123. மலையமான் திருமுடிக்காரி

     ஒருகாற் புலமை நலஞ் சான்ற நல்லோரிடையே வள்ளல்களின்
கொடைநலம் பற்றிப் பேச்சு நிகழ்ந்தபோது, நாநலம் சிறந்த கபிலர்,
“நாட்காலையிற் கள்ளுண்டு களிக்குங்கால் இரவலர் புகழுரை கேட்டு
அவர்க்குத் தேர்கள் பலவற்றை வழங்குவது எத்தகைய வள்ளல்கட்கும்
எளிதில் இயல்வதாம்; எனவே, அவரது கொடை, கள் மகிழ்ச்சியில்
நிகழ்வதனால் செயற்கையாம். மலையமான் திருமுடிக்காரி களியாப்
போழ்தில் வழங்கும் தேர்களை நோக்கின், அவை அவனது
முள்ளூர்மலையிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகும்.
எனவே, இஃது இயற்கைக் கொடை யெனத் தெளிமின்” என்று
இப்பாட்டால் எடுத்துரைக்கின்றார்.

 நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
5பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே.    (123)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: நாட்கள் உண்டு - நாட் காலையே மதுவை யுண்டு;
நாள் மகிழ் மகிழின் - நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின்; தேர்
ஈதல் யார்க்கும் எளிது - தேர் வழங்குதல் யாவர்க்கும் எளிது;
தொலையா நல்லிசை விளங்கும் மலையன் - கெடாத நல்ல புகழ்
விளங்கும் மலையன்; மகிழாது ஈத்த - மது நுகர்ந்து மகிழாது
வழங்கிய; இழை யணி நெடுந்தேர் - பொற்படைகளால்
அணியப்பட்ட உயர்ந்த தேர்; பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட - பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சிக்கண் உண்டாகிய;
மாரி உறையினும் பல - மழையினது துளியினும் பல எ-று.

     இதன் கருத்து, ஏனையோர் கொடை செயற்கை யென்றும் இவன்
கொடை இயற்கை யென்றும் கூறியவாறு.

     விளக்கம்: செயற்கையாவது, மதுவுண்ட மகிழ்ச்சியால், தன்னால்
நல்கப்படும் பொருள்களின் அருமை நோக்கும் இயற்கை யறிவிழந்து
ஏற்குநர் ஏற்க வழங்குவது. இயற்கை, மது முதலியவற்றால் அறிவு நலங்
குன்றாது ஏற்போர் வரிசை யறிந்து நல்குவது. மகிழ்தல், மது வுண்டு
மயங்குதல். “மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு” (குறுந். 165) எனச்
சான்றோர் வழங்குதல் காண்க. மது மகிழ்ச்சியில் பிறர் நல்கும்
கொடையளவினும், அம் மயக்கமின்றியே மலையமான் நல்கும்
கொடையளவு பெரிதென்பர், “மாரி யுறையினும் பல” என்றார்.