106.வேள் பாரி

     நல்லிசைச் சான்றோராகிய கபிலர் இப்பாட்டின்கண், வேள்
பாரி தன்னை நாடி வருவோர் அறிவாலும் குணஞ் செயல்களாலும் மிகத்
தாழ்ந்தோராயினும் அவர்பாலும் அருள் புரிந்து அவர் வேண்டுவன
நல்கிப் புரக்கும் கைவண்மையுடையவன் என அவனது கொடை நலத்தைச்
சிறப்பித்துள்ளார்.

 
 நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
5கடவன் பாரி கைவண் மையே.  (106)

     திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

     உரை : நல்லவும்   தீயவும்    அல்ல - நல்லனவென்றும்
தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூ, ஆதலால் அவை
இரண்டினும் வைத்து எண்ணப்படாத; குவி இணர்ப் புல் லிலை
எருக்க    மாயினும் - குவிந்த  பூங்கொத்தினையும்  புல்லிய
இலையையுமுடைய எருக்கம் பூவாயினும்; உடையவை - ஒருவன்
உடையனவற்றை; கடவுள் பேணேம் என்னா - தெய்வங்கள்
விரும்பேம் என்னா; ஆங்கு - அதுபோல; மடவர் மெல்லியர்
செல்லினும் - யாதும்    அறிவில்லாதாரும்    புல்லிய
குணங்களையுடையாரும்  செல்லினும்;   பாரி  கைவண்ணம்
கடவன் - பாரி கைவண்மை செய்தலைக் கடப் பாடாக வுடையன்
எ-று.

     குவியிணர்ப் புல்லிலை யெருக்கம் என்றது, முதற்கேற்ற அடையடுத்த
ஆகுபெயர். உம்மை இழிவு சிறப்பு; மெல்லிய ரென்பதற்கு வறுமையுற்றா
ரென்று முரைப்பர்.

     விளக்கம்:எருக்குக் குவிந்த இணர்களை யுடைத்தென்பதை,
“குவியிண ரெருக்கின் ததர்பூங் கண்ண”(அகம்.301) என்று பிறரும்
கூறுதல் காண்க. நறுமண மின்மையின், நற்பூ வகையிலும், இறைவன்
சூடுதலின் தீய பூவகையிலும் சேராமையின், எருக்கம் பூவை, “நல்லவும்
தீயவு மல்ல குவியிணர்ப், புல்லிலை யெருக்க மாயினும்”என்றார்.
குவியிணரும் புல்லிலையுமுடைமை எருக்கமாகிய முதற்குரிமையாதலின்,
இவை முதற்கேற்றஅடையாயின. ஆயினும், எருக்கம் ஈண்டு ஆகுபெயராய்
எருக்கம் பூவை யூணர்த்தி நின்றது. பித்தேறினோரும் மடலூர் பவரும்
ஆகிய நாண் கடை நின்றோர் சூடும் பூவாய் இழிக்கப்படுவது பற்றி
உம்மை இழிவுசிறப்பாயிற்று. மெல்லிய  ரென்றற்குப் புல்லிய  
குணமுடையோ ரெனப்  பொருள் கூறினமையின், “வறுமையுற்றாரென்று
முரைப்ப”ரென்றார்.