189. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் மதுரைக் கணக்காயனாருடைய இயற்பெயர் தெரிந்திலது. மதுரையில் அக்காலத்தில் சிறந்த ஆசிரியராக இருந்து பலர்க்கு அரிய நூல்களை ஓதுவித்த சிறப்பால் இவர் கணக்காயனாரென்றே வழங்கப்பட்டனர். இவருடைய மகனார் நக்கீரனாராவர். இவர் காலத்துப் புலவர்களுள் இவர் தலைமைப் புலவராய் விளங்கினது கொண்டே தந்தைய ரொப்பர் மக்களென் பதனால்(தொல். கற்பு: 6) இவரின் தந்தையாரின் சிறப்பு இனிதுணரப்படும். நக்கீரனார்க்குக் கீரங்கொற்றனாரென்பவர் மகனாராவர்.
இந் நக்கீரனார், பொதுவாகத் தமிழ் மூவேந்தரையும் வேண்டுமிடங்களிற் சிறப்பித்துப் பாடியிருப்பினும் சிறப்பாகப் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் பாடிப் பெரும் பரிசில் பெற்றவர்; முருகாற்றுப்படை பாடி முருகன் திருவருள் சிறக்கப் பெற்றவர். தமிழகம் முழுவதையும் நன்கறிந்தவர். இவர் அந்தணரல்லர். இத்துணைச் சிறப்புடைய புலமை சிறந்த நக்கீரனார் மலையும் காடும் நாடும் கடலுமாகிய எப்பகுதியிலும் வாழும் மக்கள் பலருடைய முயற்சி முற்றும் தம் புலமைக்கண்ணால் நோக்கினார்.எல்லாருடைய உள்ளமும் பொருளீட்டற்கண் பேரார்வமுற்று இயங்குவது தெரிந்தது. நாடுகட்குத் தலைமை தாங்கிய வேந்தர் பொதுச்சொற் பொறாது அரசு புரிவதும், காடுகளில் வாழும் விலங்குகளை வேட்டையாடித் திரியும் வேட்டுவர் இரவும் பகலும் தமக்குரிய விலங்குகளைப் படுப்பதையே எண்ணி முயல்வதும் நக்கீரர் கருத்தை யீர்த்தன. இவரது உழைப்பின் முடிவென்னை யென்று ஆராய்ந்தார். இவரனைவர்க்கும் வேண்டுவன உண்டியும் உடையுமே யென்றும், அவற்றுள் உன்பது நாழியும் உடுப்பவை இரண்டுமாமென்றும், பிறவகையில் ஒரு வேற்றுமையு மில்லையென்றும் துணிந்தார். இவற்றை நோக்கின், வேண்டுவன சிறிதும் ஈட்டுவன பெரிது மாதலின், மிக்கு நிற்கும் செல்வத்தால் செய்ய வேண்டுவது ஈதலாகிய அறமே என்றும், செய்யாது தாமே துய்க்கக் கருதின் அறமும் பொருளும் இன்பங்களும் பெறப்படாவாம் என்றும் கண்டார். இக் கருத்துக்களை இப்பாட்டின்கண் வைத்துப் பாடியுள்ளார். | தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் | 5 | உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே | | பிறவு மெல்லா மோரொக் கும்மே செல்வத்துப் பயனே யீதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே. (189) |
திணையும் துறையு மவை. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
உரை: தெண் கடல் வளாகம் - தெளிந்த நீராற் சூழப்பட்ட உலக முழுதையும்; பொதுமை யின்றி - பிற வேந்தர்க்குப் பொதுவாதலின்றித் தமக்கே யுரித்தாக ஆண்டு; வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் - வெண்கொற்றக் குடையால் நிழல் செய்த ஒரு தன்மையை யுடையோர்க்கும்; நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான் இடை யாமத்தும் நண்பகலும் துயிலானாய்; கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் - விரைந்த செலவையுடைய மாக்களைப் படுக்கக் கருதிச் செல்லும் கல்வியில்லாத ஒருவனுக்கும்; உண்பது நாழி - உண்ணப்படும் பொருள் நாழி; உடுப்பவை இரண்டே - உடுக்கப்படுமவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக்கும் - பிறவு மெல்லாம் ஒக்குமாதலால்; செல்வத்துப் பயன் ஈதல் - செல்வத்தாற் பெறும் பயனாவது கொடுத்தல்; துய்ப்பேம் எனின் தப்புந பல - செல்வத்தை யாமே நுகர்வே மென்று கருதின் தவறுவன பல எ-று. பல வென்றது, அறம் பொருள் இன்பங்களை. பகலை யொரு மாத்திரை யென்றும், கடுமாவை யானை யென்றும், கல்லாத ஒருவனைப் பாகனென்றும் உரைப்பாரு முளர்.
விளக்கம்: கொண்ட கொள்கையில் ஒருமை யுணர்வும், அதற்கு வேண்டும் செயற்பண்பும் இல்வழி, அதனாற் பெருமை யுண்டாகா மையால் ஒருமையோர் என்றார்; ஒருமை மகளிரே போலப் பெருமையும், தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு(குறள். 974) என்ப. அரைக்கு நான்கு முழமும், மேலுக்கு இரண்டு முழமுமாக இரண்டாடை வேண்டுதலால், உடுப்பவை இரண்டேஎன்றார். உண்டல், உறங்கல், இனம்பெருக்குதல் முதலியன பிறவும்என்பதனுள் அடங்கும் ஓரொக்கும் என்புழி, ஓர் என்பது அசைநிலை. உயிர்கட் குறுதிப்பொருளென உயர்ந்தோரால் எடுத்துள்ள அறமும் பொருளும் இன்பமும் பலவெனப்பட்டன. பகலில் உறங்குதல் கூடாதாகலின், அதற்கு ஒரு மாத்திரை யென்று கொண்டு, நள்ளிரவிலும் ஒரு மாத்திரை யளவும் தூங்கான்என்பாரு முளர். கடுமாப் பார்க்கும் ஒருவனென்றது, அவ் வேந்தனுடைய யானைப்பாகனைக் குறித்ததாக வுரைப்பதும் உண்டு. உரைப்பவே, அரசனையும் அவன் அடிப்பணி புரியும் எளிய பணியாளையும் நோக்கின், இருதிறத்தாரும் உண்டியுடை வகையில் ஒப்பரென்பது கண்டவாறாம். பெரிதீட்டித் தமித்துண்பவர்பால் செல்வம் மிகுதலால், அம் மிகுதிக் காட்சி சிறிதீட்டிப் பலர் சூழ இருந்துண்பவராகிய வறியார்க்கு, அறிவு நலம் கேடெய்துவதற்கு ஏதுவாகிறது. அதுவே, செல்வர்க்கும் எளியோர்க்கும் இடையே ஒற்றுமை நிலைபெறாவாறு, தீய கருத்தும் செயலும் பிறப்பிக்கிறது. அதனால், செல்வர் வறியராகிய எல்லாருடைய வாழ்வும் பொருட்குறையுற்று, அறமும் இன்பமும் குன்றிச் சீரழிவது ஒருதலை என்பதுபற்றி, தப்புந பலவென்றா ரென்றறிக. இதனால், செல்வர் ஈதலைக் கடனாகக் கோடல் அறனாம் என்றும், அஃது அவர்கட்கே யன்றி, மக்களுலகுக்கே நலம் பயப்பதாம் என்றும் துணிபாம். இந்த அற வுணர்வுக் குறைவே இக்காலத்தொழிலாளர் கிளர்ச்சிக்கும், பொருள் முட்டுப் பாட்டுக்கும், வாழ்வு நிரம்பாமைக்கும் வாயிலாதல் தெற்றெனத் தெளியப்படும். |