்டியன் மறவனான நாலை கிழான் நாகன் உளன்; அவன் படை வேண்டும்வழி வாளுதவியும், வினை யாராய்ச்சி வேண்டும்வழி அறிவுதவியும் வேந்தனுக்குத் துணைபுரிவன். தோலாத நல்ல புகழையுடையவன்; அவன்பாற் செல்க என்றனர்; அதனால் யான் அவன்பாற் சென்ற பரிசில் பெறுவேனாயினேன் என்ற கருத்தமைத்துள்ளார். வடநாட்டினின்றும் தென்னாட்டிற் குடிபுகுந்த பழங்குடியிற் றோன்றியதுபற்றி, நெடுந்தத்தனார், வடநெடுந்தத்தனார் என்று கூறப்படுகின்றார். | ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த | 5 | திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன் | | படைவேண்டுவழி வாளுதவியும் வினைவேண்டுவழி யறிவுதவியும் வேண்டுப வேண்டுப வேந்தன் றேஎத் தசைநுகம் படாஅ வாண்டகை யுள்ளத்துத் | 10 | தோலா நல்லிசை நாலை கிழவன் | | பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவே னாகற் கூறினார் பலரே. (179) |
திணையுந் துறையு மவை. நாலை கிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது.
உரை: ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென - உலகத்தின் மேல் வண்மையுடையோர் இறந்தாராக; ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை - பிறர்பால் ஏலாது கவிழ்ந்த எனது இரத்தலையுடைய மண்டையை; மலர்ப்போர் யார் என வினவலின் - ஏற்கும் பரிசு இட்டுமலர்த்த வல்லார் யார் என்று கேட்டலின்; மலைந்தோர் விசி பிணி முரசமொடு - தன்னொடு மாறுபட்டோரது வலித்துப் பிணிக்கப்பட்ட முரசத்தோடு; மண் பல தந்த - மண் பலவற்றையும் கொண்ட; திருவீழ்நுண் பூண் பாண்டியன் - மறவன் திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில் பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன்; படை வேண்டுவழிவாள் உதவியும் - அவனுக்குப் படைவேண்டியவிடத்து வாட்போரையுதவியும்; வினை வேண்டுவழி அறிவு உதவியும் - அரசியற்கேற்ற கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலொடு நின்று அறிவு உதவியும்; வேண்டுப வேண்டுப - இவ்வாறு வேண்டுவன பலவும்; வேந்தன் தேஎத்து - அவ்வரசனிடத்துதவி; நுகம் அசை படாஅ ஆண்டகை உள்ளத்து - தான் பூண்ட நுகம் ஒரு பாற் கோடித் தளராமற் செலுத்தும் பகடுபோல ஆண்மையினும் சூழ்ச்சியினும் தளராத ஆண்மைக் கூறுபாடு பொருந்திய ஊக்கத்தினையும்; தோலா நல்லிசை நாலை கிழவன் - தோலாத நல்ல புகழையுமுடைய நாலை கிழவன்; பருந்து பசி தீர்க்கும் நற்போர் திருந்து வேல் நாகன் - பருந்தினது பசி தீர்க்கும் நல்ல போரைச் செய்யும் திருந்திய வேலையுடைய நாகனை; பலர் கூறினர் - பலரும் சொன்னார் எ-று.
பருந்து பசி தீர்க்கும் வேல் என இயையும்.
விளக்கம்: மண்டை, உண்கலம். அடி குவிந்து வாய்விரிந்திருப் பதனாலும், ஏற்கும்போது அதன் வாய் தோன்ற ஏந்துவதும், ஏலாப் போது கவிழ்த்து வைப்பதும் இயல்பாதல்பற்றி, ஏலாது கவிழ்ந்த மண்டை யென்றும், இட்டு மலர்ப்போர் என்றும் கூறினார். நாகனைப் பாடப் போந்தவர், அவன் இறைவனான பாண்டியனை, மண்பல தந்த பாண்டியன் என்றது, அங்ஙனம் அவன் மண்பல கோடற்கும் இந்நாகனே படை வேண்டுவழி வாளும், வினைவேண்டுவழி அறிவும் உதவினானென்பது வற்புறுத்தற்கு. அசைநுகம் படாஅவென்றது குறிப்புருவகமாதலின், அதனை விரித்து, தான் பூண்ட நுகம் ஒருபாற் கோடித் தளராமல் செலுத்தும் பகடுபோல ஆண்மையினுஞ் சூழ்ச்சியினும் தளராதஎன்று வரை கூறினார். தீர்க்கு மென்னும் பெயரெச்சம் நற்போரைக் கொள்ளாது வேலைக்கொண்டு முடியும் என்பார், பருந்து பசி தீர்க்கும் வேல் என இயையும்என்றார். பருந்துபசி தீர்க்கும் வேல், திருந்து வேல் எனவும், நற்போர் நாகன் எனவும் இயையும். |