97.அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறைசெலுத்தற்குரிய வேந்தர்சிலர் அதனைச் செலுத்தாது போர்க்குச் சமைந்திருப்பதை ஒளவையார் அறிந்தார். அவர்கட்கு உண்மை யறிவித்தற்கும், அதுவே வாயிலாக அதியமானைப் பாராட்டுதற்கும் எண்ணி, இப்பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண், நெடுமான் அஞ்சி யேந்திய வாள் போரில் உழந்து உருவிழந்துள்ளது; வேல் மடை கலங்கி நிலை திரிந்துளது; களிறுகள் பகைவர் களிற்றுத் திரளொடு பொருது தொடி கழிந்துள்ளன; குதிரைகள் போர்க்களக் குருதியிற் றோய்ந்து குளம்புகள் மறுப்பட்டுள்ளன; அவன் பகைவர் எறிந்த அம்புகளால் துளையுண்ட கேடயத்தை யேந்தியுள்ளான்;இவற்றால் இவனைப் பகைத்துப் பொரக் கருதியவர் உய்ந்து போதல் இல்லை; ஆதலால், உங்கள் மூதூர் உங்கட்கு உரித்தாகல் வேண்டின், அவனுக்குரிய திறையைச் செலுத்தி யுய்மின்; மறுப்பீராயின், அவன் ஒருகாலும் பொறான்; யான் சொல்லு மிதனைக் கேளீராயின்; உங்களுடைய உரிமை மகளிர் தோளைப் பிரிந்து மடிதல் திண்ணம்; இதனை யறிந்து போர்செய்தற்கு நினைமின் என்று பாடியுள்ளார். | போர்க்குரைஇப் புகன்று கழித்தவாள் உடன்றவர்காப் புடைமதிலழித்தலின் ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே வேலே, குறும்படைந்த வரண்கடந்தவர் | 5 | நறுங்கள்ளி னாடுநைத்தலிற் சுரைதழீஇய விருங்காழொடு மடைகலங்கி நிலைதிரிந்தனவே களிறே, எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர் குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற் | 10 | பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே மாவே, பரந்தொருங்கு மலைந்தமறவர் பொலம்பைந்தார் கெடப்பரிதலிற் களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே அவன்றானும், நிலத்திரைக்குங் கடற்றானைப் | 15 | பொலந்தும்பைக் கழற்பாண்டிற் கணைபொருத துளைத்தோ லன்னே ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட் பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர் நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற் | 20 | கிறுக்கல் வேண்டுந் திறையே மருப்பின் ஒல்வா னல்லன் வெம்போ ரானெனச் சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற் கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக் குறுந்தொடி மகளிர் தோள்விடல் |
25 | இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே. (97) |
திணையும் துறையு மவை. அதியமா னெடுமான் அஞ்சியை அவர்பாடியது.
உரை: போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள் - போரைச் செய்தற்குப் புடை பெயர்ந்து உலாவி விரும்பி உறை கழித்த வாள்கள்தாம்; உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின் - பகைத்தவரது காவலையுடைய அரணை யழித்தலால்; ஊன் உற மூழ்கிஉரு இழந்தன - அவர் தசையின்கண்ணே உறக்குளித்துக் கதுவாய் போய் வடி விழந்தன; வேல் - அவன் வேல்கள்தாம்; குறும்பு அடைந்த அரண் கடந்து - குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று; அவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின் - அப்பகைவரது நறிய மதுவையுடைய நாட்டை யழித்தலால்; சுரை தழீஇய இருங் காழொடு - சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே; மடை கலங்கி நிலை திரிந்தன - ஆணி கலங்கி நிலைகெட்டன; களிறு - அவன் களிறுதாம்; எழூஉத் தாங்கிய கதவு மலைத்து - கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது; அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின் - அப்பகைவரது திரண்ட களிற்றையுடைய அரணை யழித்தலால்; பரூஉப் பிணிய தொடி கழிந்தன - பரிய பிணித்தலை யுடையவாகிய கிம்புரிகள் கழன்றன; மா - அவன் குதிரைதாம்; பரந்து- பரந்து வந்து; ஒருங்கு மலைந்தவர் - ஒக்கப் பொருத வீரரது; பொலம் பைந்தார் கெட - பொன்னாற் செய்யப்பட்ட பசிய மாலையையுடைய மார்பு உருவழிய; பரிதலின் - ஓடுதலால்; களன் உழந்து அசைஇய மறுக் குறும்பின - போர்க்களத்தின்கட் பொருது வருந்திய குருதியான் மறுப்பட்ட குளம்பை யுடையவாயின; அவன் தானும்-; நிலம் திரைக்கும் கடல் தானை - நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கும் கடல்போன்ற படையுடனே; பொலந் தும்பை - பொன்னானியன்ற தும்பைக் கண்ணியையுடைய; கழல் பாண்டில் கணை பொருத துளைத் தோலன் - கழல் வடிவாகவும் கிண்ணி வடிவாகவும் செய்து செறிக்கப்பட்டு அம்பு படுதலால் துளைபட்ட பரிசையை யுடையன்; ஆயிடை - அவ்விடத்து; உடன்றோர் உய்தல் யாவது - அவனால் வெகுளப்பட்டோர் பிழைத்தல் எங்கே யுளது; தடந்தாள் பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர் - பெரிய தாளினையும் ஒன்றோடொன்று தெற்றிக் கிடக்கின்ற கதிரினையு முடைத்தாகிய நெல்லினையுடைய தலைமை பொருந்திய பழைய வூர்; நுமக்கு உரித்தாகல் வேண்டின் நுங்கட்குஉரித்தாக வேண்டுவிராயின்; சென்று அவற்குத் திறை இறுக்கல் வேண்டும் - போய் அவனுக்குத் திறை கொடுத்தல் வேண்டும்; மறுப்பின் - கொடீராயின்; ஒல்வான் அல்லன் வெல் போரான் என - அதற்குடம்படுவா னல்லன் வெல்லும் பூசலையுடையான் என்று; சொல்லவும் தேறீராயின் - யான் சொல்லவும் தெளியீராயின்; மெல்லியல் கழல் கனி வகுத்த - நுமக்கு மெல்லிய தன்மையையும் கழல் மணியினது கனியால் கூறுபடுத்துச் சுருட்டப்பட்ட; துணைச் சில் ஓதி - இனமாகிய சிலவாகிய பனிச்சையையும்; குறுந்தொடி மகளிர் - குறிய வளையையுமுடைய உரிமை மகளிரது; தோள் விடல் இறும்பூ தன்று - தோளைப் பிரிந்துறைதல் வியப்பன்று; அஃது அறிந்து ஆடுமின் - அதனை யறிந்து போர் செய்ம்மின் எ-று.
அறிந்தாடுமின் என்ற கருத்து, அறியிற்போர் செய்தல் அரிதென்பதாம்.குறும்பு, சிற்றரண். கடற் றானையினையும் பொலந்தும்பை யினையுமுடைய அவன் றானு மென்க.
விளக்கம்:உரைஇ - உலாவி ஒன்றார் தேயப்பூ மலைந் துரைஇ (பதிற்.40) என்றாற்போல. கதுவாய் போய் - மிகவும் வடுப்பட்டு. நைத்தல் - அழித்தல்; நைவித்தல் என வந்ததெனினுமாம். உள்ளே புழையுண்டாகச் செய்து அதன்கண்ணே காம்பைச் செருகி ஆணியிட்டு முடுக்கி வைத்தல் இயல்பு. குழூஉக்களிற்றுக் குறும்பு - குழுமியிருக்கும் யானைத்திரள் அரண் போறலின், களிற்றுக் குறும்பெனப்பட்டது. தொடி, ஈண்டுக் கிம்புரி மேற்று. தார்: ஆகுபெயரால் மார்பைக் குறித்தது. அசைவு - வருத்தம். நிலம் திரைக்கும் கடல் தானை - நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கிக் கொள்ளும் கடல் போலும் தானை. கழல் பாண்டில் கணை - கழல் வடிவாகவும் பாண்டில் வடிவாகவும் வாயமைக்கப்பட்ட அம்பு. பரிசை - கேடயம். பிணிக் கதிர் - ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் கதிர்கள். செம்மல் - தலைமை. மறுப்பாவது - கொடாமையாதலின், மறுப்பின் என்பதற்குக் கொடீராயின் என்றார். பனிச்சை - தலைமயிரை முடிக்கும் ஐவகையுள் ஒன்று. தோள் விடல் - தோளைப் பிரிந்துறைதல். எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார். (தொல். பொ. கற்பு: 34) என்பவாகலின், போரிடத்தே மகளிரைப் பிரிந்து போந்து நெடிது தங்கி உயிரிழப்பது உறுதியாதல் குறித்துத் தோள் விடல் என்றா ரென்றுமாம். |