104.அதியமான் நெடுமான் அஞ்சி

     ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பொருது வெல்வது
குறித்து அவனிருந்த தகடூரைப் பகைவேந்தர் தம் படையொடு போந்து
முற்றுகையிடக் கருதினர். அதனை ஒற்றரால் அறிந்து வைத்தும் அதியமான்
அஞ்சாது செய்வன செய்து வந்தான். அவனது திருவோலக்கத்திருந்த
ஒளவையார் பகைவர் முயற்சியும் அதியமான் மனவுரமும் அறிந்து
பகைவர்க்கு அதியமானது வலியைத் தெரிவித்தற்குச் செவ்வி
நோக்கியிருந்தார். இதற்குள் போர் மூண்டது; போரில் அதியமான்
பகைமன்னரைத் தன் னகர்ப்புறத்தே வென்று வாகை சூடினான். தோற்ற
வேந்தர்க்கு அறிவுறுக்கு மாற்றால் ஒளவையார் அதியமானது
வாகைநிலையைப் பாராட்டி, “நீவிர் போருடற்றக் கருதியது அதியமான்
இளையன் என்பது பற்றியாகும். அதனால் அவனை அவனிருந்த
ஊரிடத்தே வெல்லுதலை விரும்பினீர்கள்; முழங்காலளவிற்றாய நீரிற்
கிடப்பினும் முதலை பெருங்களிற்றையும் கொல்லும் வலியுடைத்தாம்; அம்
முதலை போல்வன் அதியமான்; இன்று அறிவிக்கின்றேன்; இனியேனும்
இவனை இளையன் என்று இகழ்வதை விடுத்து நும்மைப் பாதுகாத்து
வாழ்மின்’’என இப்பாட்டின்கண் உரைத்துள்ளார்.

 
 போற்றுமின் மறவீர் சாற்றுது நும்மை
ஊர்க்குறு மாக்க ளாடக் கலங்கும்
தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் காரஅத் தன்ன வென்னை
5நுண்பல் கரும நினையா
திளையனென் றிகழிற் பெறலரி தாடே.(104)

     திணை:வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.

     உரை: போற்றுமின் - நீங்கள் பாதுகாமின், மறவீர்-;
நும்மைச் சாற்றுதும் - நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்; ஊர்க்குறு
மாக்கள் ஆட  -ஊரின்கண் இளம்புதல்வர் ஆட; கலங்கும் தாள்
படு சின்னீர் - கலங்குகின்ற காலளவான அளவிற்பட்ட நீருள்ளே;
களிறு அட்டு வீழ்க்கும் - யானையைக் கொன்று வீழ்க்கும்; ஈர்ப்பு
உரைக் கராஅத்தன்ன - இழுத்தலையுடைய முதலையை யொக்கும்;
என்னை -என் இறைவனது,  நுண்பல்  கருமம்  நினையாது -
நுண்ணிய  பல கருமத்தையும்  நினையாதே;  இளையன்  என்று
இகழின் - இளையனென்று மதியா திருப்பின்; ஆடு பெறல் அரிது
- நுங்களுக்கு வென்றி பெறுதல் அரிது எ-று.

     மறவீர், நுமக்குச் சாற்றுதும்; என்னை இளையன் என்றிகழின் வென்றி
பெறுதல் அரிது; ஆதலால், நீர் போற்றுமின் எனக் கூட்டுக. மீப்புடையென்
றோதி மிகுதியை யுடைய வென்று செப்பினு மமையும்.

     விளக்கம்:இளஞ்  சிறுவர்களைக்   “குறு மாக்கள்” என்றார்,
மனவுணர்வு நிரம்பாமையின். நிரம்பியவழிக் “குறு மகன்”என்றும், “குறு
மகள்”என்றும் வழங்குதல் காண்க. ஆடுதல், விளையாடுதல். தாள் படு
சின்னீர் - தாள்  மறையும் அளவிற்றான தண்ணீர். இடத்தால் வலி
மிகுதலோடு இயல்பாகவே பெருங்களிற்றினையும் பற்றி யீர்த்துக் கொல்லும்
வலியுடைத்தாதல் தோன்ற, “ஈர்ப்புடைக் கராஅம்”என்றார். “நெடும்
புனலுள் வெல்லும் முதலை”  (குறள். 495)  என்றது  பொது   வியல்பு.
என்னை - என் இறைவன். அதியமான் தனக்கு இறைவனென்றும், அவன்
கராம்போலும் வலியுடையனென்றும் கூறியவாறு. நுண் பல்
கருமம் - நுணுகி யாய்ந்து செய்யும் பல்வகைக் கருமச் சூழ்ச்சி. இதனால்,
அதியமான் இளையனாயினும், இடத்தாலும் மெய் வலியாலும் வினை
வலியாலும் பெரியனாகலின், அவனைப் பகைவர் வெல்லுதல்
அரிதென்றவாறு. ஈரப்புடை  யென்னாது மீப்புடை யென்று பாடமாயின்,
மீப்புமிகுதி குறிக்கும் என்றற்கு “மீப்புடை..... அமையும்” என்றார்.