186. மோசி கீரனார் மோசிகீரனார், சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையையும், கொண்கானங் கிழானையும் பாடிப் பெரும் பரிசில் பெற்று மேம்பட்டவர். வினையான் மிக்க வேந்தர் போந்து தானையொடு சூழ்ந்து கொண்ட காலையில், தன் தானை யழியவே, இனித் தன்னையின்றித் தன் எயில்சூழ் இருக்கைக்கு வேறு அரணில்லையென்பதைத் தெரிந்து நன்னனென்பான், தான் தங்கியிருந்த கானத்தினின்றும் வெளிப்பட்டு வந்து தான் பிடித்த வேலைக் கைவிடாது பகைவரை வென்று தன் பண்டைப் புகழை நிறுவிய சிறப்பினைப் பெரிதும் பாராட்டிப் பேசுவர். ஆய் அண்டிரனுக்குரிய பொதிய மலையிலுள்ள வேங்கையும் காந்தளும் போல மகளிர் மேனி மணங்கமழும் என்பர். இத்தகைய சிறப்பமைந்த இக் கீரனார் தம்மோடொத்த சான்றோர் சூழ வேந்துடை யவையத்திருந்தகாலை அரசர்க்கும் அவர் குடை நிழல் வாழும் குடிகட்குமுள்ள தொடர்புபற்றி ஓர் ஆராய்ச்சி நிகழ்ந்தது; உயிர்க்கும் உடம்புக்குமுள்ள தொடர்பே அரசுக்கும் அவன் நாட்டிற்கும் உள்ள தொடர்பு என்பது அவ் வாராய்ச்சியில் முடிபாயிற்று. ஆகவே, உடம்பின் நலத்துக்கும் கேட்டுக்கும் உயிரினது உண்மையும் இன்மையுமே ஏதுவாதல் போல வேந்தன் உளனானால் நாடு நலமுறுதலும் இலனாயின் கெடுதலும் ஒருதலை என்றனர் ஒருசாரார். உடம்பின் நலத்துக்கு நெல்லும் நீரும் ஏதுவாம்; அவை யுள்வழியே உயிண்மையும் அரசுண்மையும் காணலாம். ஆகவே, நெல்லும் நீரும் உலகிற்குஉயிராவன என்றனர் பிறிதொரு சாரார். இவ்வாறு நாட்டிற்கு அரசே உயிரென்பாரும் பொருளே உயிரென்பாரும் சான்றோர் இருதிறத்தராகவே ஆங்கிருந்த மோசி கீரனார், நாடாளும் வேந்தனாவான், இவ்வுலகிற்கு யானே உயிர்; ஏனை நெல்லுமன்று; நீருமன்று என்பதை அறிந்தொழுகும் அரசுமுறை உயிர் நிலையாம்என்ற கருத்துப்பட இப் பாட்டினைப் பாடிக் காட்டினார். | நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால், யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. (184) |
திணையுந் துறையு மவை. மோசி கீரனார் பாடியது.
உரை: மன்னன் உயிர்த்து மலர்தலை உலகம் - வேந்தனாகிய உயிரை யுடைத்து பரந்த இடத்தையுடைய உலகம்; அதனால்-; நெல்லும் உயிரன்று - இவ் வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிர் அன்று - யான் உயிர் என்பது அறிகை - யான் உயிரென்பதனை யறிகை; வேல் மிகு தானை வேந்தற்குக் கடன் - வேலான் மிக்க படையையுடைய அரசனுக்கு முறைமை எ-று.
மன்னன் உயிர்த்தென்ற கருத்து: உயிரை யாக்கும் நெல்லும் நீரும் உளவாவது மன்னன் முறைசெய்து காப்பின் என்றதாம்.
விளக்கம்: நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உயிரும் உடம்பும் படைத் திசினோர்(புறம். 18) எனச் சான்றோர் கூறுதலால், நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்றுஎன்றார். உயிரும் உடம்பும் கூடி நின்ற வழியும், உயிர்க்குயிராய் நின்றியக்கும் திருவருள்போல அரசு முறை இன்றியமையாதமையின், அதனைச் செலுத்தும் தானே உலகிற்கு உயிராதலை யறிந்து, உயிர் தானின்ற உடம்புக்குளதாகும் நோயைத் தான் நுகர்ந்தும் அதனைப் பேணுதல்போல, உலகு புரத்தற்கண் உள்ள துன்பமனைத்தையும், தானேற்று அதனைக் காப்பது கடன் என்பார், யானுயி ரென்ப தறிகை கடன்என்றார். இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம், உழத்தொறூஉம் காதற்றுயிர்(குறள்.940) எனச் சான்றோர் கூறுதலால் உயிரது செயல் நலம் தெளியப்படும். திருத்தக்கதேவர் இக் கருத்தை, நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீருயிர் இரண்டுஞ் செப்பிற், புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழல் இலங்கு வாட்கை, மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய், நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேல் நம்பி என்றான்(2908) எனக் கூறுவர். |