158. குமணன்

     குமணன் கடையெழு வள்ளல்கட்குக் காலத்தாற் பிற்பட்டவன்;
இவன் முதிர   மலையைச் சார்ந்த நாட்டை யாண்ட குறுநில மன்னன்.
இந்நாடு இயல்பாகவே நல்ல வளம் சிறந்தது.

     இம் முதிரமலை பழனிமலைத் தொடர்களுள் உள்ளது. இதன்
அடியில் குமண மங்கலம் என்னுமொரு சிற்றூரு முண்டு. இந்நாடு
உடுமலைப் பேட்டையைத் தன்னகத்தே கொண்டிருந்ததாகும். வள்ளல்
பேகன் காலத்தில்ஆவியர் குடிக்குரியதாயிருந்த நாடு, பிற்காலத்தே
குமணனுக் குரியதாயிற்று. இக் காலநிலையில் வைத்து நோக்கின், பழனித்
தாலுகாவின் தென்மேலைப் பகுதியும் உடுமலைப் பேட்டைத் தாலுகாவின்
தென் கீழ்ப் பகுதியும் குமணனுக்குப் பண்டு உரியவாயிருந்தன என்னலாம்.

     இந்  நாட்டு  வேந்தனாகிய   குமணனுடைய ஆட்சிநலத்தாலும்
தோளாற்றலாலும் நாட்டின் செல்வநிலை வழங்கத் தவா வளமுடையதாக
இருந்தது. செல்வத்துப் பயனே ஈதல் என்பதை நன்கறிந்து, இரவலர்க்
கீதலும்  அதனால் இசையுண்டாக வாழ்தலுமே தன் வாழ்வில் பெறக்கூடிய
ஊதியமாகக்   கருதித்     தன்பால்  வரும்  புலவர்,  பாணர்,   கூத்தர்
முதலாயினார்க்குப் பெருங்கொடை புரிந்து புகழ் மேம்படுவானாயினன். இக்
குமணற்கு இளவல் ஒருவன் இருந்தனன்; அவன் பெயர் இளங் குமணன்
என்பது.  அவற்குத்   தன்  மூத்தோனாகிய  குமணற்  குண்டாகிய  புகழ்
கண்டதும், நெஞ்சில் அழுக்காறுண்டாயிற்று. அதனை வளர்த்துத் தீவினைப்
பயனை விளைவித்தற்குரிய சிற்றினச் சேர்க்கையும் அவற்குளதாயிற்று.
முடிவில் இளங்குமணன் குமணனது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு
அவனைக் கோறற்கும் வழி தேடினன். குமணன் காடு சென்று அதனுள்
உயிர் வாழ்வானாயினன். ஒருகால், பரிசில் வேண்டிவந்த பெருந்தலைச்
சாத்தனார் அவனைக் காட்டிற் கண்டு பாடிப் பரவினர். அவன், அவர்க்குப்
பொருள் வழங்கும் நெறியால் தன் வாளை அவர் கையில் தந்து தன்
தலையைக் கொய்துகொண்டு தன் தம்பிக்குக் காட்டி, வேண்டும் பொருள்
பெற்றுச் செல்லுமாறு வேண்டினன். பேருள்ளம் படைத்த பெருந்தலைச்
சாத்தனார், வாளை மட்டும் கொண்டுசென்று இளங்குமணற்குக் காட்டித்
தன் புலமை நலத்தால் அவற்கு நல்லறிவு கொளுத்தி, அவனைத் தன்
அண்ணன் குமணனை யடைந்து வணங்கிப் பண்டுபோல் இனிது வாழுமாறு
பண்ணினார்.இவனைப் பாடிப் பரிசில் பெறுமாற்றால் இவன் வாழ்க்கை
வரலாற்றில் பங்குகொள்ளும் சான்றோர் இருவர்; அவர்கள்
பெருஞ்சித்திரனாரும் பெருந்தலைச் சாத்தனாரு மாவர்.

     இவருள் பெருஞ்சித்திரனார் குமணன் இனிது வாழ்ந்திருக்குங்கால்
மிக்க வறுமையுற்று வெளிமான் என்னும் வேந்தன்பால் சென்றார்; அக்காலை
அவன் துஞ்சினானாயினும், துஞ்சுங்கால்  தன்  தம்பி   இளவெளி  மானை
யழைத்து, இவர்க்குப் பரிசில் வழங்குக வெனப் பணித்தான்; ஆனால், அவன்
இவர்   வரிசை  நோக்காது  சிறிது  வழங்கினான்.  அதனைக்  கொள்ளாத
பெருஞ்சித்திரனார் குமணனை யடைந்து பாடி, அவன் பகடு கொடுப்பக்
கொண்டு சென்று வெளிமானது ஊர்க் கடிமரத்தில் அதைக் கட்டி விட்டுச்
சென்று இளவெளிமானைக் கண்டு அவற்குத் தாம் பெற்ற பெருவளத்தைத்
தெரிவித்தார். பின்பு அவர், வறுமைத் துயர் ஒருபுறம் வருத்த,
நெடுநாள்பிரிந்திருக்கும் பிரிவுத்துயர் மற்றொருபுறம் வருத்த வருந்தி நிற்கும்
தன் மனைக்கிழத்தியாரை யடைந்து தாம் பெற்ற பெருஞ் செல்வத்தைப்
பெறார்க்கும் பிறர்க்கும் வழங்கித் தாமும் உண்டு இனிதிருந்தார்.

     இப் பாட்டின்கண் பெருஞ்சித்திரனார் குமணன் தந்த
பெருவளத்தைப் பெறுங்கால், அவனை இனிய தமிழால் வாழ்த்துகின்றார்.
இதன்கண் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி யென்ற
வள்ளல்கள் எழுவரையும் எடுத்தோதி, “இவ் வெழுவர்க்குப் பின்னே
இரவலர் இன்மை தீர்த்தற்கு யான் உள்ளேன் என்று மேம்பட்டிருக்கும்
நின்னை யடைந்தேன்; முதிரமலைத் தலைவ, குமண, என்னை ஏற்றுப்
பேணிச் சிறப்பித்த நீ வண்மையாலும், வேற்படை நல்கும் வென்றியாலும்
மேம்படுவாயாக”என வாழ்த்துகின்றார்.

 முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத வண்ண னெடுவரைக்
கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
5கொல்லி யாண்ட வல்வி லோரியும்
 காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும்
ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும்
10 ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை
 அருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப்
பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி
மோசி பாடிய வாயு மார்வமுற்
றுள்ளி வருந ருலைவுநனி தீரந்
15தள்ளா தீயுந் தகைசால் வண்மைக்
 கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்
கெழுவர் மாய்ந்த பின்றை யழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண்
20உள்ளி வந்தனென் யானே விசும்புறக்
 கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினிக் கவினிய பலவி னார்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
25அதிரா யாணர் முதிரத்துக் கிழவ
இவண்விளங்கு சிறப்பி னியறேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகநீ யேந்திய வேலே.    
(158)

     திணை: அது. துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையுமாம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

     உரை: முரசு கடிப்பு இகுப்பவும் - முரசு கடிப்பு அறையவும்;
வால் வளை துவைப்பவும் - வெள்ளிய சங்கு முழங்கவும்; அரசுடன்
பொருத அண்ணல் - வேந்தருடனே பொருத தலைமையையுடைய;
நெடுவரை கறங்கு வெள் ளருவி கல் அலைத்தொழுகும் - நெடிய
மலைக்கண் ஒலிக்கும் வெளிய அருவி கல்லை யுருட்டி யோடும்;
பறம்பின் கோமான் பாரியும் - பறம்பிற்கு வேந்தனாகிய பாரியும்;
பிறங்கு  மிசைக்  கொல்லி ஆண்ட வல்வில்  ஓரியும் - உயர்ந்த
உச்சியையுடைய கொல்லிமலையை ஆண்ட வலிய வில்லையுடைய
ஓரியும்; காரி ஊர்ந்து பேரமர்  கடந்த - காரி  யென்னும்
பெயரையுடைய குதிரையைச்  செலுத்திப் பெரிய பூசலை வென்ற;
மாரி ஈகை - மாரிபோலும் வண்மையையும்; மறப் போர் மலையனும்
- மிக்க  போரினையுமுடைய  மலையனும்; ஊராது ஏந்திய குதிரைக்
கூர் வேல் - செலுத்தப்படாது உயர்ந்த குதிரை யென்னும்
மலையையும் கூரிய  வேலையும்;  கூவிளங்   கண்ணி - கூவிளங்
கண்ணியையும்; கொடும் புண்  எழினியும் - வளைந்த
ஆரத்தையுமுடைய  எழினி அதியமானும்; ஈர்ந்தண் சிலம்பின் இருள்
தூங்கு நளி முழை - மிகக் குளிர்ந்த மலையின்கண் இருள் செறிந்த
முழையினையும்; அருந் திறல்கடவுள்  காக்கும் - மலைத்தற்கரிய
வலியினையுமுடைய தெய்வம் காக்கும்; உயர் சிமைப் பெருங் கல்
நாடன் பேகனும் - உயர்ந்த சிகரங்களையுடைய பெரிய
மலைநாடனாகிய பேகனும்; திருந்து மொழி மோசி பாடிய ஆயும் -
திருந்திய சொல்லையுடைய மோசி யென்னும் புலவனாற் பாடப்பட்ட
ஆயும்; ஆர்வ முற்று உள்ளி வருநர் உலைவு நனி தீர -
ஆசைப்பட்டுத் தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும்  
நீங்க;  தள்ளாது  ஈயும்  தகை  சால் வண்மை - தவிராது
கொடுக்கும் கூறுபாடமைந்த வண்மையினையுடைய; கொள்ளார்
ஓட்டியநள்ளியும்   என - பகைவரைத்  துரத்திய   நள்ளியும்
எனச் சொல்லப்பட்ட; எழுவர் மாய்ந்த பின்றை - எழுவரும் இறந்த
பின்பு; அளி வரப் பாடி வருநரும் பிறரும் கூடி - கண்டார்க்கு
இரக்கம் வரப் பாடி வருவாரும் பிறரும் கூடி; இரந்தோர் அற்றம்
தீர்க்கு என - இரந்தோரது துன்பத்தைத் தீர்க்கக் கடவேன் யான்
என்று நீ இருத்தலால்; விரைந்து உள்ளி வந்தனென் யான் -
விரைந்து இவ்விடத்தே பரிசில் பெற நினைந்து வந்தேன் யான்;
விசும்புறக்கழை வளர்  சிலம்பின் - வானத்தின்கண்ணே பொருந்த
மூங்கில் வளரும் மலையின்கண்; வழையொடு நீடி ஆசினிக் கவினிய
- சுரபுன்னையோடு ஓங்கி ஆசினியொடு அழகு பெற்ற; பலவின்
ஆர்வுற்று - பலாவின்கண் ஆசைப்பட்டு; முட்புற முது கனி பெற்ற
கடுவன் - முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப் பழத்தைப்
பெற்ற கடுவன்; துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும் - பஞ்சு
போலும் மயிரை யுடைத்தாகிய தலையினையுடைய மந்தியைக் கையால்
குறி செய்து அழைக்கும்; அதிரா யாணர் முதிரத்துக் கிழவ -
தளராத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ;
இவண் விளங்கு சிறப்பின் - உலக முழுவதிலும் விளங்குகின்ற
தலைமையினையும்; இயல் தேர்க் குமண - இயற்றப்பட்ட
தேரினையுமுடைய குமணனே; இசை மேந் தோன்றிய வண்மையொடு -
புகழ் மேம்பட்ட வண்மையுடனே; பகை மேம்படுக நீ ஏந்திய
வேல் - பகையிடத்து உயர்க நீ எடுக்கப்பட்ட வேல் எ-று.

     ஆசினி யொடுங் கவினிய வென ஒடு விரித்துரைக்கப்பட்டது.
ஆசினி யென்பது ஒரு மரம்; ஈரப் பலா வென்பாரு முளர். ஆர்வுற்றுப்
பயிரும் என்க. பாடி வருநரும் பிறரும் கூடி இறந்தோர் அற்றம் தீர்க்க
வேண்டுமெனக் கருதியென் றுரைப்பாரு முளர்.

     விளக்கம்: முரசும் சங்கும் முழங்கப் போந்து தமிழ்வேந்தர்
(மூவேந்தரும் போந்து) பாரியொடு பொருதனர்; “முரசு முழங்கு தானை
மூவர்”(பெரும்.33) என்பவாகலின், முரசும் சங்கு முடைய அரசென்றது
மூவேந்தரையாயிற்று. திருமுடிக்காரி யூர்ந்த குதிரைக்குக் காரி யென்றும்,
ஓரியின் குதிரைக்கு ஓரி யென்றும் பெயர்; இதனை, “காரிக் குதிரைக்
காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியும்”(சிறுபாண்.110-1)
என்பதனாலறிக. இப்பாட்டு “மலையன்”என்றும், சிறுபாணாற்றுப்படை,
“காரி”யென்றும் கூறலின், இம் மலையன், மலையமான் திருமுடிக்காரி
யென்பவனாயிற்று. அதியமான் நெடுமான் அஞ்சியின் தந்தை பெயர் எழினி
யென்பது. அதனாற்றான், அஞ்சி, தன் மகனுக்கும் எழினி யெனப் பெயர்
வைத்தான். தந்தை பெயரைத் தன் மகனுக்கு வைப்பது தமிழர் மரபு. இம்
மரபுபற்றியே தந்தையை நோக்கத் தன் மகனைத் தன் தந்தைக்குப் பெயரன்
என்பது வழக்காயிற்று. தந்தை பெயரையும் உடன்கூட்டி “எழினி
யதியமான்”என்றலும் தமிழியல்பாதலால், இங்கே “எழினி”யென்றார்.
“அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி”என இவனே கூறப்படுமாறு
காண்க. “அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன்,
பேகன்”என்றலின், பேகனது பொதினி (பழனி, ஆவிநன் குடி)யில் முருகன்
கோயில் கொண்டிருந்தா னெனக் குறிப்பாய் உணரலாம். திருந்து மொழி
மோசி யென்றது, உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரை. இவர் ஆய்
அண்டிரனைப் பாடியுள்ள பாட்டுக்கள் பலவற்றையும் முன்பே 127ஆம்
பாட்டு முதலியவற்றால் அறியலாம். தன்னை நோக்கி வந்த வன்பரணருடைய
“உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி, வல்வில் வேட்டத்திற் றான்
கொன்ற மான் கணத்தின் ஊனை நல்கி, பெறுதற்கரிய வீறுசால் நன்கலம்,
கடகமொடு     ”(புறம்.150)   ஈத்ததை   நினைவிற்     கொண்டு,
“உள்ளிவருநர் உலைவுநனி தீரத், தள்ளா தீயும் தகைசால் வண்மை”
யையுடைய  நள்ளி யென்றார். ஆர்வம்,  கடைக்குறைந்து, “ஆர்வு”என
வந்தது.  மலையன்   காரியூர்ந்து   ஓரியொடு  செய்த   போரைப்
“பேரமர்”என்றார்;  அவன் ஓரியைக் கொன்று அவனது கொல்லி
மலையைச் சேரலர்க் கீந்த   போர்   அதுவாகும்; அதனை, “முள்ளூர்
மன்னன்  கழல்தொடிக் காரி, செல்லாநல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக்
கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின்  பயங்கெழு  
கொல்லி”(அகம்.209)   எனச்   சான்றோர்  கூறுப. வழையொடு நீடி
யென்றாற்  போல,  ஆசினியொடு   கவினிய   என
எடுத்தோதாமையின், “ஒடுவிரித்  துரைக்கப்பட்ட”   தென்றார்.
“என்றும் எனவும்   ஒடுவுந் தோன்றி,  ஒன்று  வழியுடைய வெண்ணினுட்
பிரிந்தே”(தொல்.சொல்.இடை,46) என்பது ஒடுவை விரித்தற்கு இலக்கணம்.