|           125.      மலையமான்திருமுடிக்காரி           ஒருகால், சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போருடற்றுவாராயினர். அப்போது
 சோழன் தன்னுடைய அமைச்சரை விடுத்து மலையமானைத் தனக்குத்
 துணைவலியாமாறு வேண்டினன். மலையமான் திருமுடிக்காரியும் அவற்குத்
 துணையாய் நின்று வென்றி பெறுவித்து, பின்னர், அவன் தன்
 திருக்கோவலூரை யடைந்து இனிதிருந்தான். வழக்கம்போல் அவனைக்
 காண்டற்குச் சான்றோர் பலர் வந்தனர். வடம வண்ணக்கன்
 பெருஞ்சாத்தனாரும் அவரிடையே வந்திருந்தார்.
 பெருஞ்சாத்தனார்       வடநாட்டிலிருந்து  தமிழகத்துக்குக்  குடியேறிய பழங்குடி      மக்களுள் ஒருவர். அக்குடியினரை வடமர் என்பது வழக்கு.
 இது இப்போழ்தும் பார்ப்பனரிடையே வழங்குகிறது. பொன்னின் நோட்டம்
 பார்ப்பது  இவரது  தொழிலாதல்  பற்றி,  இவர் வண்ணக்கன்
 பெருஞ்சாத்தனார் எனப்படுவாராயினர். வடம வண்ணக்கன்
 பேரிசாத்தனார் என்பார் ஒருவர் உளர். அவர் பாண்டியன் இலவந்திகைத்
 துஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். அவர் வேறு; இவர் வேறு. இவர்
 பாட்டிலும், வில்லெறி பஞ்சி போல மல்குதிரை, வளிபொரு வயங்குபிசிர்
 பொங்கும் (நற். 299) என அவர் கூறுவது போல, நிணந் தயங்கு கொழுங்
 குறைக்குப் பருத்திப் பெண்டின் பனுவல் கூறப்படுவது முதலிய இயைபு
 கண்டு இவரையும் பேரிசாத்தனாராகக் கொள்வாரு முளர்.
 
 இப் பெருஞ்சாத்தனார் தேர்வண்மலையன் சோழற்குத் துப்பாகி
 வென்றியொடு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுடன், வேந்தே, நீ
 துணைசெய்த இப் போரின்கண் வென்றியெய்திய சோழனும் யான்
 வென்றிபெற உதவியவன் இவனேயென நின்னைப் பாராட்டிக் கூறுவன்;
 தோல்வி யெய்திய சேரமானும், வல்வேல் மலையன்
 துணைபுரியாதிருப்பனேல், இப்போரை வெல்லுதல் நமக்கு எளிதாயிருக்கும்
 என வியந்து கூறுவன். இருதிறத்தாரும் பாராட்டும் ஒருவனாய்
 விளங்குகின்றனை. நின் செல்வ மிகுதியைக் காணப்போந்த யாமும் ஊனும்
 கள்ளும் மாறி மாறி யுண்பேமாயினேம்; முயன்று ஈட்டிய பொருள் கொண்டு
 நீ உண்ணும் உணவு அமிழ்தாய் நீண்ட வாழ்நாளை நினக்கு நல்குவதாக
 எனப் பாராட்டியுள்ளார்.
 |  | பருத்திப்             பெண்டின் பனுவ லன்ன நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
 பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
 உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே
 |  | 5 | நள்ளாதார்             மிடல்சாய்ந்த |  |  | வல்லாளநின்             மகிழிருக்கையே உழுத நோன்பக டழிதின் றாங்கு
 நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே
 குன்றத் தன்ன களிறு பெயரக்
 |  | 10 | கடந்தட்டு             வென்றோனு நிற்கூ றும்மே |  |  | வெலீஇயோ             னிவனெனக் கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
 விரைந்துவந்து சமந்தாங்கிய
 வல்வேன் மலைய னல்ல னாயின்
 |  | 15 | நல்லமர்             கடந்த லெளிதும னமக்கெனத் |  |  | தோற்றோன்             றானு நிற்கூ றும்மே தொலை இயோ னிவனென
 |  | 20 | ஒருநீ            யாயினை பெரும பெருமழைக் |  |  | கிருக்கை            சான்ற வுயர்மலைத் திருத்தகு            சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.   (125)
 | 
               திணை: வாகை. துறை: அரசவாகை.         சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்
 பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனை வடம
 வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
 
 உரை : பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன - பருத்தி         நூற்கும்
 பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சுபோன்ற; நெருப்புச் சினம் தணிந்த -
 நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய; நிணந் தயங்கு
 கொழுங்குறை - நிணமசைந்த கொழுவிய தடிகளை; பரூஉக்கண்
 மண்டையொடு - பெரிய உடலிடத்தையுடைய கள் வார்த்த
 மண்டையொடு; ஊழ் மாறு பெயர - முறை முறையாக
 ஒன்றற்கொன்று மாறுபட; உண்கும் - உண்பேமாக; எந்தை -
 எம்முடைய தலைவ; நின்காண்கு வந்திசின் - நின்னைக் காண்பேன்
 வந்தேன்; நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள - பகைவரது
 வலியைத் தொலைத்த வலிய ஆண்மையுடையோய்; நின் மகிழ்
 இருக்கை - நினது மகிழ்ச்சியையுடைய இருக்கைகண்; உழுத நோன்
 பகடு அழி தின் றாங்கு - உழுத வலிய பகடு பின் வைக்கோலைத்
 தின்றாற்போல; நீ நயந்துண்ணும் நறவு - நினது தாளாற்றலாற் செய்த
 பொருளை யாவர்க்கும் அளித்துப் பின் நீ விரும்பி யுண்ணும் கள்;
 நல் அமிழ்தாக - நல்ல அமிழ்தாக; குன்றத் தன்ன களிறு பெயர -
 மலைபோலும் யானை பட; கடந் தட்டு வென்றோனும் - எதிர்நின்று
 கொன்று வென்றவனும்; வெலீஇயோன் இவனென நிற்கூறும் - நம்மை
 வெல்வித்தோன் இவனென நின்னையே மகிழ்ந்து சொல்லும்;
 கழலணிப் பொலிந்த சேவடி - வீரக் கழலாகிய அணியாற் சிறந்த
 செய்ய அடியாலே; நிலம் கவர்பு - போர்க்களத்தைக்
 கைக்கொள்ளவேண்டி; விரைந்து வந்து சமம் தாங்கிய - விரைந்து
 வந்து போரைத் தடுத்த; வல்வேல் மலையன் அல்ல னாயின் -
 வலிய வேலினையுடைய மலைய னல்லனாயின்; நல்லமர் கடத்தல்
 நமக்கு எளிதுமன் என - நல்ல போரை வெல்லுதல் நமக்கு
 எளிதென; தோற்றோன் தானும் தொலைஇயோன் இவனென
 நிற்கூறும் - தோற்றவனும் நம்மைத் தொலைவித்தோன் இவனென
 நின்னையே புகழ்ந்து சொல்லும்; ஒரு நீ ஆயினை - ஆதலால் நீ
 ஒருவனாயினாய்;பெரும-; பெருமழைக்கு இருக்கை சான்ற - பெரிய
 மழைக்கு இருப்பிடமாதற் கமைந்த; உயர் மலை - உயர்ந்த
 மலையையுடைய; திருத்தகு சேஎய் - திருத்தக்க சேயை யொப்பாய்;
 நிற் பெற்றிசினோர்க்கு - நின்னை நட்பாகவும் பகையாகவும்
 பெற்றோர்க்கு எ-று.
              பனுவலன்ன நிணமென இயையும். நிலங்கவர்யென்பது கவர வெனத்         திரிக்கப்பட்டது. எமது நிலத்தைக் கைக்கொண்டெனினு மமையும்.
 தாளாற்றலாற் செய்த பொருளில் நல்லனவெல்லாம், பரிசிலர்க்கு வழங்கி
 எஞ்சியது உண்டலான் அழிதின் றாங்கு என்றார். காண்கு வந்தென்பன,
 ஒரு சென்னீர்மைப்பட்டு உண்குமென்பதற்கு முடிபாய் நின்றன.
 உண்குமென்றது சுற்றத்தை உளப்படுத்தி நின்றமையின் பன்மை யொருமை
 வழுவமைதியாய் நின்றது. மன்: கழிவின்கண் வந்தது.
 
 பெரும, சேஎய், வென்றோனும் வெலீஇயோன் இவனென நிற்கூறும்;
 தோற்றோனும் தொலைஇயோன் இவனென நிற்கூறும்; அதனால் நிற்
 பெற்றிசினோர்க்கு ஒரு நீ ஆயினையாதலால் நின் மகிழிருக்கைக் கண்ணே
 உண்கும் காண்கு வந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும் நறவு
 நல்லமிழ்தாக வென மாறிக் கூட்டுக. நெருப்புச் சினந் தணிந்த நிணந்தயங்கு
 கொழுங்குறை யென்பதற்கு எரியாது பூத்துக் கிடக்கின்ற தழல்போலும்
 நிணந்தயங்கு கொழுங்குறை யெனினு மமையும். பரூஉக்கண் மண்டை
 யென்பதற்கு கள்ளையுடைய உடலிடம்பரிய மண்டை யெனினு மமையும்.
 
 விளக்கம்: கொட்டையும் கோதும் நீக்கி         நூற்றற்கேற்பத் தூய்மை
 செய்யப்பட்ட பஞ்சு போறலின் நிணத்தை, பனுவ லன்ன நிணம் என்றார்.
 உரைகாரரும் பனுவ லன்ன நிணமென வியையும் என்றார். காண்கு
 என்னும் செய்கென்னும் வினைமுற்று வேறு வினைகொண்டு முடியுமாதலின்
 காண்கு வந்திசின் என்றார்; செய்கென் கிளவி வினையொடு முடியினும்,
 அவ்வியல் திரியா தென்மனார் புலவர் (சொல். வினை. 7) என்று ஆசிரியர்
 கூறுதல் காண்க. இது பற்றியே உரைகாரரும், காண்குவந்
 தென்பன....நின்றன என்றார். பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி,
 எண்ணியல் மருங்கிற் றிரிபவை யுளவே (வினை. 12) என்றமையின்,
 உண்குமென்பது சுற்றத்தை உளப்படுத்தி நின்ற தென்றார், உண்கும் என்பது
 பன்மையும், காண்கு வந்திசின் என்பது ஒருமையுமாகலின் உளப்பாட்டுத்
 தன்மைப் பன்மையாகிய உண்குமென்பது பன்மை யொருமை
 வழுவமைதியாயிற்று. வென்றோன் நன்றி யறிவால் நின்னைப் பாராட்டுதல்
 ஒருபுறமிருக்க, தோற்றோன் நின் பேராண்மையை வியந்து நம்மைத்
 தொலைவித்தவன் இவன் என்று கூறுவன் என்பார், தோற்றோன் தானும்
 தொலைஇயோன் இவனென நிற்கூறும் என்றார். இவ்வாறு வென்றோனும்
 தோற்றோனும் ஆகிய இருவரும் ஒப்பப் பாராட்டுதல் பற்றி, ஒருநீ யாயினை
 பெரும என்றார். நண்பரும் பகைவரும் ஒப்பப் பாராட்டும் சிறப்பு முருகற்
 குரியதாகலின், நிற் பெற்றிசினோர்க்குத் திருத்தகு சேஎய் என்றார்.
 பெற்றிசினோர் - நட்பாகவும் பகையாகவும் பெற்றோர். சேஎய்
 மலைக்குரியனாகலின், பெருமலைக்கு இருக்கை சான்ற உயர்மலை யுடைய
 சேய்      என்றார்.
 |