64. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

     முதுகுடுமிப் பெருவழுதி புலவர் பாடும் புகழ் படைத்தவன். இவனது
வண்மை புலவர் மிடி தீர்க்கும் பெருநலம் படைத்திருப்பதுபற்றி, வறுமை
யெய்துங் காலங்களில் புலவர்கள் இவன்பால் பொருள் பெற்றுச் சென்று
இனிது வாழ்வதனோ டமையாது, தாம் பெற்ற பெருவளத்தைப் பெறார்க்கும்
அறிவித்து, அவன்பாற் சென்று அது பெறச் செய்வது மரபு. அம்முறையே,
இப்பாட்டின்கண் ஆசிரியர் நெடும்பல்லியத்தனார், வறுமை யெய்தி வாடும்
விறலியைக் கண்டு, “இக் காலத்தே புற்கையுண்டு வருந்தும் நாம் முதுகுடுமிப்
பெருவழுதியைக் கண்டு வருவேமாயின், புற்கை யுணவு நீங்கி இனிய வுணவு
கொள்ளும் செல்வம் பெறலாம் வருக செல்வேம்” என்று பாடியுள்ளார்.

நெடும்பல்லியத்தன் என்னும் பெயர். ஆண்பாற்கும் நெடும்பல்லியத்தை
யென்பது பெண்பாற்கும் வழங்கும். இப்பாட்டின் முதலடியில் யாழ், ஆகுளி,
பதலை யெனப் பல்லியங்களைத் தொகுத்தோதுதலின் இவர்
நெடும்பல்லியத்தனா ராயினா ரெனக் கருதுவோரும் உளர். நெடும்
பல்லியத்தை யென வருதலை நோக்கின் இக்கருத்துச் சிறப்புடையதாகத்
தோன்றவில்லை. முதுகுடுமிப் பெருவழுதி தனக்குரிய கூடலினீங்கிப்
போர்க்களத்தே அமர்ந்திருப்பதை யறிந்துவைத்தும் அங்கே அவன்பாற்
செல்லக் கருதுவது அவனது வண்மையும் இவரது வறுமைக் கொடுமையும்
புலப்படுத்துகிறது. இவரைப்பற்றி வேறே குறிப்பொன்றும் காணப்படவில்லை.

 நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை

விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப்
5பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே.
(64)

     திணை: பாடாண்டிணை துறை: விறலியாற்றுப்படை. பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார்
பாடியது.

     உரை: நல் யாழ் ஆகுளி பதலை யொடு சுருக்கி - நல்ல
யாழையும் சிறு பறையையும் ஒரு தலை மாக்கிணையுடனே கட்டி;
செல்லாமோ சில் வளை விறலி - போவே மல்லேமோ சொல்லுவாயாக
சில வளையையுடையவிறலி; களிற்றுக் கணம் பொருத கண்ணகன்
பறந்தலை - யானை யணிபொருத இடமகன்ற பாசறைக்கண்; விசும்பு
ஆடு எருவை பசுந்தடி தடுப்ப - ஆகாயத்தின் கண்ணே பறக்கும்
எருவையைப் பசிய வூன் தடி தகைப்ப; பகைப் புலம் மரீஇய -
மாற்றார் தேயத்தின்கண்ணே மருவிய; தகைப் பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமான் கண்டு - அழகிய பெரிய செல்வத்தினையுடைய
முதுகுடுமியாகிய கோமானைக் கண்டு; நெடு நீர்ப் புற்கை நீத்தனம்
வரற்கு - மிக்க நீரான் அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு
எ-று.

     எருவை, தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருத்து; கழுகெனினு
மமையும். விறலி, குடுமிக் கோமாற் கண்டு புற்கையை நீத்தனம் வரற்குச்
செல்லாமோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     தகைப்பெருஞ் சிறப்பின் என்பதூஉம் பாடம்.

     விளக்கம்:சுருக்குதல் - கட்டுதல்; பைக்குள்ளே வைத்து அதன்
வாயைச் சுருக்கிக் கட்டுதல்பற்றி இவ்வாறு கூறினார். யானைகள் தம் மில்
அணிவகுத்துச் செல்லும் இயல்பினவாதலால், களிற்றுக் கணம் என்றதற்கு
யானை யணி யென உரை கூறினார். பசுந்தடியின் காட்சி எருவையை மேலே
செல்லாவாறு தடுத்துத் தன்னை யுண்டற்குரிய வேட்கையை யெழுப்புதலின்,
அதன்மேலேற்றி, “பசுந்தடி தடுப்ப” என்றார். தகை அழகு. தகைப்பருஞ்
சிறப்பின் என்ற பாடத்துக்குத் தடுத்தற் கரிய தலைமையையுடைய என
உரை கூறிக் கொள்க.