116.வேள் பாரி பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலப்படுத்திய கபிலர், அவர்களைத் தக்க அரச குமாரர்கட்கு மணம்புரிவித்தல் வேண்டித் தமிழகத்துக் குறுநில மன்னர் பலரையும் காணச் சென்றார். செல்கையில் அடிக்கடி பாரியினது பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் காண்பாராயினர்; அந்நாடும் கெட்டுப் புன்புலமாயிற்று; மலையும் பொலிவிழந்தது. அவற்றின் காட்சி அவர் காணுந்தோறும் அவர்க்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. இந்நிலையில் ஒருகால் பறம்பு நாட்டைக் கண்டார். பாரியிருந்த காலத்தே நாட்டு மகளிர் வரைமே லேறியிருந்து நாட்டில் பாரியொடு பொருதல் வேண்டி வரும் வேந்தர்களின் குதிரைகளை யெண்ணிப் பார்ப்பது வழக்கம்; இப்போது அஃதொழிந்தமையின் அவர்கள் அந்நாடு வழியே செல்லும் உமணர்கள் கொண்டேகும் உப்பு வண்டிகளை யெண்ணிப் பார்ப்பது கண்டார். அதனை இப்பாட்டின்கண் உரைத்துள்ளார். | தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல் ஏந்தெழின் மழைக்க ணின்னகை மகளிர் புன்மூசு கவலைய முண்மிடை வேலிப் | 5 | பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட் பீரை நாறிய சுரையிவர் மருங்கின் ஈத்திலைக் குப்பை யேறி யுமணர் உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ நோகோ யானே தேய்கமா காலை | 10 | பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும் பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந் துகளவும் கலையுங் கொள்ளா வாகப் பலவும் கால மன்றியு மரம்பயம் பகரும் யாண ரறாஅ வியன்மலை யற்றே | 15 | அண்ண னெடுவரை யேறித் தந்தை பெரிய நறவிற் கூர்வேற் பாரிய தருமை யறியார் போரெதிர்ந்து வந்த வலம்படு தானை வேந்தர் பொலம்படைக் கலிமா வெண்ணு வோரே. (116) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை : தீ நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த - இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த; குவளைக் கூம்பவிழ் முழு நெறி புறள் வரும் அல்குல் - செங்கழு நீரினது முகை யவிழ்ந்து புறவித ழொடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும்;ஏந்தெழில் மழைக்கண் - மிக்க அழகையுடைய குளிர்ந்த கண்ணினையும்; இன்னகை மகளிர் - இனிய முறுவலையுமுடைய மகளிர்; புல் மூசு கவலைய - புல் மொய்த்த கவலையை யுடையனவாகிய; முள் மிடை வேலி - முள்ளால் நெருங்கிய வேலியையும்; பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் - பஞ்சு பரந்த முற்றத்தையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்; பீரை நாறிய சுரை இவர் மருங்கின் - பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த விடத்தில்; ஈத்திலைக் குப்பை ஏறி - ஈத்திலையையுடைய குப்பையின்கண்ணே ஏறி; உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப - உமணர் உப்புச் செலுத்தும் சகடத்தை யெண்ணுவர்; நோகோ யான் - நோவேன் யான்; காலை தேய்கமா - எனது வாழ்நாள் கெடுவதாக; பயில் பூஞ்சோலை மயில் எழுந் தாலவும் - பயின்ற பூவையுடைய சோலைக்கண் மயிலெழுந் தாடவும்; பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் - பயின்ற மலையின்கண்ணேயேறி முசுக்கலை தாவி யுகளவும்; கலையுங் கொள்ளா வாக - அம்முசுக்கலையும் நுகர்ந்து வெறுத்தலாற் கொள்ளாவாம் பரிசு; காலமன்றியும் மரம் பலவும் பயம் பகரும் - காலமன்றாகவும் மரங்கள் பலவும் காயும் பழமு முதலாயினவற்றை விளைந்து கொடுக்கும்; யாணர் அறாஅ வியன் மலை அற்று - புது வருவாயொழியாத அகன்ற மலையைப் போலும்; அண்ணல் நெடு வரை ஏறி - தலைமையையுடைய வுயர்ந்த வரையின் கண்ணேயேறி; தந்தை பெரிய நறவின் கூர் வேல் பாரியது - தம்முடைய தந்தையாகிய மிக்க மதுவினையும் கூரிய வேலினையுமுடைய பாரியது; அருமை யறியார் - பெறுதற்கருமையை யறியாராய்; போர் எதிர்ந்து வந்த - போரேற்று வந்த; வலம்படு தானை வேந்தர் - வென்றிப்பட்ட சேனையையுடைய அரசரது; பொலம் படைக் கலிமா எண்ணுவோர் - பொன்னாற் செய்யப்பட்ட கல முதலியவற்றையுடைய மனஞ் செருக்கிய குதிரையை யெண்ணுவோர் எ-று.
வியன்மலை யென்றது, அரை மலையை; நெடுவரை யென்றது உச்சி மலையை. இன் னகை மகளிர், நெடு வரை யேறி முன்பு வேந்தர் கலிமாவை யெண்ணுவோர், இப்பொழுது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்பொய் ஒழுகையை எண்ணுவர்; இதற்கு நோவேன் யான்; எனது வாழ்நாள் கெடுவதாக வென வினைமுடிவு செய்க. அன்றே யெண்ணு மேகாரம் அசைநிலை. வியன்மலை அத்தன்மைத்தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினு மமையும்.
விளக்கம்:குவளைக் கூம்பவிழ் முழு நெறி யென்றவிடத்துக் குவளை, செங்கழுநீர்; செங்கழு நீரின் முகை யவிழ்ந்து புறவித ழொடிக்கப்பட்ட பூ ஈண்டு முழுநெறி யெனப்பட்டது. இனி, அடியார்க்கு நல்லார், முழு நெறிக் குவளை (சிலப். 2, 14) என்பதற்கு இதழொடிக்கப்படாத குவளை யென்ற பொருள்பட, இதழொடிக்கப்படா தெனவே செவ்வி கூறிற்று என்று கூறி இவ்வடிகளை யெடுத்துக் காட்டினர். கூம்பு, முகை. பருத்தியிற் கொண்ட பஞ்சினை நூற்றல் மகளிர் செயலாதலின், பஞ்சி முன்றில் என்றார். பறம்பு நாட்டில் வாழும் மகளிர் இப்போது உமணர் செலுத்தும் சகடத்தை யெண்ணுதல் கண்டு கபிலர் இரங்குகின்றவர், பாரியிருந்து அரசுபுரிந்த காலத்தே இம்மகளிர் பாரியொடு போர் வேட்டு வந்த வேந்தருடைய போர்க்குதிரைகளை யெண்ணி விளையாடியது நினைந்து வருந்துகின்றார். பகைவேந்தர் வந்த வண்ணம் இருந்ததற்குக் காரணம் கூறுவார், பாரியது அருகை யறியார் போரெதிர்ந்து வந்த வலம் படு தானைவேந்தர் என்றார். அரை மலை, மலையின் அடிப்பகுதி. சோலையில் மயிலெழுந்தால, சிலம்பில் கலை பாய்ந்துகள, மரங்கள் காலமன்றியும் பயம் பகரும் புது வருவாய் ஒழியாத அரை மலை அத்தன்மைத்தாக, உச்சி மலையில் மகளிர் ஏறி வேந்தருடைய குதிரைகளை யெண்ணுவர் என்றும் உரை கூறுவ துண்டென்பார், வியன்மலை அத்தன்மைத் தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினு மமையும் என்றார். வலம்படு தானை வேந்த ரென்றது, வலம்படு தானையினை யுடையராகியும், பாரியது அருமை யறியாது போரெதிர்ந்தமையின் கெட்டனரென்பது விளங்கநின்றது. பாரியைத் தந்தை யென்றார், தந்தைபோல நாட்டு மக்களை அவன் பேணிப் புரந்தமை தோன்ற. |