21. கானப்பே ரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி

      இப் பெருவழுதி பாண்டி வேந்தருள் பழையோருள் ஒருவன். இவன்
காலத்து ஏனை முடிவேந்தரான சேரமான் மாரி வெண்கோவும், சோழன்
இராசசூயம் வேட்ட  பெருநற்கிள்ளியும்   இவற்கு   நண்பராயிருந்தனர்.
ஒருகாலத்து இம்மூவரும் ஒருங்கிருந்த காட்சி கண்டு ஒளவையார் மகிழ்ந்து
பாடியுள்ளார். அகநானூற்றைத் தொகுப்பித்தோன் இவன் என்பர். இவன்
முன்பே திருவள்ளுவரது திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் கூறுப.
கானப்பேர் என்பது இப்போது காளையார் கோயிலென வழங்குகிறது. இது
பாண்டிநாட்டிலுள்ளது. இவன் காலத்தே இது வேங்கை மார்பன் என்னும்
குறுநில மன்னற் குரியதாய் நல்ல அரணமைந்து விளங்கிற்று. இவன்
அம்மன்னனை வென்று அக்கானப்பேரெயிலைத் தனக்குரித்தாகக்
கொண்டான். அதனாற்றான், இவற்குக் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்
பெருவழுதி எனப் பெயர் வழங்குகிறது.

     கானப் பேரெயில்   கடந்து  வென்றி  கொண்டு    விளங்கும்
மேம்பாட்டைக் கண்டு வியந்து ஐயூர் மூலங்கிழார் என்னும் சான்றோர்
இப்பாட்டின்கண் இக்கானப்பேரெயிலின் அரண் சிறப்பை யெடுத்தோதி,
அதற்குரியனான வேங்கை மார்பன், “இனி, இஃது இரும்புண்ட நீரினும்
மீட்டற் கரிது” என இரங்குமாறு இவன் அதனைக் கடந்த செய்தியைப்
பாராட்டி வாழ்த்துகின்றார். ஐயூர் மூலம் என்பது ஓரூர். ஐயூர் என்பது
வேறு; ஐயூர் மூலமென்பது வேறு.

  புலவரை யிறந்த புகழ்சா றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற்
5. கதிர் நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டி
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென
வேங்கை மார்ப னிரங்க வைகலும்
10. ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே.
(21)

      திணையும் துறையும் அவை.  கானப்   பேரெயில்  கடந்த
உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

     உரை: புலவரை யிறந்த புகழ் சால் தோன்றல் -  நின்னைப்
பாடுவாரது அறிவின் எல்லையைக்  கடந்த  புகழமைந்த  தலைவ;
நிலவரை இறந்த குண்டு கண் அகழி -  நிலவெல்லையைக் கடந்த
பாதலத்தே   யுற   ஆழ்ந்த   இடத்தையுடைய  அகழியினையும்;
வான்தோய் வன்ன புரிசை -உயர்ச்சியால் வானைப் பொருந்துவது
போன்ற மதிலையும்; விசும்பின் மீன் பூத் தன்ன உருவ ஞாயில் -
அவ்வானிடத்து   மீனைப்   பூத்தாற்போன்ற   வடிவையுடைய
சூட்டினையும்;  கதிர்  நுழை  கல்லா  மரம்  பயில்  கடிமிளை -
வெயிற்கதிர்  நுழையாத   மரஞ்   செறிந்த  காவற்காட்டினையு
முடைத்தாய்;   அருங்  குறும்பு   உடுத்த  கானப்   பேரெயில் -
அணைதற்கரிய  சிற்றரண்களாற்  சூழப்பட்ட கானப்பே ரென்னு
மரண்;  கருங்   கைக்   கொல்லன் -   வலிய கையையுடைய
கொல்லனால்; செந்   தீ   மாட்டிய - செந்   தீயின் கண்ணே
மாட்டப்பட்ட; இரும் புண்  நீரினும்  மீட்டற் கரிது என -
இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிதெனக் கருதி; வேங்கை மார்பன்
இரங்க - வேங்கை மார்பன் வருந்த; வைகலும்- நாடோறும்; ஆடு
கொளக் குழைந்த தும்பை -   வென்றி   கொளத்     தழைத்த
தும்பையையுடைய; புலவர் பாடு துறை முற்றிய-புலவர் பாடப்படும்
துறைகளை    முடித்த; கொற்ற வேந்தே - வெற்றியினையுடைய
வேந்தே; இகழுநர் இசையொடு மாய - நின்னை மதியாத பகைவர்
தம்முடைய புகழுடனே பொன்ற; புகழொடு விளங்கி  - வெற்றிப்
புகழுடனே விளங்கி; பூக்க நின் வேல் - பொலிவதாக நின் வேல்
எ-று.

     கானப் பேரெயில் மீட்டற் கரிதென வேங்கை  மார்பன்   இரங்கப்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே, நின் வேல் பூக்க  வெனக்   கூட்டி
வினைமுடிவு செய்க. குழைத்த வென்பது குழைந்த வென மெலிந்து நின்றது.

     விளக்கம்: உக்கிரப் பெருவழுதியின் புகழ் மிகுதி, புலவர புலம
யெல்லயக் கடந் நிற்ப என்ப தோன்ற, ‘‘புலவரயிறந்த புகழ்சால்
தோன்றல்” என்றார். நிலவரை இறந்தவழி யுள்ளது பாதல வெல்லை
யென்பவாகலின், நிலவரை இறந்த என்றதற்கு, நில வெல்லையைக் கடந்த
என்றதனோ டமையாது, “பாதலத்தே உற ஆழ்ந்த” என்றார். புரிசையின்
எல்லைக்கு வான் கூறப்பட்டமையின், அகழியின் எல்லையாகப் பாதலம்
கூறப்பட்டதென்றுமாம். புரிசை வானத்தின்கண் தோய்ந்தாற் போல்வதற்குக்
காரணம் உயர்ச்சியாதலால், “உயர்ச்சியால்” என்றுரைத்தார். அகழி
யென்றதே ஆழ முடைமை யுணர்த்துதலின், வேறு கூறாராயினார். சூட்டு
உச்சி. அது விண்மீன் போலத் தோன்றுதல்பற்றி, “மீன்பூத் தன்ன உருவ
ஞாயில்” எனப்பட்டது. குறும்பு - சிற்றரண். பழுக்கக் காய்ச்சிய இரும்பில்
நீரைச் சொரியின் அதன்பால் மிக்க வெம்மையுள்ள வரையில் அந்நீர்
ஆவியாய் மறைந்து போதலின், அந்நீர் இரும்பால் உண்ணப்பட்ட தென்று
கூறுப. இரும்பினிடத்திலிருந்து மீளவும் அது பெறலாகாமையின்,
“இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிது” என்றார்; “கனலிரும்புண்ட நீரின்
விடாது” (பெருங். 3.25.71) என்று கொங்குவேளிரும் கூறுதல் காண்க.
உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிக் கொண்டமையின், தோற் றோடிய
வேங்கை மார்பன், இனி “இக் கானப் பேரெயில் இரும்புண் நீரினு மீட்டற்
கரிதென” நினைத்துக் கூறினான். குழைதல் - தழைத்தல். பாடு துறை -
பாடுதற்குரிய புறத்திணைத் துறைகள். இசையொடு மாய்தலாவது, இசையைத்
தாங்கும் நாடழிதலால், அதனாற்றாங்கப்படும் புகழும் உடனழிதல்.