200. விச்சிக்கோ விச்சிக்கோ என்பான், இளங்கண்டீரக்கோவோடு நட்புற்று அவனோடிருந்து, பெருந்தலைச் சாத்தனாரால் தெருட்டப்பட்ட இளவிச்சிக்கோவுக்கு முன்னோன். விச்சி யென்பது ஒரு மலையின் பெயர். இதனைச் சூழ்ந்த நாடு விச்சி நாடென்றும் இந் நாட்டவர் விச்சியரென்றும் சான்றோர் கூறுப. வில்கெழு தானை விச்சியர் பெருமகன்(குறுந். 328)) என்று ஆசிரியர் பரணர் குறிப்பது காண்க.
பாரி யிறந்தபின், அவன் மகளிரைக் கொணர்ந்து திருக்கோவலூரில் பார்ப்பாரிடத்தே அடைக்கலப்படுத்திய கபிலர், அவர்களைத் தக்க அரச குமரர்கட்கு மணம்புரிவித்தல் கருதி, இந்த விச்சிக்கோவை யடைந்தார். விச்சிக்கோவும் பாரி மகளிரை மணந்துகோடற்குரிய தகுதியுடையனாயிருந்தான். விச்சிக்கோவும் கபிலரை வரவேற்றுச் சிறப்பித்தான். அவர் அவனை நோக்கி, விச்சிக்கோவே! யான் கொணர்ந்திருக்கும் இம் மகளிர், முல்லைக்கு நெடுந்தேர் அளித்த பரந்தோங்கிய சிறப்பினையுடைய வேள்பாரியின் மகளிர். யானொரு பரிசிலன்;அந்தணன், யான் மகட்கொடை புரிதற்குத் தகுதியுடையேன்; இவரை மணந்து கோடலே யான் நின்பால் பெறும் பரிசில்என்ற கருத்துப்படும் இப்பாட்டைப் பாடினார். | பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக் | 5 | கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப | | நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற் களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை | 10 | நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் | | கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன் | 15 | நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர் | | அடங்கா மன்னரை யடக்கும் மடங்கா விளையு ணாடுகிழ வோயே. (200) |
திணை: அது. துறை: பரசிற்றுறை. பாரி மகளிரை விச்சிக் கோனுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.
உரை: பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் கனி - குளிர்ந்த மலையின்கண் ஓங்கிய பசிய இலையையுடைய பலாவினது பழத்தை; கவர்ந்துண்ட கருவிரல் கடுவன் - கவர்ந்துண்ட கரிய விரலையுடைய கடுவன்; செம்முக மந்தியொடு சிறந்து - சிவந்த முகத்தையுடைய தனது மந்தியுடனே பொலிந்து; சேண் விளங்கி சேய்மைக்கண்ணே விளங்கி; மழை மிசை யறியா மால்வரை யடுக்கத்து - முகிலாலும் உச்சி யறியப்படாத உயர்ந்த மலைப் பக்கத்து; கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப - மூழ்கிலுச்சியின்கண் துயிலும் மலையகத்துத் தாழ்ந்த வரையை யுடையோய்; நிணம் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடு வேல் - நிணத்தைத் தின்று களித்த நெருப்புப்போலும் தலையையுடைய நெடிய வேலினையும்; களம் கொண்டு கனலும்: கடுங்கண் யானை - களத்தைத் தனதாக்கிக்கொண்டு காயும் தறுகண்மையையுடைய யானையினையும்; விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக்கோவே - விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணத்தினையுமுடைய விச்சிக் கோவே; இவர் - இவர்கள்தாம்; பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை - பூவைத் தனது தலையின்கண் மாறாத அலங்கரித்தாற்போலும் கொடி முல்லைதான்; நாத் தழும்பு இருப்பப் பாடா தாயினும் - நாத் தழும்பேறப் படாதாயினும்; கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த - ஒலிக்கும் மணியையுடைய நெடிய தேரைக் கொள்க வென்று சொல்லிக் கொடுத்த; பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் - பரந்து மேம்பட்ட தலைமையினையுடைய பாரிக்கு மகளிர்; யான் பரிசிலன்-; மன்னும் அந்தணன் - அதுவன்றியும் நிலைபெற்ற அந்தணன்; நீ-; வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் - பகைவரைப் போர் செய்யு முறைமையாற் பொருது தாழ்விக்கும் வாளால் மேம்படுபவன் ஆதலால்; நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி - நினக்கு யான் தரக் கொள்வாயாக; அடங்கா மன்னரை யடக்கும் - சினத்தையுடைய போராலே வேந்தரை மிகை யடக்கும்; மடங்கா விளையுள் நாடு கிழவோய் - மடக்கப்படாத மிக்க விளைதலையுடைய நாட்டை யுடையோய் எ-று.
மடக்குதல், போகம் ஒருக்குதல். பலவின் கனி கவர்ந்து உண்ட கடுவன், மந்தியொடு சிறந்து சேண் விளங்கிக் கழை மிசைத் துஞ்சும் என்றதனால், நீயும் இவரை வரைந்துகொண்டு இன்புற்று வாழ்தல் வேண்டுமென்பது தோன்ற நின்றது. யானே பரிசிலன்என்பதனால் நினக்கு என் குறை முடிக்க வேண்டுமென்பதூஉம், அந்தணன்என்றதனால், யான் தருதற்குரியே னென்பதூஉம் கொள்ளப்படும்.
உலகத்து மகட்பேசி விடக் கொடுத்தலை யன்றித் தாமே இவரைக் கொள்வாயாக என்று இரந்து கூறினமையின், இது, பரிசிற்றுறையாயிற்று.
விளக்கம்: மலையிடத்தே நின்று காய்ப்பினும், பலா, குறவராற் காக்கப்படுதலின், காவல ரறியாது கொண்டமை தோன்ற, பலவின் கனிகவர்ந்துண்ட கடுவன் என்றார். கடுவனுக்கு விரல் கருத் திருத்தலும் மந்திக்கு முகஞ் சிவந்திருத்தலும் இயல்பாதலின், கருவிரல் கடுவனென்றும் செம்முக மந்திஎன்றும் கூறினார். மலையிடத்தே பல்வகைக் காட்சிகள் காணப்படுவனவாயிருக்க, பலாக்கனி யுண்ட கடுவன் மந்தியொடு கூடிக் கழைமிசைத் துஞ்சும் காட்சியை வரைந் தெடுத்தோதியதன் கருத்து இது வென்பாராய், உரைகாரர் பலவின்......தோற்றி நின்றதுஎன்றார். பகைவர் உடலைக் குத்தி நிணத்தைச் சிதைத் தழிப்பதுபற்றி, நிணந்தின்று செருக்கிய என்றார். இஃது இலக்கணை. சிறப்பு தலைமை. பெண் பேசுதற்கும் கொடுத்தற்கும் தூது போதலும், காதல ரிருவருள் ஒருவர்க் கொருவரது காம நிலையுரைத்தலும், இவைபோல்வன பிறவும் செய்தலும் பார்ப்பனர்க்கு நிலையுரைத்தலும், இவைபோல்வன பிறவும் செய்தலும் பார்ப்பனர்க்கு அமையுமெனத் தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்கள் கூறுதலின், மன்னும் அந்தணன்என்றார். யான் எனக்குரிய முறையில் செய்வன செய்தல்போல, நீயும் நினக்குரிய செயலாகிய வாண்மேம் படுதலை முறைபிறழாது செய்கின்றா யென்பார், வரிசையில் வணக்கும்என்றார். யான் அந்தணன்; நீ வாள் மேம்படும் மரபினாய் என்பதாம். வாள் மேம்படு மரபிற் றோன்றியதற்கேற்ப வேந்தர் மிகையை யடக்குகின்றாயென்பார், அடங்கா மன்னரை யடக்கும் கிழவோய்என்றார். போகம் பல தலையாப் பல்கிப் பெருகுதலின், மடக்குதல் போக மொருக்குதல்எனப்பட்டது. ஒருக்குதல், வரையறுத்தல். பாரி மகளிரைக் கபிலர் மீள இருங்கோவேளிடம் கொண்டு செல்லுகின்றாராதலின், விச்சிக்கோ அவர் வேண்டுகோளை ஏற்கவில்லை யென்பது விளங்குகின்றது. |