154. கொண்கானங் கிழான்

     கொண்கான நாடு என்பது பிற்காலத்தே கொங்கண நாடு என
மருவி வழங்குவதாயிற்று. இது சேலம் கோயமுத்தூர் மாநாடுகளின்
கீழ்ப்பகுதி நாடாகும். இந் நாட்டுக் கொங்கு வேளாளார் குடியிற் சிறந்த
வள்ளலாக விளங்கினவன் இக் கொண்கானங் கிழான். இந் நாடு பொன்வளம்
சிறந்தது. இதனால் இதனைப் “பொன்படு கொண்கானம்”(நற்.391) என்று
சான்றோர் பாராட்டியுள்ளனர். மேனாட்டு ஆராய்ச்சியாளர் இப் பகுதியைக்
கண்ணுற்று, “ஒருகாலத்திற் பொன் வளஞ் சிறந்திருந்து இதுபோது குறைந்து
போயிற்’’*றென்று கூறியுள்ளார்.

     இக் கொண்கானங்கிழான் பெருஞ் செல்வத் தோன்றல்
அல்லனாயினும்தன்பால் நாடிவரும் பரிசிலர்க்கு இயன்றன நல்கி
இன்புறுத்தும் ஈகை யியல்பினன். ஈகைக்கேற்ற தாளாண்மையும் அதன்
சிறப்புக் காக்கமாகும் தோளாண்மையும் இவன்பால் மிக்கிருந்தமையின்
புலவர் பலரும் இவனைப் பாடிப் பாராட்டினர்.

ஆசிரியர் மோசிகீரனார் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்
பொறையால் நன்கு மதித்துப் பேணப்பெற்ற பெருமையுடைய ரென்பதை
முன்பே (புறம்.50) கண்டுள்ளோம். இத்தகைய பெரும் புலவர்
இக்கொண்கானங் கிழானையும் பாடிப் பரவினரெனின், இவனது சிறப்புத்
தெளிய வுணரப்படும். இவன்பால் மோசிகீரனார் வரக் கண்ட இப்பெரியோன்,
“பெருவேந்தராற் பேணிப் பாராட்டப்படும் பெருந் தகுதி வாய்ந்த தாங்கள்
மிக எளிய என்பால் எழுந்தருளி எனது ஈகையினைப் பாராட்டுவது என்
நல்வினைப் பயனே”என்றுரைத்து, “இவர் வரிசைக் கேற்ப யான் வழங்கும்
வளம் பெற்றிலேனே”எனத் தனக்குள் எண்ணமிடலானான். அதனை
யுணர்ந்துகொண்ட கீரனார், “பரந்த கடலருகே செல்லினும், நீர் வேட்கை
கொண்ட மக்கள் சிற்றூறலை நாடிச் செல்வர்; அதுபோல், புலவர் வேந்தராற்
பெரிதும் பேணப்படுவாராயினும் வள்ளியோரை நாடிச் செல்வது அவர்க்
கியல்பு; அவ்வியல்பே பற்றி யான் நின்னை யுள்ளி வந்தேன்; ஈ யென
இரத்தல் அரிதே தவிர, நின் ஆண்மையினையும் நின் கொண்கானத்தையும்
பாடுதல் எனக்கு எளிது; மேலும், பெற்றது சிறிதாயினும் அதுவே ஊதியமாகக்
கருதுபவன் யான்”என்ற கருத்துப்பட இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

 திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்த ரதுபோல்
அரச ருழைய ராகவும் புரைதபு
5 வள்ளியோர்ப் படர்குவர் புலவ ரதனால்
 யானும், பெற்ற தூதியம் பேறியா தென்னேன்
உற்றென னாதலி னுள்ளிவந் தனனே
ஈயென விரத்தலோ வரிதே நீயது
நல்கினு நல்கா யாயினும் வெல்போர்
10எறிபடைக் கோடா வாண்மை யறுவைத்
 தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல விழிதரு மருவிநின்
கொண்பெருங் கானம் பாடலெனக் கெளிதே.
(154)

     திணை: அது. துறை: பரிசிற்றுறை. கொண்கானங் கிழானை
மோசிகீரனார் பாடியது.

     உரை: திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும் -
திரை   யலைக்கும்  கடலினது    கரைக்கண்  அணியவிடத்தே
போகினும்;    அறியுநர்க்    காணின் -  அறிவாரைக்  காணின்;
வேட்கைநீக்கும் சின்னீர் வினவுவர் மாந்தர் - நீர் வேட்கையினைத்
தணிக்கும் சிறிய நீரைக் கேட்பர் உலகத்து மக்கள்; அது போல் -
அது போல்; அரசர்  உழைய ராகவும் வேந்தரிடத்தராகவும்;
புரைதபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர் - குற்றந்தீர்ந்த
வள்ளியோரை நினைத்துச் செல்வர் அறிவுடையோர்; அதனால்-;
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் - யானும்
பெற்றதனைப் பயனாகக் கொண்டு பெற்ற பொருள் சிறிதாயினும்
இவன் செய்தது என்னென்று இகழேன்; உற்றனென் ஆதலின் -
வறுமையுற்றே னாதலின்; உள்ளி வந்தனென் - நின்னை நினைத்து
வந்தேன்; ஈ யென இரத்தல் அரிது - எனக்கு ஈயாயென்று இரத்தல்
அரிது; நீ அது நல்கினும் நல்கா யாயினும் - நீ அப் பரிசிலைத்
தரினும் தாராயாயினும்; வெல் போர் எறி படைக்கு ஓடா ஆண்மை
- பூசலிடத்து எறியும் படைக்கலத்துக்குப் புறத்து அடியிடா
ஆண்மையையும்; அறுவைத் தூவிரி கடுப்பத் துவன்றி - துகிலினது
தூய விரியை யொப்ப நெருங்கி; மீ மிசைத் தண் பல இழிதரும்
அருவி - உச்சியினின்றும் பலவாய் இழியும் குளிர்ந்த
அருவியையுடைய; நின் கொண்பெருங் கானம் பாடல் எனக்கு
எளிது - நினது கொண்கானத்தையும் பாடல் எனக்கு எளிது எ-று.

     புரை தப வென்று பாடமோதிப் புரைதபப் படர்குவ ரெனினு
மமையும். நீ அது நல்கினும் நல்காயாயினும் ஈயென விரத்தல் எனக்கு
அரிது; நினது ஆண்மையையும் கொண்பெருங் கானத்தையும் பாடல்
எனக்கெளிதெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     விளக்கம்: கடற்கரையில் நிற்பினும், கடல் நீர் வேட்கை
தணிவிக்கும் இயல்பிற் றன்மையின், இனிய நீர்நிலை இருக்குமிடத்தையறிந்த
வரைக் காணின், அதனை யடைதற்குரிய நெறியைக் கேட்பர் ஆதலின்,
“அறியுநர்க் காணின்”என்றார். பெருஞ் செல்வம் படைத்த வேந்தராயினும்
அவர்பால் புரை தீர்ந்த வண்மையில்லையாயின் புலவர்,
அதனையுடையாரையே நாடிச் செல்வரென்பர், “புரைபு வள்ளியோர்ப்
படர்குவர் புலவர்”என்றார். பெற்றது ஊதியம் என்புழி, என ஒரு சொல்
வருவித்து, எனக்கொண்டு எனப் பொருள் உரைத்துக் கொள்க. பெற்றது
எத்துணையாயினும் அதன் நிறைவு குறைவு காணேன் என்பார், “பேறு
யாது என்னேன்”என்றார். அங்ஙனம் காணாமைக்குக் காரணம் தானுற்ற
வறுமையே யென்பார், “உற்றனெனாதலின்”என்றார். நின்பாற் போந்த
எனக்கு இனி எளிமையும் அருமையுமாவன யாவையெனின், ஈயென
இரத்தல் அருமை, நின் பெருமையையும் நின் கொண்கானத்தையும்,
பாடுதல் அருமையன்று; எளிமை என்பாராய், “எறிபடைக் கோடா
ஆண்மையும் கொண்பெருங் கானமும் பாடலெனக் கெளிதே”என்று
கூறுகின்றார். புரைதபப் படர்குவ ரென இயைப்பின், வறுமைத் துயர்
கெடுமாறு கருதி வள்ளியோரை நினைந்து செல்வரென வுரைக்க.              


* நில நூலாராய்ச்சிப்  பேராசிரியர்  பால் (Prof. Ball, F.R.S.)  என்பார்,
பேராசிரியர் லாசன் (Lassen), பேராசிரியர் ஹீரன் (Heeren) முதலியோர்
கூற்றை மறுத்துச் சங்க இலக்கியம் கூறுமாறு தென்னாட்டிற் பொன் வளம்
ஒருகாலத்து மிக்கிருந்த தென்பதைப் பலவகையால் நிறுவுகின்றார். (Vide
Asiatic Nations, Bohm edm, Voll.II, P.32 Indian Antiquary, August, 1884).