151. இளவிச்சிக் கோ

     இவ் வேந்தனுடைய இயற்பெயர் தெரிந்திலது. விச்சி யென்பது
ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு விச்சி நாடென்றும், அந் நாட்டரசன்
விச்சிக் கோ வென்றும் வழங்குப. விச்சியின் இளவரசன் இளவிச்சிக் கோ
எனப்பட்டான். இளவிச்சிக் கோவும், இளங்கண்டீரக் கோவும் நெருங்கிய
நண்பர். கண்டீரக் கோப்பெரு நள்ளிக்கு இளையோனாதலின் இவன் இளங்
கண்டீரக் கோ எனப்படுவானாயினான். ஒருகால், இளங் கண்டீரக் கோவின்
திருமனையில் இளவிச்சிக் கோவும் வந்திருந்தான். இருவரும்
ஒருங்கிருக்கையிற் சான்றோரான பெருந்தலைச் சாத்தனார் கண்டீரக்
கோவைக் காண வந்தார். வந்தவர், இளங்கோக்கள் இருவரையும் கண்டார்.
இருவரும் அவரை மனங் கனிந்து வரவேற்றனர். ஆயினும், அச் சான்றோர்
இளங்கண்டீரக் கோவைப் புல்லிக்கொண்டு, இளவிச்சிக் கோவைப் புல்லா
தொழிந்தார். இளவிச்சிக்கு இது மிக்க வருத்தத்தைச் செய்தது. அவன்
கள்ளமில் உள்ளத்தனாகலின், சிறிதும் தாழாது “என்னை நீவிர் புல்லா
தொழிந்ததேன்?”என்று வினவினன். அவற்குப் பெருந்தலைச் சாத்தனார்
விடையிறுப்பாராய், இப் பாட்டின்கண், “வேந்தே, இக் கண்டீரக் கோ
வண்மையாற் புகழ் சிறந்தவன். இவன் நாட்டில் மனைக்கிழவன் சேட்புலம்
சென்றிருப்பினும், மனைக்கிழமை பூண்ட மகளிர் தம் தகுதிக்கேற்பனவற்றை
இரவலர்க் கீந்து இசை வளர்ப்பர்; அதனால் இக் கண்டீரக் கோவைப்
புல்லினேன். நின் முன்னோருள் முதல்வன் பெண் கொலை புரிந்த
நன்னனாவான். நின் நாடு பாடி வருவார்க்குக் கதவடைத்து மறுக்கும்
நீர்மையது. அதனால் எம் போல்வார் நினது விச்சி மால்வரையைப் பாடுத
லொழிந்தனர். அதனால் அம் மலைக்குரிய நின்னைப் புல்லேனாயினேன்”
என்று கூறினார்.

     ஒருகால் குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை, சோழ பாண்டிய
ரொடு கூடிப் பொருத விச்சிக்கோவை வென்று வீழ்த்தினா னெனப்
பதிற்றுப்பத்திலுள்ள ஒன்பதாம் பத்தின் பதிகம் கூறுகிறது. பாரி மகளிரை
மணஞ்செய்து கொள்ளுமாறு கபிலரால் வேண்டிக் கொள்ளப்பட்ட
வேந்தருள் விச்சிக்கோவும் ஒருவன்; அவனை அக்காலை அவர்,
“நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல், களங்கொண்டு கனலும்
கடுங்கண் யானை, விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோ”(புறம்.200)
எனப் பாராட்டியுள்ளார். ஒருகால், இவ் விச்சிக் கோக்களில் ஒருவன்
பெருவேந்தர் மூவருடன் போரிட்டு வீழ்ந்தான்.அவனால் அலைக்கப்பட்ட
குறும்பூர் என்னும் ஊரிலுள்ளார் பேராரவாரம் செய்தனரென்பதை,
“வில்கெழு தானை விச்சியர் பெருமகன், வேந்தரொடு பொருத ஞான்றைப்
பாணர், புலிநோக் குறழ்நிலை கண்ட கலிகெழு, குறும்பூ ரார்ப்பினும்
பெரிது’’(குறுந்.328) எனப் பரணர் கூறியுள்ளார்.

     இனி, பெருந்தலைச் சாத்தனா ரென்னும் சான்றோர் பெருந்தலை
யென்னும் ஊரினர். இப் பெயரால் தமிழகத்திற் பலவூர்க ளுண்மையின்,
இவர் இன்ன நாட்டின ரெனத் துணிய முடியவில்லை. அகநானூற்றுப்
புலவர் நிரலில் இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்
சாத்தனாரென்று (224) காணப்படுதலின், இவர் தந்தை ஆவூர் மூலங்கிழார்
என்பதும், இவரின் பெற்றோர் இருந்தது ஆவூர் மூலமென்பதும், இவர்
வாழ்ந்தது பெருந்தலை யென்பதும் துணிபாம். இவர்க்குத் தலை
பெருத்திருந்த காரணத்தால், பெருந்தலைச் சாத்தனாரெனப்பட்டாரென்பாரு
முண்டு. இவர் புலமை சிறந்து மேம்படுங்கால், வறுமையுற்றுக் கோடைமலைத்
தலைவனும் பண்ணி யென்பாற்குப் பின் வந்தோனுமாகிய கடிய நெடு
வேட்டுவ னென்னும் செல்வனைக் கண்டு பரிசில் கேட்ப, அவன் பரிசில்
நீட்டித்தான்; பின்னர் அவர் சேரமான் ஒருவனால் பல்பிடுங்கப்பட்ட
மூவனென்பான் பாலும் பரிசில் பெறாது வருந்திச் சென்றார். முடிவில்
முதிரமலைக்குரிய குமண வள்ளலைக் காட்டிற் கண்டு பாடி, அவன்
தலைதருவான் வாளீய அதுபெற்றுச் சென்று இளங்குமணனைக் கண்டு
வாளைக் காட்டி இருவரையும் பண்டுபோல் அன்புகொள்ளச் செய்து
சிறப்புற்றார். கடிய நெடுவேட்டுவற்கு முன்பிருந்த பண்ணியென்பான்
பாண்டி வேந்தற்குத் தானைத் தலைவனென்றும், அவன் வேள்வி செய்து
விழுப்பமுற்றதை, “வரைநிலை யின்றி இரவலர்க் கீயும், வள்வா யம்பிற்
கோடைப் பொருநன், பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி”(அகம்.13)
யென்றும் கூறுவர். இவர், காதலர்ப் பிரிதலினும் கொடிது இன்மையது
இளிவு என்பதும், ஆடவன் ஒருவன் போர் செய்யுந் திறத்தை அவன்
மனைவிக்குக் கூறுவதும் மிக்க சுவையுடையனவாகும்.

 பண்டும் பண்டும் பாடுந ருவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற்
கிழவன் சேட்புலம் படரி னிழையணிந்து
புன்றலை மடப்பிடி பிரிசி லாகப்
5 பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க்
 கண்டீ ரக்கோ னாகலி னன்றும்
முயங்க லான்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருக னன்றியு நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்
10பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை
அணங்குசா லடுக்கம் பொழியுநும்
மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே.
(151)

    திணையும் துறையு மவை. இளங்கண்டீரக் கோவும்
இளவிச்சிக் கோவும் ஒருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச்
சாத்தனார், இளங்கண்டீரக் கோவைப் புல்லி இளவிச்சிக் கோவைப்
புல்லாராக, என்னை என்செயப் புல்லீராயினீ ரென அவர் பாடியது.

    உரை: பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப - முன்பேயும்
முன்பேயும் பாடுவார் விரும்ப; விண் தோய் சிமைய விறல்
வரைக்கவாஅன் - விசும்பைப் பொருந்திய உச்சியையுடைய சிறந்த
மலைப்பக்கத்து; சேட் புலம் கிழவன் படரின் - நெடுந்தூரத்தே தம்
கணவன் செல்லின்; இழை யணிந்து - ஆபரணத்தை யணிந்து;
புன்றலை மடப் பிடி - புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியை;
பரிசிலாக - பரிசிலாகக் கொண்டு; பெண்டிரும் தம் பதம்
கொடுக்கும் -அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில் கொடுக்கும்;
வண் புகழ்க் கண்டீரக் கோனாகலின் - வள்ளிய புகழையுடைய
கண்டீரக் கோனாதலாலே; நன்றும் யான் முயங்கல் ஆன்றிசின் -
பெரிதும் யான் தழுவிக்கொள்ளுதலை யமைந்தேன்; பொலம் தேர்
நன்னன் மருகன் அன்றியும் - பொன்னாற் செய்யப்பட்ட
தேரினையுடைய நன்னன் மரபினுள்ளாயாத லன்றியும்; நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன் - நீயும் தழுவுதற்குப் பொருந்தினாய்,
ஆயினும்; வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின் -
விளங்கும் மொழியையுடைய பாடுவார்க்கு அடைத்த கதவு
காரணமாக; ஆடு மழை அணங்கு சால் அடுக்கம் பொழியும் -
இயங்கும் முகில் தெய்வமமைந்த அரைமலைக் கண்ணே சொரியும்;
மணங் கமழ் மால் வரை எமர் வரைந்தனர் -
நுமது மணநாறும் உயர்ந்த மலையை எம் முள்ளார் பாடுதலை
நீக்கினார், ஆதலான் முயங்கிற்றிலேன் எ-று.

    பெண்டிரும் தன் பதம் கொடுக்குமெனவே ஆடவரும் தம்
தரத்தே களிறு கொடுத்தல் போந்தது. “கிழவன்”என்பது “ஏவலிளையர்
தாய் வயிறு கறிப்ப”என்பது போலப் பன்மை சுட்டி நின்றது. “நன்னன்
மருக னன்றியும்”என்றதற்கு, “பெண்கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிராயத்துச் செலீஇயரோ அன்னை”(குறுந்.292) என்றமையின்,
அதுவும் வரைதற்கு ஒரு காரணமாக வுரைப்பாருமுளர். பதமென்றது,
பரிசிலை. மன்: ஒழியிசைக்கண் வந்தது.

    விளக்கம்: விறல் மலை, சிறந்த மலை. கவான், மலைப்பக்கம்.
மனைக்கிழவன் சேட்புலம் சென்றால், மனைக்கிழத்தி தன் தகுதிக்கேற்ப
வழங்குவ வழங்கிக் குடிப்புகழைப் பேணுதல் கற்பு மாண்பாதலின்,
“பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்”என்றார்.
“மனையோள், பாணரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு
கைதூவாளே”(புறம்.334) என்று பிறரும் கூறுதல் காண்க. பெண்டிரும்
என்ற  உம்மை எச்சவும்மையாகலின், “பெண்டிரும்.......போந்தது”என்றார்.
நன்னன் மருகனாதலால் தழுவிக்கொள்ளற் கொருவா றமைந்தாயாயினும்,
எமர் பாடுதல் வரைந்தனராதலின், தழீஇக் கொள்ளே னாயினேன்
என்பதாம். இங்ஙனம் கொள்ளுமிடத்து, பொலந் தேர் நன்னன், செங்கை
மாத்து நன்னன சேய்  நன்னனாகக்  கோடல்  அமையும்.  வாளா  
நன்னன்  என்றமையின் பெண் கொலைபுரிந்த நன்னனென்று கொண்டு,
தழுவாமைக்கு அந்நனன் மருகனாதல் காரணமாகக் கொண்டுரைப்பவரும்
உண்டென்றார். அடுக்கம், மலைப்பக்கம்; அரைமலையுமாம். தாய் என்னும்
ஒருமை, இளையரை நோக்கப் பன்மை சுட்டி நிற்பதுபோல, கிழவன்
என்பதும் பன்மை சுட்டிநின்ற தென்பதாம்.