153. வல்வி லோரி வன்பரணரைத் தலைவராகக்கொண்ட பாணர்சுற்றம், ஒருகால் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய செயல்களைச் செய்யாது சோம்பியிருந்தது. அதுகண்ட சான்றோர் சிலர் வியப்புற்று வன்பரணரை வினவினாராக, அவர்கட்கு அவர், என்பாண் சுற்றத்தார் கொல்லிப் பொருநனாகிய வல்வி லோரியைக் காணச் சென்றனர்; அவர்கட்கு அவன் பொன்னரி மாலையும் பிற கலன்களும் களிறுகளும் நல்கிச் சிறப்பித்தான்; அவன்பாற் பெற்ற பெருவளத்தால் அவர் பசி யறியாராயினர்; அதனால் அவர் தமக்குரிய பாடலும் ஆடலும் மறந்தொழிந்தனர்என இப்பாட்டின்கட் குறித்துரைக்கின்றார். | மழையணி குன்றத்துக் கிழவ னாளும் இழையணி யானை யிரப்போர்க் கீயும் சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை அடுபோ ரானா வாத னோரி | 5 | மாரி வண்கொடை காணிய நன்றும் | | சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை வானார்த் தொடுத்த கண்ணியுங் கலனும் யானை யினத்தொடு பெற்றனர் நீங்கிப் | 10 | பசியா ராகன் மாறுகொல் விசிபிணிக் | | கூடுகொ ளின்னியங் கறங்க ஆடலு மொல்லார்தம் பாடலு மறந்தே. (153) |
திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை: மழை யணி குன்றத்துக் கிழவன் - முகில் சூழ்ந்த மலைக்குத் தலைவன்; நாளும் இழையணி யானை இரப்போரக்கு ஈயும் - நாடோறும் பட்டமுதலாகிய பூண்களை யணிந்த யானையை இரப்போர்க்குக் கொடுக்கும்; சுடர் விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன் கை - கதிர் விடுகின்ற பசும்பொன்னாற் செய்த அணியினையும் வளைந்த கடகமமைந்த முன் கையினையுமுடைய; அடுபோர் ஆனா ஆதன் ஓரி - கொல்லும் போர் அமையாத ஆதனோரியது; மாரி வண் கொடை காணிய - மழைபோலும் வள்ளிய கொடையைக் காண்டற்கு; நன்றும் சென்றது எம் கண்ணுளங் கடும்பு - மிகவும் சென்றது எம்முடைய கூத்தச் சுற்றம்; பனி நீர்ப் பூவா மணிமிடை குவளை - குளிர்ந்த நீரின்கட் பூவாத மணிமிடைந்த குவளைப் பூவை; வால் நார்த் தொடுத்த கண்ணியும் - வெள்ளிய நாரால் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையினையும்; கலனும் - பிற அணிகலங்களையும்; யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி - யானை யணிகளுடனே பெற்றனராய் நீங்கி; பசியா ராகல் மாறுகொல் - பசியாராகலானே கொல்லோதான்; விசி பிணிக் கூடுகொள் இன்னியம் கறங்க - வாரால் வலித்துப் பிணிக்கப்பட்ட பல கருவியும் தொகுதி கொண்ட இனிய இயங்கள் ஒலிப்ப; ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்து - அச்சுற்றத்தார் ஆடுதலு மாட்டாராயினார் தமது பாடுதலையும் மறந்து எ-று.
சூர்ப்புடையதனைச் சூர்ப்பென்றார். குடிமை ஆண்மைத் (தொல். சொல். கிளவி.57) தொடக்கத்தன நின் றாங்கே நின்று உயர்திணை முடியும் பெறுதலின், இக் கடும்பென்பதும் பொருணோக்கால் முடிபு பெற்றது. கண்ணுளங் கடும்பென நின்றவழி, அம், அல்வழிச் சாரியை: மன்; அசைநிலை.
ஓரி வண் கொடை காணிய கண்ணுளங் கடும்பு சென்றது; சென்ற பின்றை அக் கடும்பாயினோர் தமது பாடலு மறந்து ஆடலு மொல்லாராயினார்; *அதற்குக் காரணம் பசி யாராகன் மாறு கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நுண் பூ ணென்று பாடமோதுவாரு முளர்.
விளக்கம்: சூர்ப்பு, வளைவு; சூர்ப்பமைந்த கடகத்தைச் சூர்ப்பென்றார்; சூர்ப்புறு கோல்வளை செறிந்த முன்கை(அகம்.142) என்றும், சூர்ப்புறு வளையைச் சூரமை நுடக்கத்து(ஐங்.71) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. கொடை வழங்குமிடத்து, கொடுப்பாரது இன்பமும் பெறுவாரது சிறப்பும் காண்டற்கினிமை நல்குதலின், வண்கொடை காணிய சென்றது கடும்புஎன்றார். மணி குயிற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட குவளையை மணிமிடை குவளையென்றும், ஏனைக் குவளையிற் பிரித்து வெளிப்படுத்தற்குப் பனிநீர்ப் பூவா மணி மிடை குவளையென்றும் கூறினார். வால் - வெண்மை; வெண்ணிறத்தையுடைய வெள்ளிக்காயிற்று. கூடுகொள் இன்னியம் என்றவிடத்துக் கூடு, தொகுதியாம். பிறர்பாற் சென்று இரத்தற்குரிய வறுமையுள தாயவிடத்து, தாம் கற்ற கல்வியை வளம்படுத்தற்பொருட்டு, நாளும் அதனைப் பயிறல் வேண்டும்; அம்முறையே இவர் தம்முடைய பாடல் மறந்து ஆடலும் கைவிட்டிருத்தலின், வறுமையுறாதவளமுடையராயினர் என்பது விளங்குதலின், பசியாராகன் மாறுகொல்என்றார். |