113.வேள் பாரி வேள் பாரிக்கு மகளிர் இருவர் உண்டு. அவன் மூவேந்தர் சூழ்ச்சியால்இறந்தபோது அவர்கள் மணப்பருவ மெய்தியிருந்தனராதலால், அவர்களைத் தக்க பாதுகாப்பமைந்த இடத்தில் வைத்துத் தமிழ்நாட்டு வேந்தர்க்கு திருமணம் செய்விப்பது தமது கடனாமெனக் கருதி, வேள் பாரி இறந்ததும், கபிலர், அவர்களை யழைத்துச் செல்வாராயினர். செல்பவர், பார்ப்பாரிடை, வைத்த பொருட்கும் பார்ப்பார்க்கும் ஏதம் செய்தலாகா தென்ற அக்கால அரசியன் முறைப்படி அம் மகளிரைப் பார்ப்பாரிடை அடைக்கலப்படுத்தக் கருதிச் செலவு மேற்கொண்டார். அந்நாளில் பார்ப்பாரைத் தீண்டாமைப் பேய் பிடிக்கவில்லை. பறம்பு நாட்டைப் பிரியுங்கால், இதுகாறும் தமக்கு உணவும் உறையுளும் நல்கியின்புறுவித்த பறம்பினது நன்றியினை அவரால் மறக்க முடியவில்லை. அதனால் அவருளத்தே பிரிவாற்றாமை தோன்றிப் பேதுறுவித்தது. நெஞ்சு கலங்கிற்று. புலம்பும் பெரிதாயிற்று. அப் புலம்புரையே இப் பாட்டு. | மட்டுவாய் திறப்பவு மையிடை வீழ்ப்பவும் அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி நட்டனை மன்னோ முன்னே யினியே | 5 | பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர் நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே. (113) |
திணையுந் துறையு மவை. அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
உரை: மட்டு வாய் திறப்பவும் - மதுவிருந்த சாடியை வாய் திறப்பவும்; மைய விடை வீழ்ப்பவும் - ஆட்டுக் கிடாயை வீழ்ப்பவும்;அட்டு ஆன்றுஆனா - அடப்பட்டு அமைந் தொழியாத; கொழுந் துவை - கொழுவிய துவையையும்; ஊன் - ஊனையுமுடைய; சோறும் - சோற்றையும்; பொட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி - விரும்பிய பரிசே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து; நட்டனை மன் முன் - எம்மோடு நட்புச் செய்தாய் முன்பு; இனி - இப்பொழுது; பாரி மாய்ந் தென - பாரி இறந்தானாக; கலங்கிக் கையற்று - கலங்கிச் செயலற்று; நீர் வார் கண்ணேம் தொழுது - நீர் வார் கண்ணையுடையேமாய்த் தொழுது; நிற்பழிச்சிச் சேறும் - நின்னை வாழ்த்திச் செல்லுதும்; பெரும் பெயர்ப் பறம்பே - பெரிய புகழையுடைய பறம்பே; கோல் திரள் முன் கை குறுந்தொடி மகளிர் - கோற்றொழிலாகச் செய்யப்பட்ட திரண்ட குறிய வளையை யணிந்த முன்கையினையுடைய மகளிரது; நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்து - மணங்கமழும் கரிய கூந்தலைத் தீண்டுதற் குரியவரை நினைந்து எ-று.
பறம்பே, பெருவளம் பழுனி நட்டனை முன்பு; இனி, நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து சேறு மெனக் கூட்டுக. மன் கழிவின்கண் வந்தது. வாழியும் ஓவும் அசைநிலை. ஆனாக் கொழுந் துவை யென்பதற்கு விருப்பமமையாத கொழுந் துவை யெனினு மமையும்.
விளக்கம்: மட்டு - கள்; ஆகுபெயரால் அது நிறைந்திருக்கும் சாடிக்காயிற்று. இடையறவின்றி அடப்படுமாறு தோன்ற, அட்டான்றானா என்றார். பாரியோ மாய்ந்தனன்; யாமும் செல்கின்றேம்; நிற்கின்ற நீ, வேள் பாரியின் பெருமையும் புகழும் உலக முள்ளளவும் நிலைபெற்றோங்க நிற்கின்றாயாதலின், நீ வாழ்வாயாக என்பார்; வாழியோ பெரும்பெயர்ப் பறம்பேஎன்றார். தாம் செல்லுதற்கும் காரணம் இது வென்பார், மகளிர்க் குரிய கிழவரைப் படர்ந்து செல்கின்றேமென்றார். மணந்த கணவனாலன்றி மகளிர் கூந்தல் பிறரால் தீண்டப் படாதாகலின், அம்மரபு நோக்கி, மகளிர் நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தென்றார். கொழுந் துவை, தன்னை உண்பார்க்கு மேன்மலும் விருப்பத்தை மிகுவிக்கும் சுவையுடைய தென்றற்கு,விருப்ப மமையாத கொழுந் துவை யெனினு மமையும்என்றார். உரைகாரர். |