163.குமணன்

     குமணன்பால் பெருஞ்செல்வம் பரசிலாகப் பெற்றுப் போந்த
பெருஞ்சித்திரனார் அதனைத் தம் மனைவிபால் தந்து எல்லோர்க்கும்
கொடுத்து இன்புறுமாறு பணிக்கின்றவர், இனிய இப் பாட்டினைப் பாடினார்.
இதன்கண் எல்லோர்க்கும் என்பதை வகுத்து, “நின்னை விரும்புவோர்
நின்னால் விரும்பப்படுவோர், நின் கிளைஞராகிய மூத்த மகளிர், கடன்
நல்கியோர் முதலிய பலர்க்கும் வழங்குக. அவ்வாறு வழங்குமிடத்து
இன்னார்க்கு வழங்குகின்றோ மென்றும் என்னைக் கேட்டல் வேண்டும்
என்றும் கருதற்க; இச் செல்வ முற்றும் முதிரமலைக்குத் தலைவனான
குமணன் தந்தது”என்று இனிமை கனியக் கூறியுள்ளார். பண்டை நாளில்
பரிசில் பெற்ற பரிசிலர், தாம் பெற்ற பரிசிற் பொருளின்பாற் கொண்டிருந்த
மனப்பான்மையினை இப்பாட்டு ஒரு வகையில் நமக்கு எடுத்துக்காட்டுவது
காண்மின்.

 நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
5

 

 
இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே.  
(163)

     திணை:அது. துறை: பரிசில். பெருஞ்சித்திரனார் குமணனைப்
பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.

     உரை:நின் நயந் துறைநர்க்கும் - நின்னைக் காதலித்துறையும்
நின் சார்வாய மகளிர்க்கும்; நீ நயந் துறைநர்க்கும் - நீ அன்பு
செய்தொழுகப்பட்ட மகளிர்க்கும்; பன் மாண் கற்பின் நின்கிளை
முதலோர்க்கும் - பல குணங்களும் மாட்சிமைப்பட்ட
கற்பினையுடைய நினது சுற்றத்து மூத்த மகளிர்க்கும்; கடும்பின்
கடும் பசி தீர நின் நெடுங் குறிஎதிர்ப்பை நல்கியோர்க்கும் - நமது
சுற்றத்தினது மிக்க பசி நீங்க நினக்கு நெடுநாட்படக் குறித்த
எதிரப்பைத் தந்தோர்க்கும்;இன்னோர்க் கென்னாது - மற்றும் இன்ன
தன்மையா ரென்று கருதாது;என்னொடும் சூழாது - என்னொடு கூடி
உசாவுவதும் செய்யாது; வல்லாங்கு வாழ்வதும் என்னாது - சதுரப்படக்
குடி வாழ்க்கை வாழக் கடவே மென்று கருதாது; நீயும் எல்லோர்க்கும் 
கொடுமதி - நீயும் யாவர்க்கும் வழங்குவாயாக; மனை கிழவோயே - 
எனது மனைக்குரியோயே; பழந் தூங்கும் முதிரத்துக் கிழவன் - பலாப்பழ 
முதலாயின தூங்கும் முதிரமென்னும் மலைக்குத் தலைவனாகிய; திருந்து
வேல் குமணன் நல்கிய வளன் - திருந்திய வேலையுடைய குமணன்
நல்கிய செல்வத்தை எ-று.

    மனை கிழவோய், குமணன் நல்கிய செல்வத்தை நீயும் எல்லோர்க்கும்
கொடுமதி  யெனக்   கூட்டுக.  நின்   பன்  மாண்  கற்பின்   கிளை
முதலோர்க்குமென விளையும்; நின்றாங் குரைப்பினு மமையும். நீயு மென்ற
உம்மையானும் கொடுப்பேன், நீயுங் கொடு வென எச்ச உம்மையாய் நின்றது.

    விளக்கம் : கிளை முதலோர் என்றது, சுற்றத்தோரில் மூத்த மகளிர்,
குறி யெதிர்ப்பை - யாம் இப்போது நல்கின் அப்போது நமக்கு நல்குவர்
என்று கருதி வழங்கும் கடன். பொருளைப் பெற்றுப் போந்த முதன்மை
தன்பாலிருத்தலின், “என்னொடும் சூழாது”என்றும், பொருளுளதாய
காலத்துச் சிறிது பற்றுள்ளங்கொண்டு வாழின் வறுமைத்துயர்க் கிடமிராது
என்று கருதற்க வென்பார், “வல்லாங்கு வாழ்து மென்னாது”என்றும், இச்
செல்வம் குமணன் தந்தது; தன் செல்வத்தில் அவனே பற்றுள்ளம்
கொள்ளாதபோது, நாம் பற்றுவைத்தற்குரிமையில்லையாகலின், இச்
செல்வத்தைக் காணுந்தோறும் அவனை நினைந்து வாழ்த்துவதல்லது
செய்வதுபிறிதில்லை யென்பார், “திருந்து வேல் குமணன் நல்கிய வளன்”
என்றும் கூறினார்.