22. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண், இச்சேரமான் மடிமையின்றி முயல்வதே பொருளாக வுடையன்; அதனால் நாடு சோறு வளம் மிக்கது; செல்வப் படைப்பும் மிகுந்துளது; இவனது காவல் நலம் கண்ட சான்றோர் மாந்தரஞ்சேர லிரும்பொறை யோம்பிய நாடு புத்தே ளுலகத் தற்று என மீக்கூறுகின்றனர்; தன்னைப் பாடிய புலவர் பிறர்பாற் சென்று அவரிசையினைப் பாடாவாறு பெருங்கொடை நல்குவன் என்றும், இத்தகைய சிறப்பைக் கேட்டுத் தாம் வந்து கண்டு மகிழ்வுற்றதாகவும் கூறுகின்றார். | தூங்குகையா னோங்குநடைய உறழ்மணியா னுயர்மருப்பின பிறைநுதலாற் செறனோக்கின பாவடியாற் பணையெருத்தின | 5. | தேன்சிதைந்த வரைபோல | | மிஞிறார்க்குங் கமழ்கடாத் தயறுசோரு மிருஞ்சென்னிய மைந்துமலிந்த மழகளிறு கந்துசேர்பு நிலை இவழங்கப் | 10. | பாஅனின்று கதிர்சோரும் | | வானுறையும் மதிபோலும் மாலைவெண் குடைநீழலான் வாண்மருங்கிலோர் காப்புறங்க அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த | 15. | ஆய்கரும்பின் கொடிக்கூரை | | சாறுகொண்ட களம்போல வேறுவேறு பொலிபு தோன்றக் குற்றானா வுலக்கையாற் கலிச்சும்மை வியலாங்கட் | 20. | பொலந்தோட்டுப் பைந்தும்பை | | மிசையலங் குளைய பனைப்போழ் செரீ இச் சினமாந்தர் வெறிக்குரவை ஓத நீரிற் பெயர்பு பொங்க வாய்காவாது பரந்துபட்ட | 25. | வியன்பாசறைக் காப்பாள | | வேந்துதந்த பணிதிறையாற் சேர்ந்தவர் கடும்பார்த்தும் ஓங்குகொல்லியோ ரடுபொருந வேழ நோக்கின் விறல்வெஞ் சேஎய் | 30. | வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே | | நிற்பாடிய வலங்கு செந்நாப் பிறரிசை நுவலாமை ஓம்பா தீயு மாற்ற லெங்கோ மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே | 35. | புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந் | | தினிது கண்டிசிற் பெரும முனிவிலை வேறுபுலத் திறுக்குந் தானையொடு சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே. (22) |
திணையும் துறையு மவை. துறை: இயன் மொழியுமாம். சேரமான்யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
உரை : தூங்கு கையான் - அசைந்த பெருங் கையுடனே; ஓங்கு நடைய - தலையெடுத்து நடக்கும் உயர்ந்த நடையை யுடையனவும்; உறழ் மணியான் - அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்று மாறுபட்டொலிக்கும் மணியுடனே, உயர் மருப்பின - உயர்ந்த கோட்டினையுடையனவும்; பிறை நுதலால் செறல் நோக்கின - பிறை வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம் பொருந்திய பார்வையை யுடையனவும்; பாவடியால் பணை எருத்தின - பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும்;தேன் சிதைந்த வரைபோல -தேனழிந்த மலைபோல; மிஞிறார்க்கும் கமழ் கடாத்து - தேனீ யொலிக்கும் மணநாறும் மதத்துடனே; அயறு சோரும் இருஞ் சென்னிய - புண் வழலை வடியும் பெரிய தலையை யுடையனவுமாகிய; மைந்து மலிந்த மழ களிறு - வலிமிக்க இளங்களிறு; கந்து சேர்பு நிலைஇ வழங்க - கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலே நின்று அசைய; பாஅல் நின்று கதிர் சோரும் - பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற; வான்உறையும் மதிபோலும் மாலை வெண்குடை நீழலான் - வானத்தின் கண்ணே தங்கும் திங்கள் போலும் முத்தமாலையையுடைய வெண்கொற்றக் குடையினது நிழற்கண்ணே; மருங்கு வாள் இல்லோர் காப்பு உறங்க - தம் பக்கத்து வாள் இல்லாதோர் அக்குடையே காவலாக உறங்க; அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த - அசைந்த செந்நெற் கதிரால் வேயப்பட்ட; ஆய் கரும்பின் கொடிக் கூரை -மெல்லிய கரும்பாற் கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை; சாறு கொண்ட களம் போல விழா எடுத்துக்கொள்ளப் பட்ட இடம் போல; வேறு வேறு பொலிவு தோன்ற - வேறு வேறாகப் பொலிந்து தோன்ற; குற்று ஆனா உலக்கையால் - குற்று அமையாத உலக்கை யொலியுடனே; கலிச் சும்மைவியல் ஆங்கண் - மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற விடத்து; பொலந்தோட்டுப் பைந் தும்பை - பொன்னாற் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே; மிசை அலங்கு உளைஇய பனைப் போழ் செரீஇ- மிசையே அசைந்த தலையினையுடையபனந்தோட்டைச் செருகி; சினமாந்தர் வெறிக்குரவை -சினத்தையுடைய வீரர்வெறியாடும் குரவைக் கூத்தொலி; ஓத நீரிற் பெயர்பு பொங்க - ஓதத்தையுடைய கடலொலி போலக் கிளர்ந்து பொங்க; வாய் காவாது பரந்து பட்ட - படைப் பெருமையால் பகைவ ருட்கும் மதிப்புடைமையின் இடம் காவாது பரந்து கிடக்கின்ற; வியன் பாசறைக் காப்பாள - அகன்ற பாசறையிடத்துக் காவலாள; வேந்து தந்த பணி திறையால் - மாற்றரசர் பணிந்து தந்த திறையால்; சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும் - தம்மை அடைந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும்; ஓங்கு கொல்லியோர் அடு பொருந - உயர்ந்த கொல்லிமலையோருடைய அடுபொருந; வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய் - யானையினது நோக்குப்போலும் நோக்கினையுடைய வெற்றியை விரும்பும் சேயே; வாழிய - வாழ்க; பெரும - பெருமானே; நின் வரம்பில் படைப்பு - நின்று எல்லையில்லாத செல்வம்; நிற் பாடிய அலங்கு செந்நா - நின்னைப் பாடியவிளங்கிய செவ்விய நா; இசை நுவலாமை - பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல்; ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோபாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எம் கோவே; மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடு-மாந்தரஞ் சேர லிரும்பொறை பாதுகாத்த நாடு; புத்தேளுலகத்து அற்று என - தேவருலகத்தை யொக்கும் என்று பிறர் சொல்ல; கேட்டு வந்து-; இனிது கண்டிசின் - கட்கினிதாகக் கண்டேன்; பெரும - பெருமானே; முனிவிலை - முயற்சி வெறுப்பில்லையாய்; வேறு புலத் திறுக்கும் தானை யொடு - வேற்று நாட்டின்கட் சென்றுவிடும் படையுடனே; சோறு பட நடத்தி - சோறுண்டாக நடப்பை; நீ துஞ்சாய் மாறு - நீ மடியாயாதலான் எ-று.
கதிர் சோரு மதி யென இயையும்; கதிர் சோரு மென்னும் சினை வினை மதி யென்னும் முதலொடு முடிந்தது; கதிர் சோரு, மாலை யென இயைப்பினு மமையும். பாய் நின் றென்று பாடமோதுவாரு முளர். கூரை பொலிவு தோன்ற வென இடத்துநிகழ் பொருளின் றொழில் இடத்து மேலேறி நின்றது. செரீஇ யென்னும் வினையெச்சத்தை ஆடுமென ஒருசொல் வருவித்து அதனோடு முடிக்க நிலைஇ வழங்கக் காப்புறங்கப் பொலிவு தோன்றப் பெயர்பு பொங்க வென்னும் செயவெனெச்சங்களும், வாய் காவா தென்னும் எதிர்மறை வினையெச்சமும் பரந்து பட்ட வென்னும் பெயரெச்ச வினையொடு முடிந்தன.
காப்பாள, பொருந, சேஎய், பெரும, எங்கோ, பெரும, நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை யோம்பிய நாடு புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டு வந்து இனிது கண்டிசின்; நின் படைப்பு வாழிய வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. அன்றி எங்கோவே, நீ துஞ்சாதபடியாலே இரும்பொறை யோம்பிய நாடு புத்தேளுலகத் தற்றெனப் பிறர் சொல்லக் கேட்டு நிற்பாடிய அலங்கு செந்நாப் பிறரிசை நுவலாதபடி வந்து இனிது கண்டேன்; நினது படைப்பொடு வாழ்வாயாக வென இயைப்பினு மமையும்.
இசின்: தன்மைக்கண் வந்தது. சோறுபட நடத்தி யென்பதனை வினையெச்சமாக வுரைப்பினு மமையும். உயர்மருப்பி னென்பதூஉம், செறனோக்கி னென்பதூஉம் பணையெருத்தி னென்பதூஉம் பாடம்.
விளக்கம்: கையான், மணியான், நுதலான், அடியான் என நின்ற ஆனுருபுகள் ஒடு வுருபின் பொருளில் வந்தன. பிறை நுதல் என்ற விடத்து நுதல் மத்தகத்துக் காயிற்று, நடுவிடம் தாழ்ந்து பக்கமிரண்டும் உயர்ந்து பிறை வடிவாகத் தோன்றுதலின், பிறை வடிவாக விடப்பட்ட மத்தகம் என வுரைத்தார். பிறை நுதலாற் செறல் நோக்கின என்னும் இது நுதற்கண்ணால் மூவெயிலைச் செறல் நோக்கின சிவன் செயலைக் குறிப்பாய் நினைப்பிக்கின்றது. அயறு - நீர் கசியும் புண்; இதனைப் புண் வழலை யென்பர். நிலைஇ வழங்க என்றவிடத்து வழங்குதல், நிலைஇ யென்று அடையடுத்தமையால் அசைதலாகலின், நின்ற நிலையிலே அசையஎன்று பொருளுரைத்தார், காப்பு - காப்பாக. கொடி - ஒழுங்கு. வாய் காவாது பரந்து பட்ட என்றவிடத்து வாய் காவாமைக்கேது கூறப்படாமையால், படைப் பெருமையால் பகைவ ருட்கும் மதிப்புடைமையின் என்பது பெய்து கூறப்பட்டது. வாய் - இடம்; எவ்வாயும் (கலி. 30) என்றாற்போல, விறல் வெஞ்சேய் என்புழி வெம்மை வேண்டல் (விரும்புதல்) என்னும் பொருளினதாகையால் வெற்றியை, விரும்பும் சேய் என்று பொருள் கூறினார். கதிர் சோரும் மதி யென்பதில், சோரும் என்பது கதிரின் வினை; அக் கதிர் மதிக்குச் சினையாதலால், சினைக்கும் முதலுக்குமுள்ள ஒற்றுமையால் சோருமென்னும் சினைவினைப் பெயரெச்சம் மதி யென்னும் பெயர்கொண்டு முடிந்தது; இதனை, கதிர் சோரும்.......முடிந்தது என்றார். மதிபோலும் குடையென இயைவதற்கேற்ப, கதிர் சோரும் மாலை, வானுறையும் மதிபோலும் வெண் குடை யென இயைத்தாலும் பொருள் நலம் குன்றாமை பற்றி, கதிர் சோரும் மாலை யென இயைப்பினு மமையும் என்றார். கூரை பொலிவு தோன்ற என்றதில், தோற்றுதல் பொலிவின் வினை; கூரைக்கும் பொலிவுக்கும் இடமும் இடத்துநிகழ் பொருளுமாகிய தொடர்பு; அதனால் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் நின்றதென்றார். பனைப் போழ், பனந் தோடு. செரீஇ யென்னும் வினையெச்சம் குரவை யென்பதனோடு இயையாமையால், ஆடும் என ஒரு சொல் வருவித்து, செரீஇ, ஆடும் குரவை யென்றார். இசின் என்பது முன்னிலைக் குரித்தாயினும் ஏனையிடத்துக்கும் தகும் நிலையுடைய வென்பவாதலால் தன்மைக்கண் வந்த தென்றார். நீ சோறுபட நடத்தித் துஞ்சாய் எனக் கொள்ளலும் பொருந்தும். |