53. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை

     மாந்தரன் என்பது இச் சேரமானது இயற்பெயர். இவன் இரும்பொறைக்
குடியினனாதலால், இவ்வாறு கூறப்படுகின்றான். “நிறையருந்தானை வெல்
போர் மாந்தரம் பொறையன்” (அகம்.142) என மாந்தரர் சான்றோரால்
குறிக்கப்படுவது காணலாம். இவன் கபிலராற் சிறப்பிக்கப்பட்ட செல்வக்
கடுங்கோ வாழியாதன் முதலியசேரமன்னர் கட்குக் காலத்தாற் பிற்பட்டவன்.
கபிலர் முதலிய நல்லிசைப் புலவர் பாட்டுகளிற் பேரீடுபா டுடையவன்.
ஒருகாலத்தே இவற்கும் இராய சூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர்
உண்டாயிற்று. தேர்வண்மலைய னென்பான் சோழற்குத் துணைவனாய் வந்து,
இவனை வேறற்கு உதவினான். அக்காலத்தே, இச் சேரமான் தன்னைத்
தொலைவித்த தேர்வண் மலையனது போராண்மையை வியந்து, “வல்வேல்
மலையனல்ல னாயின், நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கென”
நினைந்தானென வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடுகின்றார்.
இச்சேரமான் ஆட்சிக்குட்பட்ட விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்
முற்றுகை யிட்டு வருத்த முறுவித்தாராக, இவன் யானைப்படையும்
குதிரைப்படையும் சிறப்புறக் கொண்டு சென்று பகைவரை வெருட்டி
விளங்கிலரை உய்வித்தனன். இச்சிறப்பு நிகழ்ச்சி இப் பாட்டின்கண்
குறிக்கப்படுகிறது.

     கிடங்கில், விளங்கில் என்பன போலப் பொருந்தில் என்பது ஓர் ஊர்.
இளங்கீரன் என்பது இப் புலவரது பெயர். இதனால் இவர் பொருந்தி
விளங்கீரனார் எனப்படுகின்றார். இவர், அழகிய பாட்டுக்களைப் பாடும்
நலஞ் சிறந்தவர். பொருள்வயிற் பிரிந்தேகும் ஒரு தலை மகன் நெஞ்சினை
அவன் தன் மனைவிபாற் சென்ற காதல் தடுப்ப, அவன் அதனைத்
தெருட்டிச் சென்றதும், சென்றவன் வினை முடித்துப் பொருள் நிரம்பக்
கொண்டு வருங்கால், அக்காத லுணர்வு தோன்றி, அவன் காதலியை
நினைப்பிக்க, “குறைவினை முடித்த நிறைவின்னியக்கம்” எனத் தான்
திரும்பி வரும் வருகையைப் புகழ்ந்து பேசியதும், தலைவி அவன் வரவு
குறித்து ஆழி யிழைத்திருப்பதும் அவன் வரவினை அவள்
நினைக்குந்தோறும் பல்லியிசைப்பதும், பிறவும் இவரால் அழகொழுகப்
பாடப்படுகின்றன. இவர், இச்சேரமான் திருமுன் சென்று பாடியவழி, அவன்,
செறுத்த செய்யுள் செய்யும் சிறப்புடைய “கபிலன் இன்று உளனாயின் நன்று”
எனச் செய்யுளின்பச் சொல்லாட்டிடை விதந்து கூறினன். அந்நிலையில் இவர்
இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
5. களங்கொள் யானைக் கடுமான் பொறைய
விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
கைம்முற் றலநின் புகழே யென்றும்

ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
10.வாழே மென்றலு மரிதே தாழாது
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயி னன்றும னென்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
15.பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே. (53)

     திணையும் துறையு மவை. சேரமான் மாந்தரஞ்சேர
லிரும்பொறையைப் பொருந்திலிளங்கீரனார் பாடியது.

     உரை: முதிர் வார் இப்பி முத்த வார் மணல் - முற்றி நீண்ட
சிப்பிக் கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்கு பட்ட மணற்கண்ணே;
கதிர் விடுமணியின் கண்பொரு மாடத்து - ஒளி விடுகின்ற
மணிகளாற் கண்ணைப் பொருகின்ற மாடத்திடத்து; இலங்கு வளை
மகளிர் தெற்றியாடும் - விளங்கிய வளையையுடைய மகளிர்
வேதிகைக்கண்ணே விளையாடும்; விளங்குசீர் விளங்கில் -
விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்கு; விழுமம் கொன்ற -
பகைவரான் வந்த இடும்பையைத் தீர்த்த; களங் கொள் யானைக்
கடுமான் பொறைய - போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட
யானையையும் விரைந்த குதிரையையுமுடைய பொறைய; விரிப்பின்
அகலும் - விரித்துச் சொல்லிற் பரக்கும்; தொகுப்பின் எஞ்சும் -
தொகுத்துச் சொல்லிற் பொருள் ஒழிவுபடு மாகலான்; மம்மர்
நெஞ்சத்து எம்மனோர்க்கு - மயக்கம் பொருந்திய நெஞ்சையுடைய
எங்களுக்கு; ஒரு தலை கைம்முற்றல நின் புகழ் என்றும் - ஒரு
தலையாக முடியா நினது புகழ் எந்நாளும்; ஒளியோர் பிறந்த இம்
மலர்தலை யுலகத்து - கல்வியால் விளக்கமுடையோர் பிறந்த இப்
பெரிய இடத்தையுடைய வுலகத்தின் கண்ணே; வாழேம் என்றலும்
அரிது - வாழே மென் றிருத்தலும் கூடாது; தாழாது - விரைய;
செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு
புகழ்க் கபிலன் - பல பொருள்களையும் அடக்கிய செய்யுளைச்
செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும் விளங்கிய
புகழையுமுடைய கபிலன்; இன்று உளனாயின் நன்று மன் என்ற -
இன்று உளனாகப் பெறின் நன்று அது பெற்றிலேன் என்று
சொல்லிய; நின் ஆடு கொள்வரிசைக்கு ஒப்ப - நினது வென்றி
கொண்ட சிறப்பிற்குப் பொருந்த; பாடுவன்மன் - பாடுவேன்;
பகைவரைக் கடப்பு - நீ பகைவரை வென்ற வெற்றியை எ-று.

     மாடத்து மகளிர் மணலிடத்துத் தெற்றிக்கண்ணாடும் விளங்கில் என்க.
தெற்றி யென்பதனைக் கை கோத்தாடும் குரவை யென்பாரு முளர்.
பொறைய, கபிலன் இன்றுளனாயின் நன்று மன் னென்ற நின் ஆடு கொள்.
வரிசைக் கொப்பப் பகைவரைப் கடப்பை யான் தாழாது பாடுவேன்;
நின்புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான் எமக்குக்
கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை யுலகத்து வாழே மென்றலும்
அரிது என மாறிக் கூட்டுக. தாழாது செய்யுட் செய் செந்நா வென
வியைப்பினு மமையும். ஒளியோ ரென்றது, கபிலன் முதலாயினோரை. வாழே
மென்றதும் அரிதென்ற கருத்து, பாடாதிருத்தலும் அரிதென்றதாக்கி, யாமும்
வல்லபடி பாடிப் போதுவே மென்றதாகக் கொள்க. நன்றுமன் என்பது
கழிவின் கண் வந்தது. பாடுவன்மன்னா லென்றவழி மன்னும் ஆலும்
அசைநிலை.

     பாடுவன்மன் னென்பதனை அல்லீற்றுத் தனித்தன்மை வினையாக்கி
நின் வரிசைக் கொப்ப, நின் பகைவரைக் கடப்பைப் பாடுவேன்; அதனால்
விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும், மம்மர் நெஞ்சத்து எமக்கு நின்
புகழ் கைம்முற்றல வென அவன் புகழை மேம்படுத்துக் கூறியவாறாக
வுரைப்பினு மமையும். இப்பொருட்குப் பாடுவன்மன் னென்றதனை
ஒழியிசையாகக் கொள்க. சிறந்த செய்யுள் என்றும், செய்யுட் செய்த செந்நா
என்றும் பாடம்.

     விளக்கம்: தெற்றிக்கண்ணிருந்து விளையாடல் மகளிர்
இயல்பாதலின், “தெற்றி யாடும்” என்றார்; “குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்” (புறம்:36) என்று பிறரும்
கூறுதல் காண்க. விரிப்பின் அகலுதலாலும், தொகுப்பின் எஞ்சுதலானும்
இவ்விரண்டினும் வேறு நெறி யில்லாமையாலும் பாடுவோர்க்கு மயக்க
முண்டாதலின், “மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க்” கென்றார். கல்வி
கேள்விகளால் உயர்ந்தோர்க் குளதாகும் புகழ் காரணமாகப் பிறக்கும்
இசை, ஈண்டு ஒளியெனப் படுகிறது. ஒத்தல், ஈண்டு உவமப்
பொருளதாகாது “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”
(தொல். உவமை:8) என்றாற் போல அமைதி குறித்து வந்தது. சிறிதும்
“தாழாது கபிலன் இன்றுளனாயின் நன்றுமன் என்ற” என இயையும்.
தாழா தென்னும் வினை யெச்சத்தைச் செய் யென்பதனோடு முடித்தலும்
அமையும் என்றற்குத் “தாழாது........அமையும்” என்றார். வாழ்தல்,
பாடற்குரியோரைப் பாடி வாழ்தலாதலின், “வாழே மென்றலும் அரிதென்ற
கருத்து......கொள்க” என்றார்.