132. வேள் ஆய் அண்டிரன்

     ஆய் அண்டிரனுடைய பெருங்கொடையும் பேரன்பும் பெற்ற
ஏணிச்சேரி முடமோசியார், அவன்பால் சின்னாள் தங்கி அவன்
நற்பண்புகளையும் அவனது நட்புப் பயில்தோறும் நூல் நயம்போல்
இன்பந்தருவதையும் உணர்ந்து, இத்தகைய பெருந்தகையின் பேரன்பினை
முன்பே பெறா தொழிந்த தமது நிலைமைக் கிரங்கி, “இவ்வுலகில்
எத்துணையுயர்ந்தோர்க்கும் முன்னே வைத்து நினைத்தற்குரிய
பெருந்தகையை முன்னே நினையாது ஏனைச் செல்வரை நினைந்து, பின்பே
இவனை நினைந்தேன்; அவரது பொருள் சேராத புகழைப் பாடினேன்;
அவரது பொய்ப்புகழைப் பிறர் பாடக் கேட்டேன்; இவற்றை முறையே செய்த
என் நெஞ்சும், நாவும், செவியும் அழிக” எனத் தம்மை நொந்து கொண்டு,
“வடதிசைக்கண் இமயம் நிற்பதுபோல, இத் தென்றிசைக் கண் இவ்
வாய்குடி நில்லாதாயின் இவ்வுலகம் கீழ்மேலதாகி அழிந்து படும்” என்று
இப் பாட்டிற் குறித்துள்ளார்.               

 முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே
பாழூர்க் கிணற்றிற் றூர்கவென செவியே
நரந்தை நறும்புண் மேய்ந்த கவரி
5குவளைப் பைஞ்சுனை பருகி யயல
 தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை யாஅய்குடி யின்றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே.
(132)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை : முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேன் -
யாவரினும் முன்னே  நினைக்கப்படுமவனைப்  பின்பே நினைந்தேன்
யான்; என் உள்ளம் ஆழ்க - அவ்வாறு நினைந்த குற்றத்தால்
எனதுள்ளம் அமிழ்ந்திப் போவதாக; என் நா போழ்க - அவனை
யன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக; என்
செவி பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க - அவன் புகழன்றிப் பிறர்
புகழைக் கூறக்கேட்ட எனது செவியும் பாழ்பட்ட வூரின்கண் கிணறு
போலத் தூர்வதாக; நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி -
நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்த கவரிமா; குவளைப்
பைஞ்சுனை பருகி - குவளைப் பூவையுடைய பசிய சுனையின் நீரை
நுகர்ந்து; அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் - அதன்
பக்கத்தவாகிய தகரமரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது
பிணையுடனே தங்கும்; வடதிசையது வான் தோய் இமயம் - வட
திசைக்கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலையும்;
தென்திசை ஆய் குடி இன்றாயின் - தென்றிசைக்கண் ஆய் குடியும்
இல்லையாயின்; இம் மலர்தலை யுலகு பிறழ்வது மன் - இந்தப்
பரந்த இடத்தையுடைய உலகம் கீழ் மேலதாகிக் கெடும் எ-று.

    முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேன் என் உள்ளம் ஆழ்தற்குக்
காரணம் கூறினமையான், பிறரைப் புகழ்ந்த நாவெனவும் பிறர் புகழ் கேட்ட
செவியெனவும் ஏனையவற்றிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. அன்றி,
வடதிசை, தேவருலகோ டொத்தலான் இமயத்தால் தாங்க வேண்டுவதில்லை;
தென்றிசைக்கண் ஆய் குடி தாங்கிற்றில்லை யாயின் இவ்வுலகு பிறழும்;
அதனால் இமயத்துக்கு முன்னுள்ளப்படுவோனைப் பின்னுள்ளினேனாதலால்,
எனதுள்ளம் ஆழ்க; எனது நா போழ்க; எனது செவி தூர்வதாக
வென்றதாக்கி உரைப்பினு மமையும்.

    விளக்கம் :இமயத்தின்கண் கவரிமான் நரந்தை நறும்புல் மேய்ந்து
சுனைநீர் பருகித் தகரத் தண்ணிழல் வதியும் என இவர் கூறியது போலக்
குமட்டூர்க் கண்ணனார்,

    “கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி, பரந்திலங்கருவியொடு நரந்தம்
கனவும், ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்” (பதிற். 11) என்பது ஈண்டு
ஒப்புநோக்கத்தக்கது. நரந்தை, நரந்தம் எனவும் வழங்கும்.இஃது ஒருவகைப்
புல். இத்தகைய சிறப்பினையுடைய இமயமுளதாகவும், தென்றிசைக்கண்
ஆய்குடி யின்றாயின், இம்மலர்தலை யுலகு பிறழுமாகலின், இதற்குரிய ஆய்
அண்டிரனை முன்னே நினையாது விட்ட குற்றத்தால் என் உள்ளம் ஆழ்க
எனத் தன்னை நொந்து கொண்டவாறு. நரந்தை நறும்புல் லென்றது உம்மைத்
தொகை. தகரம், ஒருவகை மரம். இனிச் சில பிரதிகளில்,  “இமயத்திற்
கொருதரமாக உலகத்தைத் தாங்கும் ஆய் உளனாகவும், பிறரிசையைக்
கேட்ட செவி தூர்க; கேட்டும் பிறரை நினைத்த உள்ளம் ஆழ்க;
நினைத்துப் பிறரைப்பாடிய நாப் போழ்வதாக வென உள்ளமொழிந்
தனவற்றிற்கும் காரணம் வருவித்துக்கொள்க” என்றோர் உரை
காணப்படுகிறது.