145. வையாவிக் கோப்பெரும் பேகன் சான்றோராகிய பரணர் இவ்வண்ணம் பாடக் கேட்ட பெரும் பேகன், அவர் வரிசைக்கும் தன் தகுதிக்கும் ஏற்பப் பரிசில் நல்கச் சமைந்தான். அதனை முன்னத்தால் அறிந்த பரணர், இடை மறித்து, மயில் பனிக்குமென அருள்கொண்டு படாம் நல்கிய பேக, யாங்கள் பசித்து வந்தோம் இல்லை; எம்மாற் புரக்கப்படும் சுற்றமும் எம்பால் இல்லை; நீ அறஞ் செய்தல்வேண்டும்; அருளறத்தை விரும்பும் அண்ணலாகிய நீ, அதனால், இன்றிரவே புறப்பட்டுத் தேரேறிச் சென்று அவளுடைய அருந்துயரைக் களைவாயாக; இதுவே யாம் நின்னை இரந்து பெறும் பரிசில் என்று இப் பாட்டிற் கூறியுள்ளார். | மடத்தகை மாமயில் பணிக்குமென் றருளிப் படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக பசித்து வாரேம் பாரமு மிலமே | 5 | களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் | | நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி அறஞ்செய் தீமோ அருள்வெய் யோயென இஃதியா மிரந்த பரிசிலஃ திருளின் இனமணி நெடுந்தே ரேறி | 10 | இன்னா துறைவி யரும்படர் களைமே. (145) |
திணையும் துறையு மவை. அவனை யவள் காரணமாக அவர் பாடியது.
உரை : மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளி - மெல்லிய தகைமையையுடைய கரிய மயில் குளிரால் நடுங்கு மென்று அருள் செய்து; படாஅம் ஈத்த - படாம் கொடுத்த; கெடாஅ நல் இசை - அழியாத நல்ல புகழினையுடைய; கடாஅ யானைக் கலிமான் பேக - மதம்பட்ட யானையையும் மனம் செருக்கிய குதிரையையுமுடைய பேக; பசித்தும் வாரேம் - யாம் பசித்தும் வருவே மல்லேம்; பாரமும் இலம் - எம்மாற் பரிக்கப்படும் சுற்றமு முடையேமல்லேம்; களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ் - களாப்பழம்போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை; நயம் புரிந் துறையுநர் - இசையின்பத்தை விரும்பி யுறைவார்; நடுங்கப் பண்ணி - அவ்விசை யின்பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசித்து; அறம் செய்தீமோ - அறத்தைச் செய்வாயாக; அருள் வெய்யோய் என- அருளை விரும்புவோ யென; இஃது யாம் இரந்த பரிசில் - இது நின்பால் யாம் இரந்த பரிசில்; அஃது - அஃதாவது; இருளின் - இற்றை யிரவின்கண்; இன மணி நெடுந் தேர் ஏறி - இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரை ஏறிப் போய்; இன்னாது உறைவி - காண்டற்கு இன்னாதாக உறைகின்றவள்; அரும் படர்களைமே - பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகிய நோயைத் தீர்ப்பாயாக எ-று.
பேக, இன்னா துறைவி அரும் படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இது எனக் கூட்டுக. இதுவென்றது, அப்படிப் படர் களைதலை. மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப், படாஅ மீத்த கெடா நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக; என்ற கருத்து; இவ்வாறு ஒரு காரணமின்றியும் அருள் பண்ணுகின்ற நின்னால் வருந்துகின்ற இவட்கு அருளா தொழிதல் தகாதென்பதாம்.
இனி, அருள் வெய்யோய், யாம் இரந்த பரிசில், அறஞ்செய்ய வேண்டுமென்று கூறுமிது; அவ் வறந்தான் யாதென்று கேட்பின், நின்பால் அருள் பெறாமையின் இன்னாதுறைவி அரும் படரை நீ சென்று களைதல்; அதனைச் செய்வாயாக வெனக் கூட்டி யுரைப்பினு மமையும். பனிக்கு மென்றஞ்சி யென்பதூஉம் பாடம்.
விளக்கம் : மடத்தகை யென்றவிடத்து மடமை, மென்மை. பரிக்கப்படுவது பாரம். அதனால், பரிக்கப்படும் சுற்றத்தாரைப் பாரம் என்றார். இசையிடத்துப் பிறக்கும் இன்பம், ஈண்டு நயம் எனப்பட்டது. அறமாவது செய்யத் தகுவது. தம்மாற் காதலிக்கப்பட்டாரைத் தலையளித்தல் தலைவர்கட்கு அறமாதலால், காதலியாகிய கண்ணகிக்குத் தலையளி செய்க என்பார் அறஞ் செய்தீமோ என்றார். அஃதென்பது நின்று வற்றாவாறு பொருளமைதி காட்டுதற்கு, இனி அருள் வெய்யோய்... அமையும்என்றார். |