35. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     ஆசிரியர்   வெள்ளைக்குடி   நாகனார்   என்னும்    சான்றோர்,
விளைநிலங்கட்குக் குடிகள் இறுக்க   வேண்டிய   செய்க்கடன் சில
ஆண்டுகளாய் இறுக்கப்படாமல் அரசற்குக் கடனாய் விட, அதனைத் தள்ளி
விடுதரல் வேண்டுமெனக் குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை யடைந்து,
“நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே, நீ குடிமக்கட்குக் காட்சி
யெளிய னாதல் வேண்டும்; நின் கொற்றக் குடை வெயில் மறைத்தற்குக்
கொண்ட தன்று; குடிகட்கு அருள் செய்தற்பொருட்டு; நின் கொற்றமும்
உழவர் உழு படையூன்று   சால்   மருங்கில்    உண்டாகும்   விளை
பயனேயாகும்; இயற்கையல்லாதன தம்  செயற்கண்ணே தோன்றிய
விடத்தும்  மக்கள் வேந்தனையே தூற்றுவர்; ஆதலால்,நீ நொதுமலாளர்
பொது மொழி கொள்ளாது பகடு புறந்தரும் குடிகளையும் ஏனைக்
குடிகளையும் ஓம்பி அவர் மொழி கொண்டு ஒழுகுதல் வேண்டும்; 
அவ்வாறு செய்யின் பகை வேந்தரும் நின்னை வணங்கி வாழ்வர்” என்று
அறிவுறுத்திச் செய்களின் பொருட்டுச் செலுத்தக்கடவ கடனை வீடு பெற்றுச்
சென்றார் அக்காலையவர் பாடிய பாட்டு, இப் பாட்டு

நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
5. அரசெனப் படுவது நினதே பெரும
 அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் றோற்றம் போல
10. ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
 நாடெனப் படுவது நினதே யத்தை, ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவ லெனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து
15. முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண்
 டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
20. வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
  குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
25. பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
 ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
30. அதுநற் கறிந்தனை யாயி னீயும்
 நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே. (35)

     திணை: அது. துறை: செவியறிவுறூஉ. அவனை வெள்ளைக் குடி
நாகனார் பாடிப் பழஞ் செய்க் கடன் வீடு கொண்டது.

     உரை: நளி யிரு முந்நீர் ஏணியாக - நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளி யிடை வழங்கா - காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்  திணி  கிடக்கை - வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் - குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய; முரசு முழங்கு தானை மூவருள்ளும் - முரசொலிக்கும்
படையினையுடைய மூவேந்தருள்ளும்; அரசெனப்  படுவது  நினது -
அரசென்றற்குச் சிறப்புடையது நின்னுடைய அரசே; பெரும-; அலங்கு
கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும் -விளங்கிய சுடரையுடைய
ஞாயிறு  நான்கு  திக்கினும் தோன்றினும்; இலங்கு  கதிர்  வெள்ளி
தென்   புலம்   படரினும் - விளங்கிய கதிரையுடைய வெள்ளிமீன்
தென்றிசைக்கட் செல்லினும்; அந் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட
- அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல காலாய் ஓடி ஊட்ட; தோடு
கொள்  வேலின்  தோற்றம்  போல - தொகுதி கொண்ட வேலினது
காட்சியை  யொப்ப;  ஆடு  கண் கரும்பின் வெண்  பூ  நுடங்கும் -
அசைந்த  கண்ணினையுடைய கரும்பினது வெளிய பூ அசையும்;
நாடெனப்  படுவது  நினதே - நாடென்று   சொல்லப்படுவது
நின்னுடைய  நாடே;  நாடு  கெழு செல்வத்துப்  பீடு கெழு வேந்தே
-  அந்  நாடு  பொருந்திய செல்வத்தையுடைய பெருமை பொருந்திய
வேந்தே; நினவ கூறுவல் - நின்னுடையன சில காரியஞ் சொல்லுவேன்;
எனவ  கேண்மதி - என்னுடையன சில வார்த்தையைக் கேட்பாயாக;
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் -
அறக் கடவுள் மேவி    ஆராய்ந்தாற் போன்ற செங்கோலா னாராயும்
ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து; பதன்
எளியோர் - செவ்வி யெளியோர்; ஈண்டு உறை வேண்டுபொழுதில்
பெயல் பெற்றோர் - இவ்விடத்துத் துளிவேண்டுங் காலத்து மழை
பெற்றவரே; ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ - ஞாயிற்றைத்
தன்மேற் கொண்ட பக்கந் திரண்ட முகில்! மாக விசும்பின் நடுவு
நின் றாங்கு - மாகமாகிய உயர்ந்த வானத்தினது நடுவு நின்று அதன்
வெயிலை  மறைத்தாற்    போல;   கண்    பொர   விளங்கும் -
கண்ணொளியோடு மாறுபட விளங்குகின்ற; நின் விண் பொரு வியன்
குடை - நினது வானை முட்டிய பரந்த வெண்கொற்றக் குடை;
வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே - வெயிலை மறைத்தற்குக்
கொண்டதோ  வெனின்  அன்று;   வருந்திய   குடி   மறைப்பது -
வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது;
கூர் வேல்  வளவ - கூரிய  வேலினையுடைய  வளவ;  வெளிற்றுப்
பனந்துணியின் - இளைய பனையினது துண்டம் போல; வீற்று வீற்றுக்
கிடப்ப - வேறு வேறு கிடப்ப; களிற்றுக் கணம் பொருத கண்ணகன்
பறந்தலை   -   களிற்றுத்   திரளைப்    பொருத    இடமகன்ற
போர்க்களத்தின்கண்; வரு படை தாங்கிப் பெயர்  புறத் தார்த்து -
வருகின்ற படையை யெதிர்நின்று பொறுத்து அது  சரிந்து  மீளும்
புறக்கொடை  கண்டு  ஆர்த்துக்கொண்டு;  பொருபடை  தரூஉம்
கொற்றமும் - நின் போர் செய்யும் படை தரும் வெற்றியும்; உழு
படை யூன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயன் - உழுகின்ற கலப்பை
நிலத்தின் கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்;
மாரி பொய்ப்பினும் - மழைபெய்யுங்காலத்துப் பெய்யா தொழியினும்;
வாரி குன்றினும் - விளைவு குறையினும்; இயற்கை யல்லன செய்கையில்
தோன்றினும் - இயல்பல்லாதன மக்களது தொழிலிலே  தோன்றினும்;
காவலர்ப் பழிக்கும் - காவலரைப் பழித்துரைக்கும்;    இக்கண்ணகன்
ஞாலம் - இவ்விடமகன்ற உலகம்; அது நற்கு அறிந்தனை  யாயின் -
அதனை நன்றாக அறிந்தனை யாயின்; நீயும் நொதுமலாளர்   பொது
மொழி   கொள்ளாது -   நீயும் குறளை கூறுவாரது  உறுதியில்லாத
வார்த்தையை உட்கொள்ளாது;   பகடு புறந் தருநர் பாரம்  ஓம்பி
- ஏரைப்     பாதுகாப்பாருடைய   குடியைப் பாதுகாத்து;  குடிபுறந்
தருகுவையாயின் -   அக்காவலாலே   ஏனைக்   குடிகளையும்  பாது
காப்பாயாயின்; நின் அடிபுறந் தருகுவர் அடங்காதோர் - நின் அடியைப்
போற்றுவர் நின் பகைவர் எ-று.

     வளியிடை வழங்கா மண்டிணி கிடக்கை யென இயையும்; அன்றி,
வாயு பதத்துக்கு மேலான வானமெனக் கிடந்தவாறே உரைப்பினுமமையும்.
அரசென்றது, அரசர் தன்மையை. முறைவேண்டுபொழுதிற் பதன் எளியோர்
ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரென்ற கருத்து, நீயும்
பதனெளியை யாதல் வேண்டும், அவ்வாறு பெயல் பெறுதற்கென்றவாறாம்;
அன்றி, இதற்கு முறைவேண்டு பொழுதிற் பதனெளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரோ டொப்பரென் றுரைப்பாரு
முளர். அத்தையும் ஆங்கவும் மதியும் அசைநிலை. நினவ எனவ வென
ஈற்று நின்ற அகரங்கள் செய்யுள் நோக்கி விரிக்கப்பட்டன.

     நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தனே, நினவ கூறுவல் எனவ
கேண்மதி; குடை வருந்திய குடி மறைப்பதுவாகும்; கூர் வேல் வளவ,
பதினெளியோர் உறை வேண்டுபொழுதிற் பெயல் பெற்றோராவர்;
ஆகையால், நீயும் அவ்வாறு காலம் எளியையாய்க் கொற்றமும் ஈன்றதன்
பயனென்று கருதிக் காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலமென்று
கொண்டு நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பாரமோம்பிப்
புறந்தருகுவையாயின், நின்னடி புறந்தருகுவர் அடங்காதோ ரென்றமையால்
செவியறிவுறூஉ வாயிற்று.

     விளக்கம்: “நளியென் கிளவி செறிவு மாகும்” (தொல். உரி: 25)
என்பதனால், “நீர் செறிந்த கடல்” என்றுரை கூறினார். அலங்குதல்,
விளங்குதல். காவிரி கவர்பு ஊட்டலாவது; காவிரியாறு பல கால்களாய்ப்
பிரிந்தோடி நீரை யுண்பித்தல். அறம் புரிந் தன்ன முறை - அறக்கடவுளே
அரச ருருவிற் போந்து முறைமையினை விரும்பிச் செய்தாற்போலும் முறை.
செங்கோல் நாட்டம் - செங்கோலா னாராயும் ஆராய்ச்சி; செவ்விய கோல்
போறலின், முறைமையைச் செங்கோல் என்றார். முறை வேண்டி
வருவார்க்குச் செவ்வியெளியனாகிய வழி, அவ்வெளிமை மழை
வேண்டினார்க்கு அம் மழை யெய்தினாற்போலும் என்பதுபட “பதன்
எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோர்” என்றார்.
செவ்வி யெளியோர் - செவ்வி யெளிதாகப் பெற்றோர். கோடு - பக்கம்.
விசும்பின் நடுவே ஞாயிறு நிற்ப, அக்காலத் தவ்விடத்தே முில் நின்றால்
அதனால் ஞாயிற்றி னொளி மறைக்கப்படுமாகலின், நின்றாங்கு என்பதற்கு
“நின்று வெயிலை மறைத்தாற்போல” என்று உரை கூறினார்.
கண்ணொளியின் அளவிறந்து விளங்குவதால், “கண் பொர விளங்கும்”
என்றார். வெளிற்றுப் பனந் துணி - உள்ளே வயிரமில்லாத பனந் துண்டம்;
முற்றிய பனையே வயிரமுடைய தாகையால், அஃதில்லாத பனந்துணி
இளையதாதல்பற்றி, இளைய பனையினது துண்டம் என்றார். ஈன்றதன் பயன்,
வித்திய நெல்லது விளைபயன். செயற்கை - தொழில். கை: விகுதிமேல்
விகுதி. நொதுமலாளர் - குறளை கூறுபவர். பொதுமொழி - உறுதியில்லாத
மொழி. புறந் தருதல், ஈண்டு வழிபடுதல் மேற்று. நின, என என்பன, அகரம்
விரிந்து நினவ, எனவ என வந்தமையின், இவை செய்யுள் நோக்கி விரிக்கப்
பட்டன வென்றார்.