166. கௌணியன் விண்ணந்தாயன்

     இவன் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன்
விண்ணந்தாயன் என்று கூறப்படுகின்றான். பூஞ்சாற்றூர் தஞ்சைச் சில்லாவில்
உள்ளது. கௌண்டின்னிய கோத்திரத்துப் பார்ப்பனர் கௌணியர்
எனப்படுகின்றனர். சீகாழித் திருஞான சம்பந்தரும் கௌணியராவர். மேலும்
கௌணியப் பார்ப்பார் அனைவரும் தமிழ்ப் பற்று மிகவுடையரா யிருப்பது
குறிக்கத்தக்கது. விண்ணன் என்பது இவன் தந்தை பெயர்; இவன் இயற்பெயர்
தாயன் என்பது. அரிவாள் தாய நாயனாரும், தாயன் என்ற பெயருடையர்;
இக்காலத்தும் மக்கட்குத் தாயன், தாயப்பன் என்று பெயர் வழங்குவதுண்டு.
இவனது முன்னோர் வடமொழி வல்லுநராய்ச் சொல்வன்மையிற் பெயர்
பெற்றிருந்தனர். வேள்வி பல செய்தனர். இவன் ஒருகால் சிறந்ததொரு
வேள்வி
வாயிலாகப் பெருவிருந்து செய்தான். அதற்கு ஆசிரியர் ஆவூர்
மூலங்கிழாரும் சென்றிருந்தார். அவ் வேள்வியில் இவனுடைய மனைவியர்
தமக்குரிய ஏவல் கேட்டு நிற்ப, நெய்யை நீரைப்போல் வழங்கி வேள்வி
செய்ததும் விருந்து செய்ததும் கண்டு வியந்த ஆவூர் மூலங்கிழார்,
இப்பாட்டின்கண், இவற்றையெல்லாம் பொருளாக நிறுத்திப் பாடி முடிவில்,
“நீ இப்போது தந்த பரிசிலைக்கொண்டு காவிரிக் கரையில் உள்ள
எம்முடைய ஆவூர் மூலத்தில் நின் புகழ் பாடி உண்டும் தின்றும் ஊர்ந்தும்
மகிழ்ந்தாடுவோம்; நீ இமயம்போல இந் நிலமிசை நிலைபெறுவாயாக”என
வாழ்த்துகின்றார்.

 நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
5இகல்கண்டோர் மிகல்சாய்மார்
 மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
உரைசால் சிறப்பி னுரவோர் மருக
10வினைக்குவேண்டி நீபூண்ட
 புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய
மறங்கடிந்த வருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
15சிறு நுதற்பே ரகலல்குற்
 சிலசொல்லிற் * பலகூந்தலின்
நிலைக்கொத்தநின் றுணைத்துணைவியர்
தமக்கமைந்த தொழில்கேட்பக்
காடென்றா நாடென்றாங்
20கீரேழி னிடமுட்டாது
 நீர்நாண நெய்வழங்கியும்
எண்ணாணப் பலவேட்டும்
மண்ணாணப் புகழ்பரப்பியும்
 அருங்கடிப் பெருங்காலை
25விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை
 என்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்
30உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்
 செல்வ லத்தை யானே செல்லாது
மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவள ரிமயம் போல
நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே.
(166)

     திணை: வாகை. துறை: பார்ப்பன வாகை. சோணாட்டுப்
பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர்
மூலங்கிழார் பாடியது.

    உரை: நன்றாய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் -
பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினையுடைய முதிய
இறைவனது; வாய் போகாது - வாக்கை விட்டு நீங்காது; ஒன்று
புரிந்த ஈரிரண்டின்ஆறுணர்ந்த  ஒரு  முது  நூல் - அறமொன்றையே
மேவிய நான்கு கூற்றையுடைத்தாய்  ஆறங்கத்தாலும் உணரப்பட்ட
ஒரு  பழைய நூலாகிய வேதத்துக்கு; இகல் கண்டோர் மிகல்
சாய்மார் - மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின
புறச்சமயத்தோரது மிகுதியைச்  சாய்க்க  வேண்டி;  மெய் அன்ன
பொய் உணர்ந்து - அவரது மெய்போன்ற பொய்யை உளப்பட்
டறிந்து; பொய் ஓராது மெய்    கொளீஇ - அப்பொய்ம்மையை
மெய்யென்று  கருதாமல் உண்மைப்பொருளை அவர்களுக்கு ஏற்பச்
சொல்லி; மூவேழ் துறையும் முட்டின்று    போகிய - இருபத்தொரு
வேள்வித்  துறையையும் குறையின்றாகச்  செய்து   முடித்த;  உரை
சால் சிறப்பின் உரவோர் மருக- புகழ் அமைந்த தலைமையையுடைய
அறிவுடையோர் மரபிலுள்ளானே; வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க்கலைப் பச்சை - வேள்வித் தொழிற்கு வேண்டி நீ
போர்க்கப்பட்ட காட்டுநிலத்து வாழும் புல்வாய்க் கலையினது
உறுப்புத் தோல்; சுவல் பூண் ஞாண் மிசைப் பொலிய - நினது
தோளின்கண் இடப்பட்ட பூணு நூன்மீதே சிறந்து தோன்ற; மறம்
கடிந்த அருங் கற்பின் - கொடுமையை நீக்கிய பெறுதற்கரிய
கற்பினையும்; அறம் புகழ்ந்த வலை சூடி - அற நூல் புகழப்பட்ட
சாலகத்தைச் சூடி; சிறு நுதல் பேர் அகல் அல்குல் - சிறிய
நுதலினையும் பெரிய அகன்ற அல்குலையும்;
சில சொல்லின்பல கூந்தல் -
மெத்தென்ற சொல்லையும் பலவாகிய கூந்தலையுமுடைய; நின் நிலைக் 
கொத்த நின் துணைத் துணைவியர் - நின்னுடைய நிலைமைக்கு
மனமொத்த நின்னுடைய துணைவியராகிய காதலிமார்; தமக்கு
அமைந்த தொழில் கேட்ப - தத்தமக்குப்பொருந்திய ஏவற்றொழிலைக்
கேட்டுச் செய்ய; காடு என்ற நாடு என்ற ஆங்கு - காடென்றும்
நாடென்றும் சொல்லப்பட்ட அவ்விடத்தின்கண்; ஈரேழின் இடம்
முட்டாது - காட்டுள் எழுவகைப்பட்ட பசுவானும் நாட்டுள்
எழுவகைப்பட்ட பசு வானும் முட்டாது; நீர் நாண நெய் வழங்கியும்
- நீர் நாணும் பரிசு நெய்யை வழங்கியும்; எண் நாணப் பல
வேட்டும் - எண்ணிறப்பப் பல வேள்விகளை வேட்டும்; மண்
நாணப் புகழ் பரப்பியும் - மண் பொறாமல் புகழைப் பரப்பியும்;
அருங் கடிப் பெருங்காலை - அவ்வாறு பெறுதற்கரிய விளக்கமுற்ற
வேள்வி முடிபாகிய பெரிய காலத்து; விருந்து உற்ற நின் திருந்து
ஏந்து நிலை - விருந்தினரைப் பொருந்திய நினது திருந்திய மேம்பட்ட
நிலைமையை; என்றும் காண்க. தில்யாம் - எந்நாளும் காண்பேமாக
யாங்கள்; குடா அது பொன்படு நெடுவரை புயல் ஏறு சிலைப்பின் -
மேற்றிசைக்கண் பொன் படுகின்ற நெடிய குடக மலைக்கண்ணே
முகிலின்கண் இடியேறு முழங்கின்; பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
- பூப்பரந்த புதுநீரையுடைய காவிரி உலகத்தைப் புரக்கும்; தண்புனல்
படப்பை எம்மூர் ஆங்கண் - குளிர்ந்த புனற்பக்கத்தையுடைய
எம்மூரிடத்தின்கண்; உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வல்
யான் - உண்ணப்படுவனவற்றை யேறியும் கொண்டாடுவேமாகப்
போவேன் யான்; செல்லாது மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
- போகாது மழை தலையெடுப்ப உயர்ந்த நெடிய பக்கவரைகளை
யுடைத்தாய்; கழை வளர் இமயம் போல - மூங்கில் வளரும்
இமயமலை போல; நிலீஇயர் நீ நில மிசையானே - நிலைபெறுவாயாக
நீ நிலத்தின்மேலே எ-று.

     முது முதல்வன் வாய் போகாதென்ற கருத்து, அப் பெரியோனாலும்
எக்காலமும் அத்தியயனம் பண்ணப்படு மென்றதாகக் கொள்க. “வாய்
போகா தொன்று புரிந்த”வென்பதற்கு மெய்ம்மை நீங்காமல்
வீடொன்றையுமே புரிந்தவென்றும், “பொய் யோராது”என்பதற்குத் தாம்
பொய்ம்மையை விசாரியாதென்றும், “மூவேழ் துறை”யென்பதற்கு
இருபத்தொரு கூறுபட்ட தருக்க நூலென்றும், “ஈரேழின்”என்பதற்குக்
காட்டுள் ஏழு நாளும் நாட்டுள் ஏழுநாளு மென்றும், “கற்பின் வலை சூடி”
யென்பதற்குக் கற்பினால் வலைசூடி யென்றும் உரப்பினு மமையும்.

     உரவோர் மருக, பொலியக், கேட்ப, வழங்கியும் வேட்டும், பரப்பியும்
இவ்வாறு விருந்துற்ற நின் திருந்தேந்து நிலை, என்றும் இன்றுபோலக்
காண்பேமாக யாமும்; எம்மூரிடத்து உண்டும் தின்றும் ஊர்ந்தும் இவ்வாறு
செய்து நீ தந்த பரிசில் கொண்டு கொண்டாடுவேமாகச் செல்வேன்;
நீதானும் இமயம்போல நிலைபெறுவாயாக வென முடிக்க.

     நன்றாய்ந்த ஒரு முதுநூ லெனவும், கற்பையும் நுதலையும்
அல்குலையும் சொல்லையும் கூந்தலையுமுடைய துணைவியர் வலைசூடித்
தொழில் கேட்ப வெனவும், செல்லாது நிலீஇய ரெனவும் இயையும். மூவேழ்
துறையு மென்பதற்கு இருபத்தொரு கூறுபட்ட அருத்த நூலென்பாருமுளர்.
விருந் தென்றது அதிதிகளை; அன்றி, உறுப்புத் தோல் முதலியவற்றால்
புதுமையுற்ற வெனினு மமையும். தில்: விழைவின்கண் வந்தது. காவிரி
பரக்கும் என்பதூஉம் பாடம்.

     விளக்கம்: பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன்
செய்த வேள்வி விருந்தில் வேளாளராகிய ஆவூர் மூலங்கிழாரும்
பேணப்படுவது இதனால் விளங்குதலின், வேள்விக் காலங்களிலும் பண்டை
நாளில் சாதி வேறுபாடு பார்ப்பனரால் மேற்கொள்ளப்படவில்லை யென்று
தெளியத் தெரிகிறது. வைதிக நெறியை வற்புறுத்தும் சைமினியின் கொள்கை
சங்க காலத்தே தமிழகத்தில் பரவியிருந்தமை இப்பாட்டாலும் அறியப்படுகிறது. 
வேதநூல் உலகிய லொழுக்கத்திற்குரிய அறத்தையே வற்புறுத்துவ 
தென்பவாகலின், ஒன்ற புரிந்த என்றதற்கு “அறமொன்றையே
மேவிய”என உரை கூறினார்; “உலகியல் வேதநூ லொழுக்க மென்பது”
(திருஞான.820) என்று சேக்கிழார் கூறுவது காண்க. இகல் கண்டோர் - வேத
நூலை மேற்கொள்ளாது மாறுபட்டவர். அவர்களைப் புத்தர் முதலாயினாரென
உரைகாரர் கூறுகின்றார். சங்கத்தொகை நூல்களில் புத்தர் சமணர் முதலிய
சமயத்தவரைப்பற்றிய குறப்புக்கள் இன்மையின், இது பொருந்தாமை
யுணரப்படும். வேள்விகள் வகையால் மூன்றும், ஒவ்வொன்றும், எவ்
வேழாய் விரிதலின் விரியால் இருபத்தொன்று மாதலின், “மூவேழ்
துறை”யென்றார்; வகை மூன்றும், சோம யக்ஞம், அவிர் யக்ஞம், பாக
யக்ஞம், என்பனவாம். வேள்வி செய்யுமிடத்து, வேள்வித் தலைவன்
மனைவியர் அணியும் ஒருவகையுடைக்குச் சாலகம் என்று பெயர் என்பர்.
வைதிகர் பல மகளிரை மனைவியராக மணக்கலாம் என்பது விதி. சில
யாங்கங்கட்குப் பத்தினிகள் மூவருக்குக் குறையாதிருக்க வேண்டுமென்னும்
விதயுண்டென திரு. உ. வே. சாமிநாதையர் குறிக்கின்றார். நூற்றுறையில்
இகல் கண்டோர் மிகல் சாய்த்தான் என விண்ணந்தாயனைக் கூறலின்,
மூவேழ் துறை யென்றதற்கு, “இருபத்தொரு கூறுபட்ட தருக்க நூல்”என்று
கொள்ளல் அமையுமென உரைகாரர் குறிப்பதும் அமைவதாம். வேள்வி
முதலிய செயல்கள் வட வாரிய  முறையில் நடைபெறுதலின், அதற்
கேற்பவே அவனை, “இமயம்போல நிலீஇய”ரென வாழ்த்தினார்.


* மகளிர்  சில  சொற்களை    யுடையராதல்    நல்லிலக்கண
மென்பது பண்டைத்     தமிழ்  மரபு.  இவர்களோடு  அந்நாளில்
தொடர்பு கொண்டிருந்தயவனரும்    இக்  கொள்கையினையுடையர்.
தெமோகிரிடெஸ் (Democritus) என்பவர், “Fewness of words is an
ornament to a Woman” (274) என்று கூறுவது காண்க.