165.குமணன்

     காடு பற்றியிருக்கும் தன்பால் வந்து தம் வறுமைத் துன்பத்தை
யெடுத்தோதிப் பாடிய பெருந்தலைச் சாத்தனாரது பாட்டின் கருத்தையும்
அவர் உள்ளத் தமைதியையும் ஓர்ந்துணர்ந்தான் குமணன். தன்பாற்
பொருளில்லையாயினும், தன்னுடல் சிறந்த பொருளாதலையும் அதன்கண்
தலை சிறந்த வுறுப்பாதலையும், அதனைக்கொண்டு காட்டினால் தன்
தம்பியாகிய இளங் குமணன், மிக்க பொருள் தருவதாய் நாட்டு மக்கட்குத்
தெரிவித்திருத்தலையும் நினைந்து, தன் தலையைக் கொய்து கொண்டு
சென்று வேண்டும் பொருள் பெற்று வறுமைத் துயரைப் போக்கிக்கொள்க
வென்று தன் வாளை யெடுத்துக் குமணன் பெருந்தலைச் சாத்தனார் கையில்
தந்தான். கைந்நடுங்க, உளம் பதைக்க, அதை வாங்கிய சாத்தனார்,
காற்றினும் கடிதாய் இளங் குமணன்பால் சென்று, “யான் நின்
முன்னோனைக் கண்டு பாடி நின்றேன்; அவன், யான் பொருளின்றி வறிதே
வாடிச் செல்வது, நாடிழந்த தன் துயரினும் பெரிதாம் என நினைந்து, வேறு
தன்பால் சிறந்த பொருள் இல்லாமையால் தன் தலையை யரிந்து
கொள்ளுமாறு தன் வாளைத் தந்துளான்; யானும் அது பெற்றுப்
பேருவகையுடன் வருகிறேன்”என்றுரைத்து, வாளையும் நன்கு காணச்
செய்து, “இவ்வுலகத்தில் நிலைபேறு கருதினோர் தம் புகழ் நட்டு உயிர்
மாய்ந்தனர்; பிற செல்வர்கள், வறுமையால் தம்மை இரந்தோர்க்கு ஒன்றும்
கொடாது இறந்து, தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இவ்வுலகத்தோடு
தொடர்பின்றி மறைந்து போயினர்காண்”எனத் தெருட்டினர். இதனை
இப்பாட்டின்கட் காண்க. இதைக்கண்டு நல்லுணர்வு பெற்ற இளங்குமணன்
தன் முன்னோனை நாடி யடைந்து தன் தவற்றுக்கு வருந்தி அவனை
நாட்டில் இருத்தி அவன்வழி நின்று ஒழுகும் நற்செயலால் இன்புற்றான்;
நாடு முற்றும் நலம் பெருகிற்று.

 மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வர்
இன்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற்
5 றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே
 தாடாழ் படுமணி யிரட்டும் பூநுதல்
ஆடியல் யானை பாடுநர்க் கருகாக்
கேடி னல்லிசை வயமான் றோன்றலைப்
பாடி நின்றனெ னாகக் கொன்னே
10பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
 நாடிழந் ததனினு நனியின் னாதென
வாடந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்
ஆடுமலி யுவகையொடு வருவல்
15ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. (165)

     திணை:அது. துறை: பரிசில் விடை. தம்பியால் நாடு
கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன்
தன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து இளங்குமணற்குக் காட்டிப்
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

     உரை:மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் - எப்பொருளும் 
நிலையாத  இவ்வுலகத்தின்கண்  நிலைபெறுதலைக் கருதினோர்; தம் 
புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர் - தம்முடைய புகழைப் பூமியிடத்தே 
நிறுத்தித்  தாங்கள்  இறந்தார்கள்; துன்னரும் சிறப்பின் உயர்ந்த 
செல்வர் - நணுகுதற்கரிய  தலைமையையுடைய மிக்க  செல்வர்; 
இன்மையின் இரப்போர்க்கு ஈயாமையின் வறுமையால்
இரப்போர்க்குக்கொடாமையின்; தொன்மை மாக்களின் தொடர்பு 
அறியலர் - பழைய வண்மையையுடைய மாக்கள் போல்
பின்னும்  தம் பெயரை நிறுத்தி உலகோடு தொடர்ந்து  போதுதலை
யறியார்; தாள் தாழ் படு மணி இரட்டும்  பூ  நுதல்   ஆடியல்
யானை - தாளின்கண்  தாழ்ந்த ஓசையையுடைய   மணி
ஒன்றற்கொன்று  மாறி  யொலிக்கும்   புகர் நுதலையுடைய
வென்றியியன்ற   யானையை;  பாடுநர்க்கு அருகா - பாவலர்க்கு
மிகக்கொடுக்கும்;     கேடில்     நல்லிசை    வயமான்
தோன்றலைப்    பாடி   நின்றனெனாக - அழிவில்லாத  நல்ல
புகழையுடைய    வலிய    குதிரையையுடைய    தலைவனைப்
பாடி நின்றேனாக; கொன்னே - பயனின்றியே;  பாடு  பெறு
பரிசிலன் வாடினன்  பெயர்தல் - பெருமை  பெற்ற  பரிசிலன்
வாடினனாகப் பெயர்தல்; என் நாடு இழந்ததனினும் மிக இன்னாது
என நினைந்து; வாள் தந்தனன் - தலை  எனக்கீய வாளைத்
தந்தான் தனது தலையை எனக்குத் தருவானாக; தன்னில் சிறந்தது
பிறிது ஒன்று இன்மையின் - ஆங்குத்   தருதற்குத் தன்னிற் சிறந்த
பொருள் வேறொன்றில் லாமையின்; ஆடு மலி உவகையொடு
வருவல் - வென்றி மிக்க உவகையான்  வந்தேன்; ஓடாப் பூட்கை நின்
கிழமையோன் கண்டு - புறக்கொடாத மேற்கோளையுடைய நின் 
தமையனைக் கண்டு எ-று.

      வருவ லென்பது கால மயக்கம். மன்னுதல் குறித்தோர் புகழ்
நிறுத்துதலும், புகழ் நிறுத்தாதோர் மன்னராதலும் இவ்வாறன்றோ வென்பது
கருத்தாகக் கொள்க. நின் கிழமையோற் கண்டு வருவலெனவும், வயமான்
தோன்றலைப் பாடிநின்றேனாகப் பரிசிலன் கொன்னே பெயர்தல்
இழந்ததனினும் இன்னாதெனத் தன்னிற் சிறந்தது பிறிதொன்றின்மையின்,
தலை எமக் கீய வாள் தந்தனன்; ஆதலால், ஆடு மலி உவகையின்
வருதல் எனவும் கூட்டுக.

      “கிளைமை யோற்கண்”டென்று பாட மோதுவாரு முளர்.

       விளக்கம்:மன்னா வுலகத் தென்றவிடத்து, மன்னாமைக்குரிய
வினை முதலாகிய எப்பொருளும் என்பது வருவிக்கப்பட்டது. உலகமும்
மன்னாதாயின், புகழ் நிறுவுதல் கூடாதாகும். உலகத்தில் மன்னுவது
புகழொன்று தவிரப் பிற எப்பொருளும் இல்லை யென்பதைத்
திருவள்ளுவரும், “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது
நிற்பதொன்றில்”(குறள்.233) என்றும், பிறரும். “நல்லிசை நிலைஇய
நனந்தலை யுலகத்து”(பதிற்.14) என்றும் கூறுதல் காண்க. இரப்போர்
இரத்தற் கேதுவாகலின், “இன்மையின் இரப்போர்”என்றார். புகழே
உலகத்தோடு தொடர்புற்று அது பொன்றுங்காறும் உடன் தொடர்ந்து
நிற்பதாகலின், புகழ் செய்யாதாரை, “தொடர்பறியலர்”என்றார். புகழ்
பயப்பது ஈத்தலாதலின், “ஈயாமையின் தொடர் பறியலர்”என்றும், ஈத்துப்
புகழ் நிறுவாதார் மனவுணர்விலராகலின், “மாக்க”ளென்றும் குறித்தார்.
பாடு- பெருமை. “நயனுடையானல்கூர்ந்தானாதல் செயு நீர, செய்யா
தமைகலா வாறு”(குறள்.319) என்பதனால், “நாடிழந் ததனினும் நனியின்னா”
தெனக் கருதினான். தன் தலையைக் கொணர்வார்க்குப் பெரும் பொருள்
தருவதாகக்குமண னறிய, அவன் தம்பி நாட்டிற் பறையறைவித்திருந்ததை
யுட்கொண்டு, “தன்னிற் சிறந்தது பிறிதொன்றின்மையின்”என்றும்,
ஈத்தலாகாமைக்குரிய நிலையுண்டாய போழ்தும், தன் பூட்கையிற்
பின்னிடாது தலை கொடுத்த செயலை வற்புறுத்தற்கு, “ஓடாப் பூட்கைக்
கிழமையோன்”என்றும் கூறினார்.