43. சோழன் மாவளத்தான்

     இச் சோழன், சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில்
வெகுளும் இயல்பின னாயினும், நல்லதன் நல முணரும் நயம் மிக்கவன்.
சோழன் திருமாவளவன் வேறு; இவன் வேறு. ஒருகால் இவனும் ஆசிரியர்
தாமற்பல்கண்ணனாரும் வட்டாடினர். வட்டுக்களில் ஒன்று
தாமற்பல்கண்ணனாரை யறியாமல் அவர்க்கீழ் மறைந்து விட்டதாக,
அதனைப் பின்புணர்ந்த மாவளத்தான் வெகுண்டு, அவரை அவ் வட்டினால்
எறித்தான். உண்மை கூறவும் ஓராது. வெகுண் டெறிந்த அவன் செய்கையை
இகழ்ந்து அப் புலவர், “வேந்தே, நின் செயல் பொருந்துவ தன்று; நின்
குடிப் பிறந்தோர்க்கு இச் செயல் இயல்பன் றாதலின், நின் பிறப்பின்கண்
ஐயமுறுகின்றேன்” என வருந்தி யுரைத்தார் அதனைக் கேட்டதும்
மாவளத்தான் தன் தவற்றினை யுணர்ந்து, நாணி, மனம் கலங்கினான்.
முடிவில் அவரும் தகுவன கூறித் தேற்றிப் பாராட்டினர். இந் நிகழ்ச்சியையே
இப் பாட்டு குறித்து நிற்கிறது. தாமற்பல்கண்ணனார் என்பார் பார்ப்பனர்;
கூர்த்த புலமை நலஞ் சிறந்தவர்; தாம் செய்த தவற்றை விரைந்துணரும்
நல்லறிஞர். தாமப்பல் கண்ணனார் என்றும் பாடமுண்டு. இவர் தாமல்
என்னும் ஊரினர். தாமல், காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ளதோர் நல்ல வூர்.
இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் இவ் வூர் மிக்க சிறப்புற்று விளங்கிய
தென்பதை இவ்வூரிலுள்ள கோயிற் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இக்
கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தாமர் (S.I. Vol. V.1004. A.R. 139 of 1896)
என்று  கூறுதலின்,  இவர்  பெயர் தாமர்ப்பல் கண்ணனாரென இருக்க
வேண்டு மென்று துணியலாம். ஏடெழுதியோர் தாமற்பல் கண்ணனா ரென
எழுதிவிட்டனர்; இவ்வூர் இப்போதும் தாமல் என்று வழங்குவது நோக்கி,
இவ்வாறு கொள்ளப்பட்ட தென்று கொள்க. பல்கண்ணன் என்பது
இந்திரனையும் குறிக்கும் பெயராதலின், பார்ப்பனராகிய இவர் இவ்வாறு
பெயர் பெற்றனர் என்றறியலாம். இதன்கண், “பார்ப்பார் நோவன செய்யார்”
என்று இவர் கூறுவதே, இவர் பார்ப்பனரென்பதை வற்புறுத்துகிறது.

     இப் பாட்டின்கண் தாமற்பல்கண்ணனார், “கிள்ளிக்குத் தம்பி, நீ
புறவின் பொருட்டுத் துலை புக்கவன் வழித்தோன்றல்; நின் முன்னோர்
சான்றோர்க்கு நோய் செய்யார்; இச் செயல் நினக்குத் தகுவதோ? நின்
பிறப்பில் ஐயமுடையேன்” என்று கூறக் கேட்டு, நாணியிருந்த மாவளத்தான்
செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து, “யான் செய்த பிழையை மனங்
கொள்ளாது, நீ செய்ததையே நினைந்து நாணி யிருந்தது. பிழைத்தாரைப்
பொறுப்பது நுங்கள் குடிகக்கு இயல்புகாண் என்பதைக் காட்டுகிறது. பிழை
செய்தவன் யானே; நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க” எனப்
பாராட்டுகின்றார்.

நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்
5.கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
10. தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்ற லைய முடையேன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
15. நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
20காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவிரி

எக்க ரிட்ட மணலினும் பலவே. (43)

     திணையும் துறையும் அவை. சோழன் நலங்கிள்ளி தம்பி
மாவளத்தானும் தாமற்பல்கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கை
கரப்பவெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானைச் சோழன் மகன்
அல்லையென, நாணியிருந்தானைத் தாமற்பல் கண்ணனார் பாடியது.

     உரை: நில மிசை வாழ்நர் அலமரல் தீர - நிலத்தின்மேல்
உயிர் வாழ்வார்க்கு வெம்மையான் உளதாகிய சுழற்சி நீங்க; தெறு
கதிர்க் கனலி வெம்மை தாங்கி - சுடுகின்ற கதிரையுடைய
ஞாயிற்றினது வெப்பத்தைத் தாம் பொறுத்து; கால் உணவாக -
காற்றை யுணவாகக் கொண்டு; சுடரொடு கொட்கும் - அச்சுடருடனே
சூழ வரும்; அவிர் சடை முனிவரும் மருள - விளங்கிய
சடையையுடைய அருந் தவரும் வியப்பால் மயங்க; கொடுஞ் சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறு குறித் தொரீஇ - வளைந்த சிறகினையும்
கூரிய உகிரினையுமுடைய பருந்தினது எறிதலைக் கருதி அதனைத்
தப்பி; தன் னகம் புக்க - தன்னிடத்தை யடைந்த; குறு நடைப்
புறவின் தபுதி யஞ்சி - குறிய நடையையுடைய புறாவினது அழிவிற்
கஞ்சி; சீரை புக்க - தன் னழிவிற் கஞ்சாது துலாத்தலையுட் புக்க;
வரையா ஈகை உரவோன் மருக - வரையாத வண்மையையுடைய
வலியோனது மரபினுள்ளாய்; நேரார் கடந்த முரண் மிகு திருவின் -
பகைவரை வென்ற மாறுபாட்டான் மிக்க செல்வத்தையுடைய, தேர்
வண் கிள்ளி தம்பி - தேர் வண் கிள்ளிக்குத் தம்பி; வார் கோல்
கொடுமா மறவர் பெரும - நீண்ட அம்பினையும் வளைந்த
வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ; கடு மான் கை வண்
தோன்றல் - விரைந்த குதிரையையுடைய கைவள்ளிய தோன்றால்;
ஐயம் உடையேன் - நினது பிறப்பின்கண் ஐயப்பாடுடையேன்; ஆர்
புனை தெரியல் - ஆத்தியாற் செய்யப்பட்ட தாரையுடைய; நின்
முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யார் - நினக்கு
முன்னுள்ளார் யாவரும் பார்ப்பார் வெறுக்கத் தகுவன செய்யார்;
மற்று இது நினக்கு நீர்த்தோ என - மற்று இவ்வெறுக்கத்தக்க
செய்கை நினக்கு நீர்மையை யுடைத்தோ என்று; வெறுப்பக் கூறி - நீ
வெறுக்கச் சொல்லி; நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நினக்கு யான் செய்த தவற்றிற்கு வெறாய் என்னினும்; நீ பிழைத்தாய்
போல் நனி நாணினை - நீ தவறு செய்தாய் போல மிக நாணினாய்;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் - இவ்வாறு தம்மைத்
தப்பியவரைப் பொறுக்கும் தலைமை; இக் குடிப் பிறந்தோர்க்
கெண்மை காணும் என - இக் குலத்தின்கட் பிறந்தோர்க்கு எளிமை
யுடைத்துக் காணும் என; காண்தகு மொய்ம்ப - காணத்தக்க
வலியையுடையோய்; காட்டினை யாகலின் - அறிவித்தா யாகலின்;
யானே பிழைத்தனென் - யானே தவறு செய்தேன்; மிக்கு வரும்
இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பல நின் ஆயுள் சிறக்க
- பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி கொழித்திடப்பட்ட
மணலினும் பலவாக நின் வாழ்நாள் சிறப்பதாக எ-று.

     முனிவ ரென்றது, வேணாவியோரை; அன்றி, சுடர் திரிந்த
வழித்திரிந்து தவஞ் செய்யு முனிவரென்று முரைப்ப. சீரை, துலாக்கோல்
தட்டு மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி என்றது, சூது
பொருவுழிக் கையாற் கவறு புதைப்ப வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானை,
இவ்வாறு செய்தல் நின் பெருமைக்குப் பொருந்துமோ? அதனால் நின்
பிறப்பிலே ஓர் ஐயமுடையேன் என்ற சொல்லை.

     இது   பொறுத்தற்கரிய   பிழையைப்   பொறுத்த  குணவென்றியான்
அரசவாகை யாயிற்று.

     விளக்கம்: “அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி” (உரி:13)
என்பது தொல்காப்பியம். சுடரொடு கொட்கும் முனிவர், “விண்செலன்
மரபின் ஐயர்” (முருகு:107) என்று நக்கீரரால் குறிக்கப்படுகின்றார்.
உயிர்கள்பா லுண்டாகிய அருள் மிகுதியால் சுடரொடு திரியும் தம்மினும்
அருள்மிக வுடையனாதல் கண்டு; அவர் மதி மருண்டன ரென்றற்கு,
“முனிவரும் மருள” என்றார். பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ - பருந்தினால்
எறியப்படுவ துணர்ந்து அதன் இலக்கினின்றும் தப்பி எறியப்படுவது
ஏறாயிற்று; “வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போல” என்றாற் போல. சீர்
தூக்கும் துலாக் கோல், “சீரை” யெனப்பட்டது. நனி நாணினை யென்புழி,
மிகுதி,  குடிப்பிறப்புக்கு உயர்வெடுத்து மொழிதற்கு இடந்தந்தது. தவறு
கண்டு மிக நாணுதல் தலைமை மிக்க மன நலமும் அறிவு நலமும்
உடையார்க்கே அமைவதாகலின்,  “காண்தகு மொய்ம்ப” என்று
சிறப்பித்தார். வேணாவி - வேள்விக்கண் பெறும் அவி வேணாவி
யெனப்பட்டது; “வேணவா” என்றாற் போல, அவரவர் தகுதிப்பாட்டை
மிகுதிப்படுத்துவது வாகைத் திணையாதலால், பொறை மிக்க குணத்தை
அரசவாகையில் அடக்கிக் கூறினார்.