| 195.                நரிவெரூஉத்தலையார்      நரிவெரூஉத்தலையார்          ஆழ்ந்த  புலமை  யுள்ளம்   படைத்த சான்றோராவர். இன்பம் துன்பம் என்ற இருவகைக் காட்சிகளையும் ஆழ்ந்து
 நுணுகிச் சென்று அகன்று ஓங்கும் அறிவுநெறி இவர்பால் நன்கமைந்துளது.
 காதலன் பிரிந்தானாக, அப்பிரிவுத் துன்பத்தை யாற்றாத தலை மகளைக்
 கண்ட தோழி, மெல்லிய இயல்பினையுடைய இவள், இதனை ஆற்றுவளோ
 எனத் தனக்குள்ளே யெண்ணிக் கலங்கினாள். தலை மகளோ, அதனைக்
 குறிப்பால் அறிந்துகொண்டாள். காதலன் தனக்குரிய கடமை குறித்துப்
 பிரிந்துள்ளான்; காலினும் கடமை பெரிது; அதுகுறித்து ஆற்றுதல் கற்புடைய
 மகட்குக் கடன் என்பதை நன்குணர்ந்தாள். தன் கற்புமாண் பறியாத
 தோழிக்கு அதனைக் கூறுதல் நன்றன்றெனக் கொண்டாள். காதற்காமத்
 துறைக்கண் பிரிவுபற்றி நிகழும் துன்பத்தை யறியாள் போலப் பேசலுற்று,
 தலைவன் பிரிந்தானாக, என் கண்கள் உறங்காவாயின; இதுதான்
 காமநோய் என்பதோ?என்பதுபட, மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்,
 பல்லித முண்கண்பாடொல் லாவே........அதுகொல் தோழி காம நோயே
 (குறுந். 5) என்றா ளெனப் பாடிக்காட்டுகின்றார். தலைமக னொருவன்
 தான் காதலித்த தலைவியை மணப்பதற்கிடையே பிரிந்து செல்ல வேண்டிய
 கடமை யுண்டாகிறது. அவன் தோழியை நோக்கி, யான் வருந்துணையும்
 இவளைப் பாதுகாப்பாயாகஎன்கின்றான். அவற்குத் தோழி, நீ இவளை
 விட்டுப் பிரிந்தே மெனக் கைவிட்டுப் பிரியுநாள் வரட்டும்; அப்போதுதானே
 இது கூறல் வேண்டுவதுஎன்றாள்; தலைமகன் அது கேட்டு வருந்தினான்;
 தலைவ, நீ உண்மையாகவே வருந்தினாயாயின் ஒன்று செய்; நீ இவள்பால்
 நுகர்ந்த நலம் உண்டன்றோ? அதனைத் தந்துவிட்டுச் செல்என
 நகையாடுவாளாய், விட்டென விடுக்குநாள் வருக, அது நீ, உண்ட என்
 நலனே(குறுந். 236) என்றாளெனக் கூறுகின்றார். இவ்வாறு இரண்டு
 பாட்டுக்களாலும், தலைவி, தோழி யென்ற இருவருடைய மனமாண்புகளை
 ஆழ அகழ்ந்தெடுத்துக் காட்டும் இந்நரிவெரூஉத்தலையாரது புலமை நலத்தை
 ஒருவாறு காணலாம்.
 
 சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேர லிரும்பொறையைக்
 கண்டு தம்முடம்பு நலமுறப் பெற்ற இவர், இவ்வாறு தமக்கு நலஞ் செய்த
 அவனது தோற்றச் சிறப்புக் கெடாது நிலைபெறுமாறு கூறிய புலமை யுரையை
 எருமை யன்ன(புறம்.5)       எனத் தொடங்கும் புறப்பாட்டிற் கண்டோம்.
 இப்பாட்டின்கண்,        இவர் காலத்துச் சான்றோர்சிலர் பரிசிற்றுறையிலும்
 அகத்துறையிலும்        தம்  புலமை  வளத்தையும், போர்த்துறையில்       மெய்
 வளத்தையும்  பயன்படுத்தக்        கண்டு  நன்னெறிக்கண் பயன்படுத்துமாறு
 அறிவுறுத்த        முற்பட்டு,   நரைத்து முதிர்ந்த சான்றீரே,கூற்றுவன்       போந்து
 நும்   முயிரைப்  பற்றுங்கால்       நீவிர் வருந்துவீர்கள்;  உங்களால்  மக்கட்கு
 நல்லது       செய்தல் இயலாதாயின், அவர்கட்குத் துன்பம் விளைக்கும்       துறையில்
 வேந்தர்களையும் பிறரையும்       ஊக்குதலாகிய அல்லது செய்தலை ஒழியின்;
 அதுவே        எல்லார்க்கும்  உவப்பைத்   தருவது; நன்னெறியுமாவதுஎனத்
 தெருட்டியுள்ளார்.
 |  | பல்சான்             றீரே             பல்சான் றீரே கயன்முள் ளன்ன             நரைமுதிர் திரைகவுட்
 பயனின் மூப்பிற்             பல்சான் றீரே
 கணிச்சிக் கூர்ம்படைக்             கடுந்திற லொருவன்
 |  | 5 | பிணிக்குங்             காலை             யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ             ராயினும்
 அல்லது செய்த லோம்புமி             னதுதான்
 எல்லாரு முவப்ப தன்றியும்
 நல்லாற்றுப் படூஉ             நெறியுமா ரதுவே. (195)
 | 
              திணை: அது. துறை: பொருண்மொழிக்காட்சி.         நரிவெரூஉத்தலை யார் பாடியது.
 
 உரை: பல் சான்றீரே பல் சான்றீரே - பல         அமைந்த
 குணங்களை யுடையீர், பல அமைந்த குணங்கை யுடையீர்; கயல்
 முள் ளன்ன நரை முதிர் திரை கவுள் - கயலினது முட்போன்ற நரை
 முதிர்ந்த திரைந்த கதுப்பினையும்; பயனில் மூப்பின் - பயனில்லாத
 முதுமையையுமுடைய; பல் சான்றீர் - பல அமைந்த  குணங்களை
 யுடையீர்; கணிச்சிக்   கூர்ப்படை  கடுந்திறல் ஒருவன் - மழுவாகிய
 கூரிய படைக்கலத்தினையும் கடிய  வலியினையுமுடைய  ஒருவன்;
 பிணிக்குங்   காலை  இரங்குவிர் - பாசத்தாற்   கட்டிக் கொண்டு
 போங்காலத்து இரங்குவீர் நீர்; நல்லது செய்தல்  ஆற்றீராயினும் -
 நல்வினையைச் செய்யமாட்டீராயினும்; அல்லது செய்தல்  ஓம்புமின்
 - தீவினையைச் செய்தலைப் பரிகரிமின்; அதுதான் எல்லாரும்
 உவப்பது - அதுதான் யாவரும் புகழ்வ ரென்றது; அன்றியும் -
 ஒழியவும்; நல்லாற்றுப் படூஉம் நெறியும் அது - நல்ல நெறியின்
 கண்ணே செலுத்தும் வழியும் அதுதான் எ-று.
 
 பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத்       தொக்கது; பல்குட்டுவர்
 (மதுரைக்.105)       என்பதுபோல. பலவாகிய குணங்களால் அமைந்தீர்
 எனினு       மமையும். பயனின் மூப்பென்று வைத்துப் பல் சான்றீரே       யென்றது,
 இகழ்ச்சிக்குறிப்பு. அடுக்கு       விரைவின்கண் வந்தது.
            விளக்கம்:          கயல் முள் - கயல் மீனினுடைய முள்.       நன்னெறிக் கண் வாழ்நாள் கழியாமையின், பயனில்       மூப்புஎன்றார். வெல்லற் கருமைபற்றிக்
 கூற்றுவனைக் கடுந்திற லொருவன்என்றார்.       கயிற்றாற் கட்டி உயிரை
 யீர்த்துச் செல்வ       னென்ப வாகலின், பிணிக்குங் காலையென்றார்.       நல்லது
 செய்தலினும், தீயது செய்யாமை       துன்பம் இல்லாதிருத்தற் கேதுவாகலின்,
 அல்லது       செய்த லோம்புமின்என்றும், தீயவை தீய       பயத்தலால், அவை
 தீயினும் அஞ்சப்படுதலின், தீயதென வாயாற்       சொல்லற்கும் விரும்பாது
 அல்லதுஎன்றும்       கூறினார். நல்லது செய்தலினும் தீயது செய்யாமை
 எல்லார்க்கும்       எளிதின் இயைவதுபற்றி, எல்லாரும் உவப்பதுஎன்றும்,
 நல்லது       செய்து நலம் பெறுதற்குரிய நன்னெறியு மதுவாகலின், நல்லாற்றுப்
 படூஉம்       நெறியு மாரதுவேயென்றும் வற்புறுத்தினார்.
 |