72. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்

     இப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் சிற்றரசரும் பேரரசருமாகிய
எழுவருக்கும் தலையாலங்கானம் என்னுமிடத்தே பெரும் போருண்டாயிற்று.
அக்காலத்தே இவன் மிக இளையனாயிருந்தான். வேந்தர் தாமும் இவன்
இளையன்தான் என இகழ்ந்து நால்வகைப் படையும் நிரம்ப வுடையேமெனத்
தருக்கினர்; அதனால் அவர்கள் இவனை இகழ்ந்து கூறுயதும் உண்டு,
அச்சொற்களைக் கேட்ட நெடுஞ்செழியற்குச் சினத் தீக்கிளர்ந்தெழுந்தது.
உடனே படையைப் பண்ணிப் போருக்கெழும் இச்செழியன் நெடுமொழிகள்
சில சொல்லலுற்றான். நல்லிசைப் புலமையும் மாங்குடி மருதனார் முதலிய
சான்றோர் கேண்மையு முடையனாதலின் அச்சொற்கள் அழகிய பாட்டாய்
வெளி வந்தன. அப்பாட்டே ஈண்டு வந்துள்ள பாட்டு. இக்கண் குடிபழி
தூற்றும் கொடுங்கோன்மையும், புலவர் பாடும் புகழ் பெறாமையும், இரவலர்க்
கீயாமையும் ஒரு வேந்தனைக் கீழ்மைப் படுத்துவன என்னும் உணர்வு இவன்
உள்ளத்தே யூறி நிற்பது காண்மின்.

நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறிப்
படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையுந் தேரு மாவும்
5.படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
10. என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவ னாக
15.உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. (72)

     திணையும் துறையு மவை. பாண்டியன் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு.

     உரை: நகு தக்கனர் நாடு மீக் கூறுநர் என - நம்மாற்
சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுவர் எனவும்;
இளையன் இவன் என - இவன்தான் இளையன் எனவும்; உளையக் கூறி
- யான் வெறுப்பச் சொல்லி; படு மணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும் - ஒலிக்கும் மணி இரு மருங்கும்
ஒன்றோ டொன்று மாறி யிசைக்கும் பரந்த அடியினையும் பெரிய
காலினையு முடைய உயர்ந்த நல்ல யானையினையும் தேரையும்
குதிரையையும்; படை யமை மறவரும் உடையம் யாம் என்று -
படைக்கலத் தொழில் அமைந்த வீரரையும் உடையேம் யாம் என்று;
உறு துப்பு அஞ்சாது - எனது மிக்க வலிக்கு அஞ்சாதே; உடல் சினம்
செருக்கி - மாறுபடுஞ் சினம் பெருகி; சிறுசொல் சொல்லிய சினங்கெழு
வேந்தரை - புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம் பொருந்திய
அரசரை; அருஞ் சமம் சிதையத் தாக்கி - பொறுத்தற்கரிய போரின்
கண்ணே சிதறப் பொருது; முரச மொடு ஒருங்கு அகப்படேஎனாயின் -
முரசத்தோடுகூட அவரைக் கைக்கொண்டிலேனாயின்; பொருந்திய என்
நிழல் வாழ்நர் - பொருந்திய எனது குடைநிழற் கண் வாழ்வார்; செல்
நிழல் காணாது - தாங்கள் சென்றடையும் நிழற் காணாதே; கொடியன்
எம் இறை யென - கொடியன் எம்முடைய வேந்தனென்று கருதி;
கண்ணீர் பரப்பி - கண்ணீரைப் பரப்பி; குடி பழி தூற்றும் கோலே
னாகுக - குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலை யுடையே னாகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக -
உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடைய மாங்குடிமருதன்
முதல்வனாக; உலக மொடு நிலைஇய - உலகத்தோடு நிலைபெற்ற;
பலர் புகழ் சிறப்பின் புலவர் - பலரும் புகழும் தலைமையையுடைய
புலவர்; பாடாது வரைக என் நில வரை - பாடாது நீங்குக எனது
நில வெல்லையை; புரப்போர் புன்கண் கூர - என்னாற் புரக்கப்படுங்
கேளிர் துயரம் மிக; இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உற -
இரக்குமவர்கட்குக் கொடாத வறுமையை யான் உற எ-று.

     என் நிழல் வாழ்நராகிய குடியென்க. உளையக் கூறியதனைத் தம்
மிடத்திருந்து கூறியதாகவும், சிறுசொற் சொல்லியதனைப் போர்க்களத்
தெதிர்ப்பட்டுக் கூறியதாகவும் கொள்க. இவனென்றார் தம் கருத்துக்கண்
அணுமையான். அகப்படேனாயினென்றது, ஈண்டுப் பிறவினைமே னின்றது.
வேந்தரைத் தாக்கி அகப்படேனாயின், கோலேனாகுக, இன்மையானுற; என்
நிலவரை புலவர் பாடாது வரைகவென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
“நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்” என்பதனை நாட்டாரால் மீக்கூறப்பட்ட
மந்திரிச் சுற்ற முதலாயினார் நகுதக்கன ரெனப் பிரித்துரைப்பினு மமையும்:
நிலவரைப் புரப்போர் எனவும் பாடம்.

     விளக்கம்: “நெடுஞ்செழியன் நாட்டை மீக்கூறுவோர் அவன்
பகைவராகிய நம்மால் எள்ளி நகைக்கத்தக்கவராவர்; இவன் மிக இளையன்”
எனப் பகைவர் தம்மிடத்திருந்தே கூறிக் கொள்கின்றனர். போர்க்களத்தில்
நேர்பட்டு நின்று “யானையும் தேரும் மாவும் மறவரும் உடையம்” எனத்
தம்மை மிகுத்துச் சொல்லுகின்றனர். படையமை மறவர் என்ற விடத்துப் படை,
படைக்கலத்தொழில் குறித்துநின்றது. அவர்கள் செயற்குரியது என்
உறுதுப்புக்கு அஞ்சுவதாகும்; அது செய்யாது சினஞ் செருக்கி, அது
காரணமாகச் சிறுசொல் சொல்லுகின்றா ரென்பதாம். அகப்படுதல், ஈண்டுப்
பிறவினையாய் அகப்படுத்துதல் என்ற பொருள் தந்து நிற்கிறது. சிறப்பு -
தலைமை இரப்போர்க்குக் கொடாத இன்மையால் இம்மைப் புகழும், புலவர்
பாடாது வரைதலால் மறுமையின்ப வாழ்வும் பெறா தொழிவேனாக என்று
வஞ்சினம் கூறுகின்றான்.