37. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     மாறோக்கத்து நப்பசலையார் இப் பாட்டின்கண், “புள்ளின் புன் கண்
தீர்த்த செம்பியன் மருக, நல்லர ணமைந்த மூதூர்க்கண் வேந்தன்
இருத்தலை யறிந்து போரின்கண் அந்நகரை யஞ்சாது சிதைக்கும்
ஆற்றலுடையை” யெனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது
வாகை நலத்தைப் பாராட்டுகின்றார்.

     மாறோக்கம் என்பது மாறோகம் என்றும் வழங்கும். இது பாண்டி
நாட்டிற் கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். நப்பசலையார் என்பது
இவரதியற்பெயர். இவர் இச் சோழனையே யன்றி, மலையமான் திரு
முடிக்காரி, மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன், கடுந்தேர்
அவியன் என்போரைப் பாடியுள்ளார். இவருள் இச் சோழனைப் பற்றி
மட்டில் பல பாட்டுக்கள் பாடியுள்ளார். இச் சோழனைப் பாடுமிடத்து இவன்
முன்னோர் புள்ளுறு புன்கண் தீர்த்த வரலாற்றினை ஒருமுறைக் கிருமுறை
வற்புறுப்பர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் வரலாற்றினையும்
குறிப்பர். உறையூர் நல்லவைக்கண் அறம் நிலை நிற்பதும், சேரர் இமயத்தில்
விற்பொறி வைத்ததும் இவரால் சிறப்புறக் குறிக்கப்படுகின்றன. இவர், இக்
கிள்ளி வளவன் இறந்தகாலத்து உண்டாகிய தீ நிமித்தங்களை நிரலே
தொடுத்துரைப்பதும், அவன் உயிரைக் கொண்டு கூற்றுவனை
இகழ்ந்துரைப்பதும் நயமுடையவாகும்.

நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த
வேக வெந்திற னாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப்
5. புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅங் கலித்த குண்டுகண் ணகழி
இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம்
10. கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச்
செம்புறழ் புரிசைச் செம்மன் மூதூர்
வம்பணி யானை வேந்தகத் துண்மையின்
நல்ல வென்னாது சிதைத்தல்
வல்லையா னெடுந்தகை செருவத் தானே. (37)

     திணை: வாகை. துறை: அரசவாகை; முதல் வஞ்சியுமாம்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து
நப்பசலையார் பாடியது.

     உரை: நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த வேக
வெந்திறல் நாகம் புக்கென - நஞ்சுடைத்தாகிய வெளிய
பல்லினையுடைய ஐந்து படம் பொருந்திய தலையைச் சுமந்த சினம்
பொருந்திய வெய்ய திறலையுடைய பாம்பு புக்கதாக; விசும்பு
தீப்பிறப்பத்திருகி - வானம் தீப் பிறக்கும் பரிசு முறுகி; பசுங்
கொடிப் பெருமலை விடரகத்து - பசிய கொடியினையுடைய பெரிய
மலை முழையின்கண்ணே;உரும் எறிந் தாங்கு - இடியேறு
எறிந்தாற்போல; புள்ளுறு புன்கண் தீர்த்த - புறவுற்ற துயரத்தைக்
கெடுத்த; வெள் வேல் சினங் கெழு தானைச் செம்பியன் மருக -
வெள்வேலொடு சினம்பொருந்திய படையையுடைய செம்பியன்
மரபிலுள்ளாய்; கராஅம் கலித்த குண்டு கண் அகழி - கராம்
செருக்கிய குழிந்த இடத்தையுடைய அகழியினையும்; இடம் கருங்
குட்டத்து - இடம் கரிதாகிய ஆழத்தின்கண்; உடன் தொக்கு ஓடி -
சேரத் திரண்டோடி; யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் -
இடையாமத்து ஊர் காப்பாருடைய விளக்கு நிழலைக் கவரும்; கடு
முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி - கடிய மாறுபாடு பொருந்திய
முதலையையுடைய நீர் மிக்க மடு வினையும்;செம்பு உறழ் புரிசை -
செம்பு பொருவும் மதிலையுமுடைய; செம்மல் மூதூர் - தலைமை
பொருந்திய பழைய வூரினுள்ளே; வம்பு அணி யானை வேந்து அகத்
துண்மையின் - கச்சணிந்த யானையையுடைய அரசு உண்டாகலின்;
நல்ல என்னாது - அவற்றை நல்லவென்று பாராது; செருவத்தான்
சிதைத்தல் வல்லை - போரின்கண் அழித்தலை வல்லையா
யிருந்தாய்; நெடுந் தகை - பெருந் தகாய் எ-று.

     இலஞ்சியையுடைய அகழி யென மாறிக் கூட்டினும் அமையும்.
இப்பொருட்கும் கராம் கலித்தலை அகழிக் கடையாக்குக. கராம் -
முதலையுள் ஒரு சாதி.

     செம்பியன் மருக, நெடுந் தகாய், விட ரகத்து நாகம் புக்கென,
உருமெறிந் தாங்கு மூதூரகத்து வேந்துண்மையின், செருவத்துச் சிதைத்தல்
வல்லை யென மாறிக் கூட்டுக.

     புள்ளுறு புன்கண் தீர்த்த பேரருளினோன் மருகனாயும், செருவின் கண்
இவற்றை நல்லவென்று பாராது அழித்தல் வல்லையாயிருந்தாயென அவன்
மறம் வியந்து கூறியவாறு. ஐந்தலை யென்றதற்கு ஐந்து தலை யெனினு
மமையும். இடங்கருங்குட்ட மென்பதனுள் உம்மையை அசைநிலையாக்கி
இடங்கரையுடைய குட்டமென் றுரைப்பாரு முளர். இடங்க ரீட்டத் தென்று
பாடமோதுவாரு முளர்.

     விளக்கம்: விசும்பில் தீப் பிறப்பதில்லையாகலின், விசும்பு தீப்பிறப்ப
என்பதற்குத் தீப் பிறக்கும் பரிசு என்று கூறினார். கலித்தல், தழைத்தல்,
வேண்டுவன குறைவறப் பெற்று மெய் வலி தழைத்தவழிச் செருக்கு
விளைதலின், கலித்த என்றதற்குச் “செருக்கிய” என வுரைப்பர் “கண்ணார்
கண்ணிக் கலிமான் வளவ” (புறம்:39) என்புழியும் இவ்வாறே கூறுதல்
காண்க. நெடு நீர் என்றவிடத்து நெடுமை, மிகுதி குறித்து நின்றது. வேந்தன்
கோயிலினுள்ளே யிருக்குமாறு விளங்க, “வேந்து அகத் துண்மையின்”
என்றதற்கு “அரசுண்டாதலின்” என்றார். அரசன் உளனாதலின் என்பார்,
வேந்தென அஃறிணை வாய்ப்பட்டாற் கூறியது கொண்டு உண்டாதலின் என
உரை கூறினார்.