188. பாண்டியன் அறிவுடை நம்பி பிசிராந்தையாரால் நெறிப்படுத்தப்பெற்ற பாண்டியன் அறிவுடை நம்பி, இன்பத்துறையில் எளியனாயிருந்து மக்கட்பேறின்றி யிருந்து பின்னர் அதனைப் பெற்று இன்புற்றான். தன் பெயருக்கேற்ப நல்லறிவுடைய நம்பியாய்த் திகழ்தலின், தான் பெற்ற இன்பத்தைப் பிறர்க்குக் காட்ட எண்ணினான். இம்மையுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமும் மறுவின், றெய்துப, செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோ ரெனப், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம், வாயே யாகுதல் (அகம்.96) கண்டு, அந் நலங்களை யெடுத்தோதுதலை விடுத்து, இளஞ்சிறார்கள் செய்யும் இன்பச் சிறுதொழில்களையே கண்டு எடுத்தோத விழைந்தான். செல்வ வாழ்வென்பது தமித்துண்டலின்றி விருந்தோடுண்பதாற்றான் இன்பந் தருவதாகும் என்பதைக் கண்டான். கண்டவிடத்தும், அவ்வின்பமும் இளஞ்சிறார் தம்முடைய சிறுகை நீட்டிக் குறுகுறு நடந்துவந்து, தம் பெற்றோர் உண்ணும் உணவிற்றம் இரு கைகையும் இட்டும் தொட்டும் கவ்வியும் துழாவியும், தம் உடலெங்கும் சிதறியும் இன்பச் சிறு தொழில் புரிய, அவர் சிதைத்துச் சிதறப்படும் உணவை அவர் உண்ணுங்கால் உண்டாகும் இன்பம் பெரிதாதலை யறிந்தான். அப்போது அவ் விளஞ்சிறார் மிழற்றும் சொல்லும் செய்யும் செயலும் கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் இன்பந் தந்து அறிவை மயக்குதலின், செல்வத்தின் அருமையாதல் உணவின் இன்றியமையாமையாதல் அறிவிற்குப் புலனாகாதாக,உயிர் வாழ்வின் பயன் இதுவே யென உயிர் அமைந்து போதலை யுணர்ந்தான். இன்ன நலம் சான்ற மக்களைப் பயவாதார்க்கு உயிர் வாழ்வால் முடிக்கக்கூடிய பொருளே யில்லை என்று யாப்புறுப் பான் இப் பாட்டைப் பாடியுள்ளான். | படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுந் கவ்வியுந் துழந்தும் | 5 | நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும் | | மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே. (188) |
திணையுந் துறையு மவை. பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.
உரை. படைப்புப் பல படைத்து - படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்து; பலரோடு உண்ணும் - பலருடனே கூட வுண்ணும்; உடைப் பெருஞ் செல்வ ராயினும் - உடைமை மிக்க செல்வத்தை யுடையோராயினும்; இடைப் பட - இடையே யுண்டாக; குறு குறு நடந்து - குறுகக் குறுக நடந்து சென்று; சிறு கை நீட்டி - சிறிய கையை நீட்டி; இட்டும் - கலந்தின்கட் கிடந்ததனைத் தரையிலே யிட்டும்; தொட்டும் - கூடப்பிசைந்து தோண்டியும்; கவ்வியும் - வாயாற் கவ்வியும்; துழந்தும் - கையால் துழாவியும்; நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் - நெய்யை யுடைய சோற்றை உடம்பின்கட் படச் சிதறியும்; மயக்குறும் மக்களை இல்லோர்க்கு - இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வரை இயல்லாதார்க்கு; பயக் குறை இல்லை - பயனாகிய முடிக்கப்படும் பொருளில்லை; தாம் வாழும் நாள் - தாம் உயிர் வாழும் நாளின்கண் எ-று.
தொட்டென்பதற்குக் கூட வாரிப் பிடித்தெனினு மமையும். குறையென்பது முடிக்கப்படுங்கால் முடிக்கப்படும் பொருள். இனிப் பயக்குறையுள்ளதென ஒருசொல் வருவித்துத் தாம் வாழும் நாளும் இல்லை யென்று கூறுவாரு முளர்.
விளக்கம்: படைப்பு, படைக்கப்படும் செல்வம்; வாழிய பெரும நின் வரம்பில் படைப்பு(புறம்.22) என்றார் பிறரும். பலரோ டுண்ணும் செல்வர், உடைப்பெருஞ் செல்வர் என இயையும். பெருமை, மிகுதி குறித்தலின், உடைப்பெருஞ் செல்வ ரென்றதற்கு உடைமை மிக்க செல்வரென்றார். மயங்குவது அறிவாகலானும், மக்கள் மயக்கத்தைத் தரும் பொருளாகாமையாலும், மயக்குறு மக்க ளென்றதற்கு அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வ ரென்றார். குறை இன்றியமையாப் பொருள். மக்களை யில்லோர்க்குப் பயன் குறைவாகவே யுளது; வாழும் நாளும் இல்லை என்று உரை கூறுதலு முண்மையின், இனி.....கூறுவாரு முளரென்றார். |